states

img

மாநில அந்தஸ்து விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறார்கள்: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி,ஜன.20- புதுச்சேரி மாநில அந்தஸ்து விவ காரத்தில் முதல்வர் ரங்கசாமிக்கும், பாஜகவும் மக்களை ஏமாற்றுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்  களை சந்தித்த அவர் கூறியதாவது:- மாநில அந்தஸ்து கோரி, புதுச்சேரி வந்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ விடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை மனு தந்துள்ளது சரியானது தான். ஆனால், மாநில அந்தஸ்து தர ஆலோசனை தரு மாறு நீதிபதிகளிடம் ஆலோசனை தெரிவிக்குமாறு முதல்வர் கூறியுள்ளது புரியாத புதிர். நீதிபதி கள் ஆலோசனை சொல்பவர்கள் அல்ல. சட்ட வல்லுநர்களைதான் அவர் ஆலோசிக்க வேண்டும். எங்கு எந்த கோரிக்கை வைப்பது என்பது தெரியாமல் முதல்வர் தள்ளாடுகிறார். அதே நேரத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவையில்லை என பாஜக மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர், மனு தரும்போது பாஜக தரப்பு தேவையில்லை என்பது முரண்பாடானதாக உள்ளது. மாநில அந்தஸ்து கிடைத்தால் ஒன்றிய அரசு நிதி குறையும் என்பது தவறான கருத்து. அத்துடன் ஒன்றிய அரசு தற்போது ரூ.1721 கோடிதான் தருகிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் அல்ல. 2022-23 நிதி யாண்டில் புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு ரூ.10 ஆயிரம் கோடி தந்ததாக பாஜகவால் நிருபிக்க முடியுமா? உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்வதற்கு பத்மஸ்ரீ விருதை பாஜகவுக்கு தரலாம். உண்மையில் ஆட்சியிலுள்ள ரங்கசாமியும், என்ஆர் காங்கிரஸூம், பாஜகவும் மாநில அந்தஸ்து விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகின்றனர். புதுச்சேரி அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தற்போது பொதுப் பணித்துறையில் ஒப்பந்தம் எடுப்போர் 13 விழுக்காடு கமிசன் கொடுக்க வேண்டும் என்ற சூழலே நிலவுகிறது. ஏற்கனவே கலால், உள்ளாட்சித் துறை, காவல் துறை ஆகியவற்றின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கு முதல்வர் வாய்திறக்கவே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.