கர்நாடக மாநிலம் பந்திப்பூரில், தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற பசுவராஜ் என்பவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் கெக்கனஹல்லா பகுதியில் உள்ள சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்த யானை ஒன்று தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அவ்வழியே சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஓரமாக நிறுத்தப்பட்டது. இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த பசுவராஜ், தனது வாகனத்தில் இருந்து இறங்கி, செல்ஃபி எடுக்க யானையின் அருகில் செல்ல முயன்றார். அப்போது, யானை அவரை தாக்கியதால் பசுவராஜ் காயமடைந்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து, வன விலங்கை தொந்தரவு செய்த காரணத்திற்காக பசுவராஜ்-க்கு கர்நாடக வனத்துறையினர் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளனர்..