articles

img

மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகளே! மலைக்கோட்டை நகரில் சங்கமிப்போம்!

மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகளே! மலைக்கோட்டை நகரில் சங்கமிப்போம்!

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) தனது 15 ஆண்டுகால வீரஞ் செறிந்த போராட்டப் பயணத்தில் மற்றுமொரு வரலாற்று மைல்கல்லை எட்டுகிறது. சங்கத்தின் 5-ஆவது மாநில மாநாடு வரும் டிசம்பர் 19, 20, 21 தேதிகளில் மலைக்கோட்டை நகரான திருச்சியில், மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.  டிசம்பர் 19 அன்று நடைபெறும் பிரம்மாண்ட எழுச்சிப் பேரணி மற்றும் பொது மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 25,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று விண்ணதிர உரிமை முழக்கங்களை எழுப்ப  உள்ளனர். அதனைத் தொடர்ந்து இரண்டு  நாட்கள் நடைபெறும் பிரதிநிதிகள் மாநாட்டில், 550 பிரதிநிதிகள் பங்கேற்று, மாற்றுத்திற னாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான அடுத்தகட்ட செயல்பாடுகள் மற்றும் போராட்ட உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்க உள்ளனர்.   ஐ.நா. சாசனமும்  இந்திய அரசின் மௌனமும்  2006 டிசம்பர் 13-இல் மாற்றுத்திறனாளி களின் உரிமைகள் மற்றும்

கண்ணியத்தை நிலைநாட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரைவு சாச னத்தைத் தாக்கல் செய்தது. 2007 மார்ச் 30-இல் நடைபெற்ற ஐ.நா. மாநாட்டில் (UNCRPD), உலகம் முழுவதிலும் இருந்து 164 நாடு களின் பிரதிநிதிகள் பங்கேற்று அதில் கையெழுத்திட்டனர். இதில் 7-ஆவது நாடாக இந்தியா கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாசனம் ஒவ்வொரு நாடும் மாற்றுத்திற னாளிகளுக்காகப் புதிய சட்டங்களை இயற்ற வலியுறுத்தியது. எனினும், 2010 ஆம் ஆண்டு வரை இந்திய ஒன்றிய அரசு இதற்கான எந்தவொரு சிறு முயற்சியையும் எடுக்காமல் மௌனம் சாதித்து வந்தது. சர்வதேச அளவில் வாக்குறுதி அளித்துவிட்டு, உள்நாட்டில் மாற்றுத் திறனாளிகளைப் புறக்கணித்த அரசின் போக்கை மாற்ற ஒரு பலமான சக்தி தேவைப் பட்டது.  ஒரு போராட்ட  இயக்கத்தின் உதயம்  மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக் காகச் சமரசமின்றிப் போராடக்கூடிய ஒரு வலு வான இயக்கத்தின் அவசியத்தை உணர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் தே.இலட்சுமணன், எஸ்.நம்புராஜன், பி.ராதாகிருஷ்ணன் ஆகி யோரின் முன்முயற்சியால் 2010 பிப்ரவரி 6 அன்று சென்னையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) தோற்றுவிக்கப்பட்டது

. இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் சிதறிக் கிடந்த பல்வேறு மாநிலச் சங்கங்களை ஒன்றிணைத்து ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை (National Platform for the Rights of Disabled (NPRD)) என்ற தேசியப் பேரியக்கம் கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டது. அன்று விதைக்கப்பட்ட அந்த விதைதான் இன்று பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வுரிமை க்கான ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.  நாடாளுமன்றத்தை அதிரவைத்த முதல் போராட்டம்  சங்கம் தொடங்கப்பட்ட இரண்டே மாதத்தில், 2010 ஏப்ரல் 20 அன்று புது தில்லி நாடாளுமன்றம் முன்பு பிரம்மாண்ட தர்ணா நடைபெற்றது. ஐ.நா. சாசனப்படி புதிய சட்டம், மாதம் ரூ.3,000 உதவித்தொகை, நாடு முழு வதும் செல்லத்தக்க தனித்துவ அடையாள அட்டை (UDID), தடையற்ற சூழல் மற்றும் 6% இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து நாடு முழுவதிலும் இருந்து 6,000-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதில் மாற்றுத் திறனாளிகள் சங்கம் (TARATDAC) சார்பில் தமிழ்நாட்டிலிருந்து 800 தோழர்கள் பங்கேற்று தில்லியின் வீதிகளை அதி ரச் செய்தனர். இப்போராட்ட த்தின் அழுத்தத்தால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், புதிய சட்டம் கொண்டு வருவதாக உறுதியளித்தார்.  அதன்பின்னர் 2010 முதல் 2016 வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தில்லியில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் ரயில் மறியல் உட்பட ஒரே ஆண்டில் மட்டும் 5 முக்கிய இயக்கங்களை நாம்  நடத்தினோம். இந்த இடைவிடாத போர்க்குண மிக்க செயல்பாடுகளின் அறுவடையாகவே,

2016 டிசம்பர் 2-இல் ‘ஊனமுற்றோர் உரிமை களுக்கான புதிய சட்டம்’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது நமது இயக்கத்தின் விடாமுயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி யாகும்.  100 நாள் வேலைத் திட்டத்தில் வென்றெடுத்த உரிமை  “மாற்றுத்திறனாளிகளால் எப்படி வேலை செய்ய முடியும்?” என்று எள்ளி நகையாடிய அதிகாரிகளுக்குப் பாடம் புகட்டியது நமது சங்கம். இது வெறும் வேலைக்கான திட்டம் மட்டுமல்ல, கிராமப்புற வறுமை ஒழிப்புத் திட்டம் என்பதைத் தர்க்கரீதியாக முன்வைத்து போராடினோம். வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை மறுப்பது அடிப்படை உரிமை மீறல் என முழங்கினோம். முதலில் 8 மணி நேரக் கடின உழைப்பும் குறைந்த கூலியும் வழங்கப்பட்ட நிலையை மாற்றி, 4 மணி நேர வேலை, 50% பணி இலக்கு, இலகுவான வேலை மற்றும்  முழு ஊதியம் ஆகியவற்றைத் தமிழக மாற்றுத்திற னாளிகளுக்குப் பெற்றுத் தந்தது நமது சங்கம் (TARATDAC) தான். இன்று பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் இத்திட்டம் அடுப்பு எரிய வழிவகை

செய்துள்ளது.  நீதிமன்றக் கதவுகளைத்  தட்டிய இட ஒதுக்கீடு  1995 சட்டத்திலிருந்த 3% இட ஒதுக்கீட்டை  எந்த அரசுமே முறையாக அமல்படுத்தவில்லை. சத்துணவு ஊழியர் பணி, மின்சார வாரிய இளநிலை பொறியாளர் நியமனம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் பணி என ஒவ்வொரு முறையும் தமிழக அரசு இட ஒதுக்கீட்டைப் புறக்கணித்தபோது, நாம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். சட்டப் போராட்டங்களின் வாயிலாகவே மாற்றுத்திற னாளிகளுக்கான உரிய வேலைவாய்ப்புகளை நாம் நிலைநாட்டினோம். உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் களத்தில் மட்டு மல்ல, நீதிமன்றக் கூண்டிலும் நின்று நியாயம் கேட்கத் தயங்கியதில்லை நமது சங்கம்.  உதவித்தொகைக்கான ‘விலங்குகளை’ உடைத்தெறிந்த வரலாறு  2016-க்கு முன் உதவித்தொகை பெற தமிழக அரசு விதித்திருந்த நிபந்தனைகள் கொடூரமா னவை. 75% ஊனம் இருக்க வேண்டும், குடும்பத்தில் சொத்தோ, 18 வயது ஆண் வாரிசோ  இருக்கக் கூடாது, அனாதையாக இருக்க  வேண்டும் என்பது போன்ற மனிதத்தன்மை யற்ற விதிகள் இருந்தன. இந்த விதிகள் மாற்றுத்திறனாளிகளைப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளின.  இவற்றைத் தகர்க்க 2016 பிப்ரவரியில் 6 நாட்கள் தொடர் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தினோம்.

