states

img

கேரள நடிகை பாலியல் வழக்கு - 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு

கேரளத்தில், நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்தும், பல்சர் சுனி உட்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளத்தில் நடிகை ஒருவர், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது காரை நிறுத்தி, வலுக்கட்டாயமாக ஒரு கும்பல் காருக்குள் வைத்து அவரை பாலியல் வங்கொடுமைக்கு உள்ளாக்கியது. இதை தொடர்ந்து நடிகையின் புகாரின் பேரில், நடிகையின் முன்னாள் ஓட்டுநரான பல்சர் சுனி உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில், சிறையில் இருந்தவாறு மலையாள நடிகர் திலீப்புக்கு, பல்சர் சுனில் எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
இதை அடுத்து, வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. நடிகர் திலீப், இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் விசாரணை நடத்திய எஸ்ஐடி, 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடிகர் திலீப்பை கைது செய்தது. இந்த வழக்கில் நடிகர் திலீப்பை 8வது குற்றவாளியாக சேர்த்து எஸ்ஐடி புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கைதான விஷ்ணு உள்ளிட்ட இருவர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறி வாக்குமூலம் அளித்தனர். ஏறத்தாழ 8 ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் போதிய ஆதாரம் இல்லை என நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்தும், பல்சர் சுனி உட்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.