states

img

கேரளத்தின் புரட்சிப் பெண் கவுரியம்மா விடைபெற்றார்......

திருவனந்தபுரம்:
கேரளத்தின் புரட்சிகர கதாநாயகியும், கம்யூனிச இயக்கத்தின் முன்னணி தலைவருமான கே.ஆர்.கவுரியம்மா (102) செவ்வாயன்று காலமானார். வயது முதிர்வு தொடர்பான நோய்கள் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
கவுரியம்மாவின் வாழ்க்கை நவீன கேரள வரலாற்றுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்தது. அவரது வாழ்க்கை அசாதாரண துணிச்சல், தியாகம், அர்ப்பணிப்பு, சேவை ஆகியவற்றின் கலவையாகும். 1957 இல், ஈஎம்எஸ் தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தார். 1957 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் சேர்த்தலாவிலும், 1965 முதல் 1977 வரையிலும், 1980 முதல் 2006 வரை அரூரிலிருந்தும் கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கே.ஆர். கவுரியம்மா ஒரு வழக்கறிஞராக பயிற்சி செய்யும் போது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சிறந்த சொற்பொழிவாளராகவும் அமைப்பாளராகவும் இருந்த அவருக்கு பி.கிருஷ்ண பிள்ளை உறுப்பினர் தகுதி வழங்கினார். இஎம்எஸ், ஏகேஜி, நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன் போன்ற தலைவர்களுடன், கட்சியை கட்டியெழுப்புவதில் கவுரியம்மாவும் முக்கிய பங்கு வகித்தார். 1957 இல் ஈ.எம்.எஸ் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, அவரிடம் வருவாய்த் துறை ஒப்படைக்கப்பட்டது. கேரள வரலாற்றில் பொன் எழுத்துக்களில் எழுதப்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான தலைமையையும் அவர் வகித்தார்.

முதல் அமைச்சரவையில் பதவியேற்ற தனது அனுபவத்தைப் பற்றி அவர் இவ்வாறு எழுதினார்: “ நாங்கள் 1957 ஏப்ரல் 5 அன்று ஆட்சிக்கு வந்தோம். அது ஒரு உலக நிகழ்வாக அமைந்தது. விடுதலைக்குப்பின் பத்தாம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு என்ன பிரச்சனைகள் இருந்தன என்பது தெரியாது. முதலில் ஒரு கோப்பை எப்படிப் பார்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை. தொழில்நுட்பத்தை விட முக்கியமானது அதில் உள்ள மக்களின் துயரம். அந்த துயரம், வலி, துன்பம் என்ன என்பதை அவர்களது போராட்டங்களின் மூலம் அறிந்திருந்த நான், அவற்றுக்கு தீர்வைக் கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டினேன். பின்னர் கோப்புகளைப் படிப்பது எனக்கு கடினமாக இல்லை.

விவசாயிகள் சங்கத் தலைவர்கள் இ.கோபாலகிருஷ்ண மேனன், பந்தளம் பி.ஆர் மாதவன் பிள்ளை மற்றும் சி.எச்.கணாரன் ஆகியோருடனும் கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடினேன். துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தேன். இதன் விளைவாக, ஒரு யோசனை உருவானது. இது வார்த்தைகளாக, பிரிவுகளாக, சட்ட வடிவம் பெற்றது ஏப்ரல் 10 ஆம் தேதி. ஏப்ரல் 11 இல் அது மசோதாவானது. விவசாய சீர்திருத்த சட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் அது. முடியாட்சிக்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் பெருத்த அடியாக அமைந்தது நில வெளியேற்றத் தடை மாசோதா. இது என் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாள்.” என்று எழுதினார்.

