மோடியின் அடுத்த கடப்பாரை 100 நாள் வேலைத் திட்டத்தை இடிப்பதற்காக!
இடதுசாரிகள் அளித்த வலுவான ஆதரவோடும் அழுத்தத்தோடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த போது கொண்டு வரப்பட்டதுதான் ‘கிராமப்புற வேலை உறுதி அளிப்புச் சட்டம்’ எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். இந்திய கிராமப்புற பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஏழை, எளிய மக்கள் பிழைப்புக்காகவும் வேலைக்காகவும் நகர்ப்புறங்களை நோக்கிப் பெரும் அளவில் இடம் பெயர்வதைத் தடுக்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. அன்றாடம் காய்ச்சிகளாய் வாழும் அடித்தட்டு மக்கள் குறைந்தபட்சம் தங்களது வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கான ஓர் ஏற்பாடாக இது அமைந்தது. “அரசு வேலை கொடுக்க வேண்டும் அல்லது வேலை கேட்பவருக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும்” என்பதுதான் இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம். திட்டமிட்ட சீர்குலைப்பும் நிதி முடக்கமும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, இந்தத் திட்டத்தை அடியோடு குழிதோண்டிப் புதைப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி வேலை செய்பவர்களுக்கான ஒட்டுமொத்த கூலியையும் ஒன்றிய அரசாங்கம் வழங்க வேண்டும். அதேசமயத்தில் அதை மேற்பார்வை செய்கிறவர்கள் மற்றும் இதர தளவாடச் சாமான்களுக்கான செலவை மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். இதன்படி ஆரம்பத்தில் மாநில அரசின் பங்கு வெறும் 10 சதவீதமாக மட்டுமே இருந்தது. பிறகு அதை திட்டமிட்டே 25 சதவீதம் என்று உயர்த்தினார்கள். இதற்கிடையே ‘டிஜிட்டல் சோதனை’ என்று சொல்லி தொழில்நுட்பக் காரணங்களைச் சொல்லி 27 லட்சத்திற்கும் அதிகமான உழைக்கும் மக்களை இந்தத் திட்டத்திலிருந்து ஈவு இரக்கமின்றி வெளியேற்றினார்கள். அதன்பிறகு மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதியை உரிய காலத்தில் கொடுக்காமல் பல மாதங்கள் இழுத்தடித்து அந்தத் திட்டத்தையே ஒட்டுமொத்தமாகச் சீர்குலைத்தார்கள். உதாரணமாக, 100 நாள் வேலைக்கான கூலியை ஒன்றிய அரசு மாதக் கணக்கில் பாக்கி வைக்கின்ற போது, களத்தில் வேலை செய்த மக்கள் மாநில அரசாங்கத்தோடும் உள்ளூர் நிர்வாகத்தோடும் தான் போராட வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் மாநில அரசுகள், அடுத்த நிதி வரும் வரை வேலையைச் சுருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படு கிறார்கள். தவறு செய்வது தானடித்த மூப்பாக நிதிப்பகிர்வை நிறுத்தி வைக்கும் ஒன்றிய அரசாங்கமாக இருக்கையில், அப்பாவி மக்களின் கோபம் மட்டும் மாநில அரசுகள் மீது திரும்புமாறு ஒரு தந்திரமான சூழலை மோடி அரசு உருவாக்கியுள்ளது. நிலுவைத் தொகையும் நிர்வாகச் சிக்கல்களும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு வர வேண்டிய ரூ. 1056 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதாவது, அப்போதைய நிலையில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கான நிதி கொடுக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. அதன்பிறகு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்கள் கடந்த பிறகுதான் மே மாதத்தில் ரூ. 2999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. அதாவது, 200 நாட்களுக்கு முன்னர் பார்த்த வேலைக்கு 200 நாள் கழித்துத்தான் சம்பளம் கொடுக்கும் முறையில் திட்டமிட்டே பாக்கி வைத்து ஏழைகளின் வயிற்றில் அடித்தார்கள். நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு ஆண்டு இத்திட்டத்திற்கான நிதியை மோடி அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. 2020-2021 ஆம் ஆண்டிலிருந்து பட்ஜெட்டில் உத்தேச மதிப்பீடு மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியைத் தொடர்ச்சியாகப் பார்த்தால் இந்த வஞ்சனை புரியும். திருத்தப்பட்ட மதிப்பீடு 2020-2021ல் ரூ. 1,11,500 கோடியிலிருந்து 2024-25ல் ரூ. 86,000 கோடியாகச் சரிந்து விட்டது. அதாவது, கடந்த ஐந்தாண்டுகளில் ரூ. 