tamilnadu

img

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோயின் அறிகுறியே. இரத்தத்தில் பில்லுரூபின் என்ற ஒரு பொருள் உள்ளது. மஞ்சள் நிறமுள்ள இந்த பில்லுரூபின் இரத்தத்தில் இருக்க வேண்டிய அளவை விட அதிகம் ஆவதுதான் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

இப்பொருள் அதிகம் ஆவதற்குக் காரணம் என்ன?

இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் சிதைந்து பல வகையாக மாறுதல் அடைகின்றன. ஒரு ஆரோக்கியமான மனிதனின் வாழ்க்கையில் இது சாதாரணமாக நடைபெறுகிறது. ஆனால் இந்தச் சிதைவு அதிக அளவில் நிகழ்ந்தால் அது மஞ்சள் காமாலை எனப்படுகிறது. இது மஞ்சள் காமாலையில் ஒரு வகை. மற்றொன்று ‘வைரஸ்’ என்னும் கிருமிகள் தண்ணீர் மூலம் கல்லீரலைத் தாக்கும் பொழுது ஏற்படுகின்றது.

மூன்றாவது வகை பித்த நீர்ப்பையில் உண்டாகும் கல், பித்த நீர்ப்பையில் சென்று அடைத்துக் கொள்வதாலோ அல்லது வேறு பல காரணங்களால் அப்பையில் ஏற்படும் அடைப்புக் காரணமாகவோ உண்டாகின்றன. ஆகவே மஞ்சள் காமாலை ஒரே காரணத்தினால் மட்டும் ஏறபடுவது இல்லை. மூன்று வகைக் காரணங்களினால் இந்த நோய் ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த மூன்று விதமான மஞ்சள் காமாலை நோய்களில் மக்களை அதிகம் தாக்குவது ‘வைரஸ்’ கிருமிகளால் உண்டாகும், தொற்றுக் கல்லீரல் அழற்சி நோயாகும். இதனை (infective Hepatitis) என்று ஆங்கிலத்தில் கூறுவர். சாதாரணமாக எல்லோரும் மஞ்சள் காமாலை என்று கூறுவது இதைத்தான். இந்த நோய் சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும் தன்மையுடையவது. உலகில் எல்லாப் பகுதிகளிலும் பரவலாக இருக்கும். இந்நோய், நீர் மற்றும் உணவு ஆகியவை மூலம் பரவுகிறது. இந்நோய் வாய்ப்பட்டவர்கள் கழிவுப்பொருட்கள் சரியான முறையில் அப்புறப்படுத்தப்படாமல் ஆறு, குளம், குட்டைகளின் நீருடன் சேர்வதாலும், அசுத்தமான உணவுப் பொருட்களை உட்கொள்வதாலும் இந்நோய் பரவுகிறது. இந்நோய் சுகாதார உணர்வு அதிகமாக உள்ள மேலை நாடுகளிலும் அதிகமாக உள்ளது என்பது வியப்பைத் தருவதாக உள்ளது.

இந்நோய்வாய்ப்பட்டவர்களின் இரத்தத்தைத் தவறுதலாக மற்றவர்களுக்குச் செலுத்திவிட்டாலோ அல்லது அவர்களுக்காக உபயோகப்படுத்தப்பட்ட ஊசியை அப்படியே மீண்டும் உபயோகப்படுத்தினாலோ இந்நோய் வரக்கூடும். பல சமயங்களில் இந்நோய் தானாகவே குணமாகிவிடும். ஆனால் சில சமயங்களில் இதுவே கடுமையாகி மரணத்தை விளைவிப்பதும் உண்டு.

