tamilnadu

img

கடலூரில் வருமான வரித்துறை சோதனை - 450 கோடி சொத்துகள் சிக்கின

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வருமானவரித்துறை 2 நாட்களில் செய்யப்பட்ட சோதனையில் 450 கோடி மதிப்பிலான சொத்துகள் சிக்கியுள்ளது.

கடலூர் பண்ருட்டி பகுதியில் உள்ள விவசாயி சுகிசந்திரன் வீட்டில் வருமான வரித்துறை கடந்த 2 நாட்களாக நடத்திய சோதனையில் ரூ.450 கோடி மதிப்பிலான சொத்துகள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுகிசந்திரன். இவரது மகன் ராம்பிரசாத் மும்பையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் பெருமளவு சொத்துகளை வாங்கியுள்ளார் சுகிசந்திரன். இது அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில்தான் திடீரென 9 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சுகி சந்திரன் வீட்டில் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினார்கள். மும்பையில் இருந்தும் அதிகாரிகள் குழு இந்த சோதனையில் இணைந்து கொண்டனர்.  இது தொடர்பாக வருமான வரித்துறை வட்டாரங்களில் கூறுகையில், ராம்பிரசாத், மென்பொருள் நிறுவனம் மூலம் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு சிக்காமல் அவர் தலைமறைவாகிவிட்டார். ஆகையால் அவரது தந்தை சுகிசந்திரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறினார்கள்.

இந்த சோதனையில் சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தலைமறைவான ராம்பிரசாத் சர்ச்சைக்குரிய தமிழக ஒப்பந்ததாரர் ஒருவருக்கு பினாமி என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
 

;