கவுரியம்மா 1967, 80, 87 ஆம் ஆண்டுகளில் அமைந்த அமைச்சரவைகளில் உறுப்பினராக இருந்தார். அமைச்சராக அவர் மிகவும் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றினார். ஆரம்ப கால கட்சி ஊழியர்களில் முன்னணியில் இருந்த அவர் 1994 இல் சிபிஎம்- ஐ விட்டு வெளியேறினார். பின்னர் ஜேஎஸ்எஸ் என்கிற கட்சியை அமைத்து யுடிஎப் இல் இணைந்தார். இறுதியாக, யுடிஎப் உடன் எந்த இணக்கமும் இல்லாமல், அந்த முன்னணியை விட்டு வெளியேறினார்.

வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக…
ஒடுக்கட்டப்பட்டவர்களுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த ஒரு துணிச்சலான பெண் தலைவர் கே.ஆர்.கவுரியம்மா. பெண்கள் இன்னும் சுரண்டப்படுவதாகவும் அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் கருதினார். கவுரியம்மா இனி வரும் தலைமுறைகளுக்கும் ஒரு கலங்கரை விளக்கம். அவர் எப்போதும் சாதாரண மக்களுடன் நின்றார்.11 ஆவது கேரள சட்டப்பேரவையில் மூத்த தலைவராக கவுரியம்மா இருந்தார். அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்கிற வரலாற்றுப் பெருமையும் கவுரியம்மா என்கிற பெயருக்கு உள்ளது. மிக மூத்த சட்டமன்ற உறுப்பினர், மிக நீண்டகால சட்டமன்ற உறுப்பினர், மிகவும் மூத்த அமைச்சர் போன்ற பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். கவுரியம்மாவின் சுயசரிதை கே.ஆர் கவுரியம்மா என்ற தலைப்பில் 2010 இல் வெளியிடப்பட்டது. இவரது சுயசரிதை 2011 கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றது.

இரண்டாவது ஈஎம்எஸ் அமைச்சரவையில், வருவாய், உணவு, பொது விநியோகம், வணிக வரி, சமூக பாதுகாப்பு மற்றும் சட்டம் ஆகிய துறைகள் அவரது பொறுப்பில் இருந்தது. அப்போது நிலச் சீர்திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டது. 35 லட்சம் நிலமற்றோர், 5 லட்சம் குத்தகைதாரர்கள் நில உரிமையாளர்களாக மாறினர். ஈ.கே.நாயனார் தலைமையில் அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவையில் வேளாண்மை மற்றும் சமூக நலத் துறைகளை கவுரியம்மா கையாண்டார்.
சேர்த்தலா தாலுகாவில் உள்ள அந்தகாரனழி கிராமத்தில் கவுரியம்மா 1919 ஜூலை 14 இல், கே.ஏ.ராமன் - பார்வதியம்மா ஆகியோரின் மகளாக, பிறந்தார். திரூர் மற்றும் சேர்த்தலாவில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ பட்டமும், எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். 1957 ஆம் ஆண்டில், அவர் இடம்பெற்றிருந்த அமைச்சரவையில் தொழிலாளர் அமைச்சராக இருந்த டி.வி.தாமஸை மணந்தார். 1964 இல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, தாமஸ் சிபிஐ க்கு சென்றார். கவுரியம்மா சிபிஎம்மில் உறுதியாக நின்றார்.

                            ****************

செங்கொடி போர்த்தி இறுதிப் பயணம்

கேரளத்தின் நாயகி கே.ஆர்.கவுரியம்மாவுக்கு கேரளம் மரியாதை செலுத்தியது. முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம் மாநில செயலாளர் ஏ.விஜ யராகவன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.திருவனந்தபுரம் அய்யங்காளி அரங்கில் செங்கொடி போர்த்தப்பட்ட கவுரியம்மாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் டி.வி.தாமஸ் உள்ளிட்ட தியாகிகள் துயில் கொள்ளும் ஆலப்புழா வலியசுடுகாட்டில் மாலை 6 மணிக்கு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவிட் நெறிமுறைகளுக்கு உட்பட்டு 300 பேர் வரை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.