இந்நோயின் ஆரம்ப அறிகுறிகளாவன: -

பசியின்மை, வயிற்றுப்போக்கு, கடுமையான தலைவலி, மேல் வயிற்றின் வலப்புறத்தில் ஒரு சங்கட உணர்ச்சி, சளி, காய்ச்சல் போன்றவற்றோடு தோலும், கண்ணும் மெதுவாக மஞ்சளாகும். ‘கல்லீரலும்’ மண்ணீரலும் வீக்கமடையும். இந்நோய் தீவிரமடைந்தால் தோலில் பித்தநீர் உப்பு அதிகமாகி அரிப்பு உண்டாகும். சிறுநீர் மஞ்சளாகும். மலம் மஞ்சளாக இல்லாமல் சற்று வெளுத்துக் காணப்படும்.

சாதாரணமாக நான்கு அல்லது ஐந்து வாரங்களில் இந்நோய் சரியாகிவிடும். இந்த நாட்களுக்குள் சரியாகாது அதிகமானால் இந்நோய் உடலில் மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது என்பது பொருள். இந்நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் நேரடி மருத்துவம் இல்லை.

இந்நோய்க் கண்டவர் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள்: படுக்கையில் பூரண ஓய்வுடன் இருக்க வேண்டும். எளிய உணவுகளான பழம், காய்கறிகள், குளுகோஸ், கஞ்சி ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். கொழுப்புச் சத்துக்கள் உள்ள நெய், எண்ணெய், மாமிசம், பருப்பு முதலியவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. மேலும் புகையிலை, மதுபானம் ஆகியவற்றை எந்த உருவிலும் உபயோகப்படுத்தக்கூடாது, வைட்டமின் ‘பி’ மாத்திரைகளை உட்கொள்ளலாம். நாட்டுப்புறங்களில் கீழாநெல்லி வேரையும் இலையையும் அரைத்துக் கொடுப்பது உண்டு. இதுவே இப்பொழுது மாத்திரைகளாகக் கிடைக்கிறது, இந்த மருத்துவத்தில் நோய் குணமாகாமல் அதிகமாகிக் கொண்டே வந்தால் தீவிர சிகிச்சைக்காக உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது அவசியம்.

நோய்த் தடுப்பு முறையான இந்நோய் பரவியுள்ள பகுதிகளில் தண்ணீர் மற்றும் உணவுப் பொருள்களைச் சுட வைத்து உண்ண வேண்டும். மேலும் இந்நோய்வாய்ப்பட்டவர்களின் கழிவுப் பொருட்களைச் சரியான முறையில் அப்புறப்படுத்தத் தடுப்பு ஊசி தற்பொழுது பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது.

அதிக அளவில் சிவப்பு இரத்த அணுக்கள் சிதைவதால் உண்டாகும் மஞ்சள் காமாலை

மனித இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் எல்லாம் ஒரே அளவுள்ளவையாகும். சில சமயங்களில் பிறவிக்கோளாறு காரணமாக, இந்த இரத்த அணுக்கள் இயற்கையாக எல்லோருக்கும் இருப்பதுபோல் இல்லாமல் மாறுபட்டு வெவ்வேறு உருவங்களில் காணப்படும். உடல் இயக்க ஒழுக்கு காரணமாக இந்த உருவ வேறுபாடு இரத்த அணுக்கள் சிதையும் பொழுது ‘பில்லுரூபின்’ அதிக உற்பத்தியாகி இரத்தத்தில் கலந்து மஞ்சள் காமாலை உண்டாகிறது.

இந்த மஞ்சள் காமாலை, பிற மருந்துகளை உட்கொள்வதாலும், மலேரியா போன்ற தொற்று நோய்கள் முற்றிவிடுவதாலும் குறிப்பிட்ட குரூப் இரத்தம் உள்ள மனிதர்களுக்கு வேறு குரூப் இரத்தத்தைச் செலுத்திவிடுவதாலும் உண்டாகும்.

