states

img

பாஜகவை தகர்க்க வரும் வலுவான அலை!

நாடாளுமன்ற தேர்தலில் ஐந்தாவது கட்டம் முடிவடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆளும்  பாஜகவிற்கும் ஒரு சிக்கலான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக பதவி ஏற்க விரும்பும் பிரதமர் மோடி மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறார். இது அவர் ஆரம்பத்தில் வெற்றி பெறுவோம் என்ற குறிப்பிட்ட எண்ணிக்கையான 400 தொகுதிகளை கணிசமாக குறைக்கிறது.பாஜகவிற்கு லிட்மஸ் தாள் பரிசோதனையாக மாற்றியுள்ளது..

சோர்வடைந்த வாக்காளர்கள்

வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ள சோர்வு மிக  முக்கியக் காரணம். மோடியின் முந்தைய பிரச்சாரங்களில் மக்களுக்கு ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் தற்போது மிகவும் குறைந்துவிட்டது. முந்தைய கட்டங்களின் வாக்குப்பதிவுடன் ஒப்பிடு கையில் தற்போது அது குறைந்து வருகிறது. பாஜகவின் சித்தாந்த  பீடமான ஆர்எஸ்எஸ், வாக்காளர்களின் உணர்வை தட்டி எழுப்பும் வேலையிலும் இறங்கியுள்ளது. ஆனால் இதிலும் சவால்கள் கணிசமாகவே ஏற்பட்டுள்ளன. பாஜகவை பொறுத்தவரை அதன் அடித்தளத்தை வலிமைப்படுத்த முடியவில்லை.  அதுவே இன்று அடிப்படைக் கவலையாக மாறி இருக்கிறது. கடந்த  காலத்தில் மோடியை அதிகாரத்தில் அமர்த்து வதற்கு என்ன உத்திகளை கையாண்டதோ அதே வேலையில் மீண்டும் இறங்கியுள்ளது.

மதவெறி,  தேசிய வெறி புறக்கணிப்பு!
பொருளாதார நெருக்கடி குறித்து தான் வாக்காளர்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள். ஆனால் பாஜகவோ தேசியவாத வெறியையும் மதவாத பிரச்சனைகளையும் முன்னிறுத்துகிறது. வேலையில்லா திண்டாட்டம், வேளாண்மை நெருக்கடி, விவசாயத் தொழிலாளர்களின் துயரங்கள், ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் பொருளாதாரக் கொள்கைகள்  ஆகியவை உருவாக்கும் அதிருப்திகள் எதிர்க்கட்சிகளுக்கு நல்லதொரு பிரச்சாரக் களத்தை ஏற்படுத்தி யுள்ளன. மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா போன்ற மாநிலங்களில் பொருளாதார அதிருப்தி வெளிப்படையாகவே தெரிகிறது.வேலை கிடைக்காத இளைஞர்களின் எதிர்ப்பும் ஏற்றுமதி தடை குறித்த விவசாயிகளின் எதிர்ப்பும் ஊடகங்களை பயன்படுத்தி பிரதமர் உருவாக்கும் பிம்பத்தை அடித்து உடைக்கிறது. அவருடைய பிரச்சாரத்தில் மக்கள் வெளிப்படுத்தும் அதிருப்தி இந்த உண்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. காங்கிரஸின் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் முந்தைய தேர்தலை காட்டிலும் ஐக்கிய முன்னணி கோட்பாட்டை பயன்படுத்தி மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்ய முனைகின்றன. அவருடைய பாதயாத்திரைகள் மூலமும் பிராந்திய கட்சிகளுடன் அமைத்துள்ள கூட்டணி மூலமும் எதிர்க்கட்சிகள் இன்று உற்சாகத்தை பெற்றுள்ளன.சுய நலன்களின் அவசரமான கூட்டணி என இந்தியா கூட்டணி நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்பார்த்ததை விட மிகவும் வலிமையானது எனவும் தற்போது அது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

மோடியின் மேலாதிக்கம் 

பாஜகவின் உள்பூசல்கள் அதற்கு கூடுதல்  தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள் மோடியின் மேலாதிக்கம் மற்ற தலைவர்களை ஓரம் கட்டுகிறது. விரிவடைந்த பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டையாகவும் அது மாறி உள்ளது. பல  முக்கிய தலைவர்கள் தங்களின் பிராந்தியங் களுக்கு வெளியே செல்வாக்கு செலுத்த முடிய வில்லை என்றும் தோன்றுகிறது.மோடியையே எல்லா மாநிலங்களிலும் பிரச்சாரத்திற்கு நம்பி இருப்பது வாக்காளர்களை அந்நியப்படுத்தும் ஆபத்துக்கும் இட்டுச் செல்கிறது. நாடு முழுவதும் பசுவதையை தடை செய்யும் உ.பி. முதல்வரின் முன்மொழிவு போன்ற தவறான நடவடிக்கைகள் உத்தரப்பிரதேச கிராமங்களில் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுடன் இதுவும் இணைந்து முக்கியமான இடங்களில் பாஜகவுக்கு எதிரான உணர்வை வாக்காளர்களி டையே தூண்டிவிட்டுள்ளது. பாஜகவிற்கு ஆதரவு  தளமாக விளங்கும் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் இரண்டிலும் அது இன்று தற்காப்பு நிலைக்கு இறங்கி உள்ளது. தன்னுடைய நிலையை பாதுகாக்கவே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது .

எழுந்து வரும் வலுவான அலை

தங்களுக்கு ஆதரவு அலை வீசும் என்று கூறிய  அதன் ஆரம்ப கணிப்புகளின் தாக்கம் எதுவும் புலப்படவில்லை.  மக்கள் வாழ்வோடு தொடர்பில்லாத பல பிரச்சனைகளை கிளப்பி விட்டதாலும் பயத்திலும் பீதியிலும் உளறிக்  கொட்டியதாலும்  பாஜக வை  மூழ்கடிக்கக்  கூடிய  ஒரு வலுவான அலை  உருவாகி வருகிறது.

- தமிழில்: கடலூர் சுகுமாரன்
ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை தலையங்கம் (22.05.24)


 


 

;