states

img

கேரளம்: இரு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம்!

கேரளத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 
கேரளத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் கேரள அரசு மற்றும் அம்மாநில ஆளுநருக்கு இடையே பிரச்சனை நீடித்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 
அப்போது, இரு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்து பெயர்ப் பட்டியலை இறுதி செய்ய உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்ஷு தூலியா தலைமையில் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி அமைத்தது. இதை தொடர்ந்து இந்த நியமனத்தில் முதல்வர் தலையீடு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணை கடந்த நவம்பர் 28-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக நீதிமன்ற அமைத்த நீதிபதி சஞ்சய் துலியா தலைமையிலான தேடல் குழுவின் அறிக்கையை பரிசீலித்து, ஆளுநர் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், கேரள முதலமைச்சர் பரிந்துரைத்த அதே வரிசையில் துணை வேந்தர்களை டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் நியமிக்கவும் உத்தரவிட்டது. 
இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, 2 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தரை நியமிக்க தலா ஒருவரின் பெயரை டிச.18 ஆம் தேதி சீலிட்ட கவரில் பரிந்துரைத்து சமர்ப்பிக்கக் கோரி ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய தூலியா குழுவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சூழலில், கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் பரிந்துரைத்த சாஜி கோபிநாத் துணை வேந்தராகவும், ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தேர்வு செய்த சீசா தாமஸ் துணை வேந்தராகவும் நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.