ராஜஸ்தானில் நடைபெறும் ‘கௌ மகாக்கும்ப்’ கண்காட்சியில், மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை பசுவின் சிறுநீர் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து குணமாக்கும் என்ற விளம்பரம் பல்வேறு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் “கௌ மகாக்கும்ப்" என்ற பெயரில் பசுமாடுகளுக்கான உலக உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மலச்சிக்கல் முதல் ஆஸ்துமா, புற்றுநோய் வரை பசுவின் சிறுநீர் குணப்படுத்தும் என்று பசு சிறுநீரில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை விற்கின்றனர். அதேபோல், பசுவின் சாணத்தை பயன்படுத்தி வீடுகளுக்கு பூசப்படும் 'வேதிக் பிளாஸ்டர்', கோடைக்காலத்தில் அறையின் வெப்பநிலையை குறைக்கும் என்றும், பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட வண்ணங்கள் (paints) சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ராஜஸ்தானில் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள், அமைச்சர்கள் முன்னாள் ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று விளமபரப்படுத்தி வருகின்றனர்.
பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தில் மருத்துவ குணங்கள் குறித்த ஆராய்ச்சி முன்மொழிவுகளை இந்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கடந்த 2020-ஆம் ஆண்டில், 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வலியுறுத்தினர்.
சமீபத்தில், IVRI எனப்படும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பசுக்களின் கோமியத்தை குடிக்க வேண்டாம். பசுக்கள், காளைகள் மற்றும் எருமைகளின் சிறுநீரினை ஆய்வு செய்ததில் 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை குடித்தால் கடுமையான வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற உபாதைகள் ஏற்படும் என்று தெரிவித்திருந்தது