ஈரானுக்கு எதிராக கூடுதல் உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட 8 துறைகளில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை, கடந்த 3-ஆம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் கொலை செய்தது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமானி அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது. மேலும், சுலைமானியை கொன்ற அமெரிக்க ராணுவம் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தீவிரவாதிகள் என்று அறிவித்தது. இந்த சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. மேலும், பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள அதிக பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகள் பதற்றமான நிலையில் காணப்படுகின்றது.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின், கட்டுமானம், உற்பத்தி, ஜவுளி, சுரங்கம், அலுமினியம், தாமிரம், இரும்பு மற்றும் எஃகு ஆகிய 8 தொழில் துறைகளை இலக்காகக் கொண்டு இந்த கூடுதல் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரான் நாட்டை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு அமெரிக்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது.