districts

புதுக்குளம் ஏரியை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னார்வ அமைப்புடன் களமிறங்கிய கிராம மக்கள்

தஞ்சாவூர், ஜூன் 25 -  ஆவணம் பெரியநாயகிபுரம் புதுக்குளத்தை மீட்டெடுக்கும் பணியில் கிராம மக்கள்-கைஃபா தன்னார்வ அமைப்பு ஈடுபட்டு வருகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆவணம் - பெரியநாயகிபுரம் கிராமத்தில் புதுக்குளம் என்ற ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கியது. 62 ஏக்கர் நிலப்பரப்பும், 3.2 கி.மீட்டர் சுற்றளவு கொண்ட புதுக்குளம் ஏரி பல ஆண்டுகளாகவே தூர்வாரப்படாததால், மண் மேடிட்ட நிலையில், கருவேலம் மரங்கள் வளர்ந்தும், முட்புதர்கள் மண்டியும் காடு போல் காணப்பட்டது.  தரை எது, கரை எது என தெரியாத வகையில் விளையாட்டு திடல் போல் காணப்பட்ட புதுக்குளம் ஏரியில், ஒரு சொட்டு நீர்கூட தேங்காத நிலை ஏற்பட்டது. இதனால், ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு இப்பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டனர்.  மேலும் ஏரியில் நீர் இல்லாததால், இப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. கிராமத்தின் உயிர்நாடியாக விளங்கிய இந்த ஏரியை மீட்டெடுப்பதற்காக கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த செலவில், கைஃபா என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் களப்பணியில் இறங்கினர்.  இதையடுத்து கடந்த 25 நாட்களாக இரண்டு ஜேசிபி மற்றும் ஒரு செயின் டோசர் இயந்திரத்தின் உதவியுடன் முட்புதர்களை எல்லாம் அப்புறப்படுத்தி, ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு இந்த ஏரியில் பாசனத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  கிராம மக்களின் கூட்டு முயற்சிக்கு நிச்சயம் இது வெற்றிப் படிக்கட்டாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.