700 பெண்கள் உட்பட 3,500 பேர் இரவு பகலாகக் களத்தில் நின்றனர். போராட்டக்களத்தில் ஒரு தோழரை நாம் பலியாகக் கொடுத்தோம். நமது தியாகத்தையும் வலிமையையும் கண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்வதாக அறிவித்தார். வெறும் 70,000 பேராக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை இன்று 8 லட்சமாக உயர்ந்திருப்பதற்குப் பின் னால் நமது சங்கத்தின் இரத்தமும் வியர்வையும் சிதறிய போராட்ட வரலாறு இருக்கிறது.  கருத்தியல் போரும் தற்போதைய களமும்  “முற்பிறவிப் பாவம்” அல்லது “கர்ம வினை” என்ற சனாதனக் கருத்துகளைத் தகர்த்து மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதையைக் காப்பதிலும் நாம் முன்னணியில் உள்ளோம். இத்தகைய பிற்போக்குத் தனங்கள் சமூகத்தின் நச்சுகள் என நாம் கருதுகிறோம். அசோக் நகர் பள்ளி மாணவர்களிடையே இத்தகைய கருத்துகளைப் பரப்பிய மகாவிஷ்ணுவைக் கைது செய்ய வைத்தது முதல், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மாற்றுத்  திறனாளிகளை இழிவுபடுத்திப் பேசும் போதெல்லாம் சட்ட ரீதியாகவும் அற ரீதியாகவும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறோம். தவறிழைத்தவர்கள் மன்னிப்புக் கேட்கும் வரை நமது ஓயாத போராட்டங்கள் தொடர்கின்றன.  தொடரும் கோரிக்கைகள் - திருச்சி மாநாட்டின் இலக்கு  தற்போது அண்டை மாநிலங்களான புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வழங்குவதைப் போல, தமிழ்நாட்டிலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி கடந்த 3 ஆண்டுகளாகப் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை, சிறை நிரப்பும் போராட்டம், வள்ளுவர் கோட்டத் தர்ணா எனப் பல முறை களம் கண்டும் தமிழக அரசு இன்னும் மௌனம் காப்பது

வருத்தமளிக்கிறது.  நமது போராட்ட இலக்குகள் இன்னும் முடிந்து விடவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக 100 நாட்கள் வேலை, அனைத்து மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கும் 35 கிலோ இலவச அரிசி வழங்கும் அந்த்யோதயா (AAY) குடும்ப அட்டை, வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கறாரான இடஒதுக்கீடு மற்றும் புதிய சட்டத்தின்படி சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் 25% கூடுதல் ஒதுக்கீடு ஆகிய வற்றை வென்றெடுக்க வேண்டியுள்ளது.  போராட்டமே தீர்வு!  15 ஆண்டுகளில் நாம் முன்னெடுத்த போராட்டங்கள் 90 சதவீதத்திற்கும் மேல் வெற்றியைக் கண்டுள்ளன. அந்த நம்பிக்கை யுடன், ஆட்சியாளர்களின் மனதை மாற்றவும் நமது உரிமைகளை வென்றெடுக்கவும் திருச்சி மாநாடு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையட்டும்.  மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகளே!  உரிமை என்பது யாருக்கோ கொடுக்கப்படும் சலுகை அல்ல; அது நமது பிறப்புரிமை. அந்த உரிமையை உரக்க எழுப்ப அணி அணியாய்த் திரண்டு வாரீர்! காவேரிக் கரையில் நமது உரிமை முழக்கம் எட்டுத் திக்கும் எட்டட்டும்.  ஒன்று கூடுவோம்! போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!