இந்நோய் கண்டவர்களுக்கு இரத்தச் சோகை, வாந்தி சோர்வு, மண்ணீரல் வீக்கம் போன்றவை உண்டாகும். மேலும் மற்ற வகை மஞ்சள் காமாலைகளைப் போலன்றி, சிறுநீர் மலம் ஆகியவற்றின் நிறத்தில் வேறுபாடு தெரியும். அதாவது சிறுநீர், கழிக்கும்போது வெண்மையாக இருந்து சிறிது நேரத்தில் கருமஞ்சள் நிறமாக மாறும். மலம் சாதாரண நிறத்தைவிட அதிக அளவில் மஞ்சளாக ஆரஞ்சு நிறமாகக் கூட இருக்கும். உடலில் அரிப்பு இருக்காது.

இந்த வகை மஞ்சள் காமாலை நோய், வைரஸ் கிருமிகளால் உண்டாகும் கல்லீரல் அழற்சி, மஞ்சள் காமாலையைவிடக் கொடுமையானது. மண்ணீரலில் அறுவை சிகிச்சை செய்வதன் மூலமும் இரத்தம் செலுத்தும் போதும் குறிப்பிட்ட பிரிவு இரத்தம் உள்ளவர்களுக்குக் கவனமாக அதே இரத்த பிரிவைச் செலுத்துவதன் மூலமும் மலேரியா வந்தால் அசட்டை செய்யாது சிகிச்சை செய்து கொள்வதன் மூலமும் இக்கொடிய நோய் வராது ஓரளவு தடுக்கலாம். கல்லீரலுக்கு கேடு விளைவிக்கும் விஷ மருந்துகளைப் பற்றிக் கவனமாக இருப்பதும் அவசியம்.

இந்த அணுக்களின் சிதைவினால் உண்டாகும் மஞ்சள் காமாலையைப் பற்றி நன்கு அறிந்து கொள்வது நல்லது. நமது இரத்தத்தில் ஏ, பி,ஒ, ஏபி என்ற நான்கு பிரிவுகள் உள்ளன. மனிதர்கள் இதில் ஏதாவது ஒரு பிரிவினராக இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவு இரத்தம் உள்ளவர்களுக்கு இரத்தம் செலுத்தும் பொழுது அவர்களுக்கு உள்ள இரத்தத்துடன் அதே பிரிவு இரத்தத்தைத்தான் செலுத்த வேண்டும். உடலுக்குச் சேராத, மாறுபட்ட பிரிவு இரத்தத்தைச் செலுத்தினால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும்.

இந்தப் பிரிவுகளைத் தவிர இரத்தத்தில் ஆர்.எச். என்ற ஓர் பிரிவும் உண்டு. இது பாசிடிவ் ஆகவோ நெகடிவ் ஆகவோ இருக்கலாம். கணவனுக்கு இரத்தம் ஆர்.எச். பாசிடிவ் ஆக இருந்தால் மனைவிக்கும் இரத்தம் ஆர்.எச். பாசிடிவ் ஆக இருக்க வேண்டும். இவ்வாறு ஒரே வகை ஆர்.எச். இரத்தம் இல்லாமல் கணவனுக்கும், மனைவிக்கும் மாறுபட்ட ஆர்.எச்.குரூப் இரத்தம் இருந்தால் அதிலும் மனைவி ஆர்.எச். நெகடிவ்வாக இருந்தால் பிறக்கும் முதல் குழந்தையை பாதிக்காவிட்டாலும் இரண்டாவது குழந்தை பாதிக்கப்பட்டு, மஞ்சள் காமாலை வந்து, பிறகு அதற்கு மரணம் நேரிடலாம்.

இந்த வகை மஞ்சள் காமாலையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஒவ்வொரு தாய் தந்தையரும் தங்கள் இரத்தம் எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்று அறிந்து கொள்வது அவசியம். இவ்வாறு அறிந்து கொள்வது பிறக்கும் முதல் குழந்தையைக் காப்பாற்ற உதவுவதுடன் அதற்கு அடுத்துப் பிறக்கப்போகும் குழந்தையையும் காப்பாற்ற மருத்துவருக்கு உதவியாக இருக்கும்.

