tamilnadu

img

குரங்குக்கு இறுதி மரியாதை செய்த கிராம மக்கள்

சிதம்பரம், ஜன. 1- கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உயிரிழந்த குரங்கிற்கு கிராம மக்கள் இறுதி மரியாதை செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது அகரபுத்தூர் ஊராட்சிக்குட்  பட்ட கோவிந்தராஜன்பேட்டை கிராமம். இக்கிராமத்தில் கடந்த ஐந்து வருடங்களாக குரங்கு ஒன்று மக்களுடன் நன்கு பழகி வந்தது. அந்த குரங்கிற்கு ‘பாலா’ என்றும் பெயர் வைத்து அதனுடன் அடிக்கடி செல்பி எடுத்தும் மகிழ்ந்து வந்தனர். மேலும் அந்த குரங்கிற்கு கிராம மக்கள் தினமும் விதவிதமான உணவுகளையும் கொடுத்து வந்தனர்.  இதனால் அந்த குரங்கு அக்கிராமத்திலேயே சுற்றி அப்பகுதி மக்களுடன் பழகி வந்தது.  சில நாட்களுக்கு முன்பு அந்த குரங்கு அப்பகுதியில்  செல்லும் மின்கம்பியில் தாவிச் சென்றபோது மின்சாரம் தாக்கியது. இதில் குரங்கின் கை,கால்  பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அந்த குரங்கை காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளித்து கிராம மக்கள் பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில், எதிர்பாராமல் அந்த குரங்கு  உயிரிழந்தது. இதனால் அக்கிராமமக்கள் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்தனர். பலர் கண்ணீர் விட்டும் அழுதனர். பின்னர், குரங்கின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்த கிராம மக்கள், அந்த குரங்கை கிராமத்தின் சாலையோரமாக புதைத்தனர்.