25,500 கோடி – கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு நிதியை வெட்டிச் சுருக்கிவிட்டார்கள். இதேபோன்று விடுவிக்கப்பட்ட நிதியும் 23 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. பயனாளிகள் குறைப்பும் புள்ளிவிவர மோசடியும் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உள்ள 5.78 கோடி பயனாளிகளில் 10 சதவீதம் பேர் கூட 100 நாட்கள் முழுமையாக வேலையைப் பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. 2024-25 நிதியாண்டில் மொத்த பயனாளிகளில் வெறும் 7.04 சதவீதம் பேர் மட்டுமே 100 நாட்களும் பணி செய்துள்ளனர். சராசரி வேலை நாட்கள் என்பது 50 நாட்கள் என்கிற அளவிலேயே இருக்கிறது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட இரண்டு நாட்கள் குறைவாகும். இப்படி நிதி ஒதுக்கீடு, பயனாளிகள் எண்ணிக்கை, வேலை நாட்கள் என அனைத்தையும் படிப்படியாகக் குறைத்து இந்தத் திட்டத்திற்கு இப்போது முற்றிலுமாக ‘மூடு விழா’ செய்ய பாஜக அரசு முனைந்துள்ளது. ஏற்கனவே, இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற பயனாளிகளுக்கு வேலை என்கிற நிலையிலிருந்து, ஒன்றிய அரசால் அறிவிக்கை செய்யப்படும் பகுதிகளில் மட்டுமே இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதிய நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, ஒன்றிய அரசு நினைத்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது மாநிலத்தை முற்றிலுமாகப் புறக்கணித்திட முடியும். இதுவரை உள்ள சட்டத்தில் என்ன பணிகளைச் செய்வது என்பதை உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப கிராமப் பஞ்சாயத்துகளே தீர்மானிக்கும் அதிகாரம் இருந்தது. இனி வரும் காலங்களில் ஒன்றிய அரசு ஒரு குறிப்பிட்ட நிதியை மட்டும் கொடுத்துவிட்டு, அதற்கு மேல் திட்டங்களைச் செய்ய வேண்டுமென்றால் முழு நிதியையும் மாநில அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று மாற்றிவிட்டார்கள். மாநிலங்களை வஞ்சிக்கும் குரூரத் தந்திரம் அதேபோன்று, ஒருவர் வேலை கேட்டு விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் வேலை தர வேண்டும் என்பது சட்டம். ஆனால், புதிய சட்டத்தின்படி மாநில அரசாங்கம் விவசாய வேலைகள் அதிகம் இருக்கும் 60 நாட்களை முன்கூட்டியே அறிவித்துவிட்டால், அந்த நாட்களில் இந்தத் திட்டம் அமலில் இருக் காது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் செய்யும் வேலைகளுக்கு 60 சதவீதத்தை மட்டுமே ஒன்றிய அரசு கொடுக்கும்; மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசாங்கங்கள் தான் சுமக்க வேண்டும். மக்கள் சொத்தான பொ துத்துறை வங்கிகளில் பெரும் முதலாளிகள் வாங்கிய சுமார் ரூ. 18 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்த இந்த அரசாங்கம் தான், ஏழை எளிய மக்களின் உணவுக்கு ஆதாரமாக இருந்த இந்தத் திட்டத்தைத் துடைத்தெறிய முனைந்திருக்கிறது. இது மாநில அரசுகளைக் கடும் நிதி நெருக் கடிக்குள் தள்ளி, தன் மக்களுக்கான சேவைக ளுக்காக ஒன்றிய அரசாங்கத்திடம் மண்டியிட வைக்கும் ஒரு குரூரமான தந்திரமாகும். பட்டி யலின மற்றும் பழங்குடியின மாணவர்க ளுக்கான கல்வி உதவித் தொகையில் ஒன்றிய அரசின் பங்களிப்பை 75 சதவீதத்திலிருந்து 60 ஆகக் குறைத்ததும், பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தனது பங்கைக் குறைத்து மாநில அரசின் சுமையை 4 மடங்கு உயர்த்தியதும் இதே தந்திரத்தின் ஒரு பகுதிதான். 2017-18ல் 566 கோடியாக இருந்த பயிர் காப்பீட்டுக்கான மாநில அரசின் பங்கு, இன்று 2359 கோடி யாக அதிகரித்துள்ளது. பெயரையும் பெருமையையும் அழிக்கும் குரூரம் இறுதியாக, இத்திட்டத்தின் பெயரையும் அவர்கள் மாற்றியிருக்கிறார்கள். அடிப்படை யான எந்தப் பிரச்சனையையும் தீர்த்து வைக்க முடியாத கையாலாகாதத் தனத்தினால், திட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டி புரட்சி நடத்துவதாகப் பினாத்துகிறார்கள். நேரு, இந்திரா காந்தி பெயர்களை அழித்து வந்த இந்தக் கூட்டம், இப்போது மகாத்மா காந்தி யின் பெயரையும் நீக்கியிருக்கிறது. தேசப் பிதா காந்தியையே ஒழித்துக் கட்டிய கூட்டத் திற்கு, பெயரையும் அவரது கனவுத் திட்டத்தை யும் சிதைப்பது ஒன்றும் கடினமான காரி யமல்ல. 125 நாட்கள் வேலை, 15 நாட்களில் ஊதியம் என்பதெல்லாம் வெறும் மோசடித் தம்பட்டங்கள். அல்லற்பட்டு ஆற்றாது துயருறும் பாட்டாளி மக்களின் குறைந்தபட்ச பாதுகாப்பையும் அகற்றிவிடத் துடிக்கும் மோடி அரசின் இந்தச் செயல் கடும் கண்ட னத்திற்குரியது. பெரும் போராட்டம் வெடிக்கட்டும்!