பித்த நீர்ப்பாதை தடைப்படுவதால் உண்டாகும் மஞ்சள் காமாலை

இந்த வகை நோய் பித்தப்பையில் உண்டாகும் கல், பித்த நீர்க்குழாயை அடைத்துக் கொள்வதால் ஏற்படும். மேலும், பித்த நீர்ப்பாதையில் கட்டி, அடைப்பு, புற்றுநோய் போன்றவை உண்டாவதாலும் வரலாம். இந்நோய் வாய்ப்பட்டவர்க்கு மஞ்சள் காமாலை நோய் முற்றிக்கொண்டே வருவது ஓர் அறிகுறி. இதைத்தவிர குளிர் காய்ச்சல், முகுதுவலி, வயிற்றுவலி, பசியின்மை, இரத்தச் சோகை, முதலியவையும் வரும். மலம் வெள்ளைக் களிமண்ணைப்போல் வெளிர்நிறத்தில் இருக்கும். சிறுநீர் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மருத்துவர்கள் இரத்தம், மலம், பரிசோதனை செய்வதன் மூலமும், எக்ஸ்ரே படம் எடுத்துப் பார்ப்பதன் மூலமும், இந்த வகை மஞ்சள்காமாலையை அறிந்து கொள்வார்கள். இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் ஏற்றது. இந்த வகை மஞ்சள் காமாலை நோய் மேல்நாடுகளில் அதிகம் உண்டு. தமிழ்நாட்டில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் குறைவு.

நஞ்சுப் பொருள்களால் உண்டாகும் மஞ்சள் காமாலை

தெரிந்தோதெரியாமலோ நச்சு மருந்துகளைச் சாப்பிடுவதாலும், உடலுக்கு ஒவ்வாத மருந்துகளைச் சாப்பிடுவதாலும் இந்நோய் உண்டாகலாம். மருந்து சாப்பிடுவதில் கவனமாக இருப்பதே இதற்கு ஏற்ற தடுப்பு முறை. இன்றைய மருத்துவம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் மஞ்சள் காமாலை வந்தால் கவலைப்படத் தேவையில்லை. முதலில் நாம் செய்ய வேண்டியது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதேயாகும். ஒரு வகை மஞ்சள் காமாலைக்குச் செய்யும் மருத்துவம் மற்றொரு வகைக்குப் பயன்படாது. ஆகவே சிகிச்சை பலனளிக்கவில்லை என்று நாம் குறையிட்டுக் கொள்வது சரியல்ல. நமது நாட்டில் ‘வைரஸ்’ நோயினால் உண்டாகும் மஞ்சள் காமாலையை மட்டுமே மஞ்சள் காமாலை என்று நினைத்து நாட்டுப்புறங்களில் எல்லா வகைகளுக்கும் ஒரேவித சிகிச்சை செய்கிறார்கள், இதன் காரணமாகவே மரணம் நிகழ்கிறது, ஆகவே மஞ்சள் காமாலை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். உரிய சிகிச்சை மருத்துவரிடமே பெற வேண்டும். தாங்களாகவே சில மருத்துவங்களைச் செய்து கொள்வதோ, பத்தியங்கள் இருப்பதோ, சிகிச்சை முறை ஆகாது. ‘வெளுத்ததெல்லாம் பாலல்ல’ அதுபோல் கண்ணோ அல்லது சிறுநீரோ மஞ்சள் நிறமாக இருந்துவிட்டால் அது ஒரே வகையான மஞ்சள் காமாலையை தான் உண்டு பண்ணும் என்று எண்ணும் அறியாமையை நம் மனத்திலிருந்து நீக்கி, மஞ்சள் காமாலையை வேறுபடுத்தி அறிந்து கவனமாகச் சிகிச்சை பெற வேண்டும்.

;