அமெரிக்காவுக்கு மகிழ்ச்சி, நமக்கு பகீர்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜாமிசன் கிரியர் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் “மகிழ்ச்சி” அளிப்பதாக கூறியுள்ளார். அவருக்கு மகிழ்ச்சி என்றால் நமக்கு பகீர் என்கிறது. என்னென்ன நிபந்தனைகளுக்கு இந்தியத் தரப்பில் இருந்து தலையாட்டப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இந்தியாவுக்கான அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீதான வரிகள் குறைக்கப்படும்; அமெரிக்காவிடம் இருந்து அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யப்படும்; பிற இறக்குமதிகளும் அதிகமாகும் என்றெல்லாம் டைம்ஸ் ஆப் இந்தியா (12.12.2025) செய்தி தெரிவிக்கிறது. இந்தியச் சந்தையில் அமெரிக்காவுக்கு கூடுதல் இடம் வேண்டுமென்ற டிரம்ப் “கட்டளை” நிறைவேறி இருக்கக் கூடும். இது தவிர இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு 100 % அதிகரிப்புக்கான சட்ட வரைவு என்பதும் அமெரிக்க வர்த்தக தூதுக்குழுவை மகிழ வைப்பதற்குதான் போல. அமெரிக்காவின் மகிழ்ச்சி இந்திய வர்த்தக & தொழில் அமைச்சர் பியூஷ் கோயலை உற்சாகப்படுத்தி இருக்கிறது. ஓ.பி.எஸ் அம்மாவிடம் காட்டிய பணிவுக்கு நிகராக பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார். “அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜாமிசன் கிரியர் மகிழ்ச்சி அடைந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் எனில் பேசப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் கையெழுத்து போட்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்” என பரவசத்தோடு தெரிவித்துள்ளார். ஆனால் என்ன பேசப்பட்டுள்ளது என்பது பற்றி அவர் மூச்சுவிடவில்லை. அமைச்சரின் எதிர்பார்ப்பு எகிறி இருப்பது மட்டும் வெளிப்படுகிறது. ஆனால் அரசின் தலைமைப் பொருளாதார நிபுணர் அனந்த் நாகேஸ்வரன் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அவர் புளும்பெர்க் தொலைக் காட்சி நேர்காணலில், “நான் நவம்பர் மாதமே பேச்சுவார்த்தைகள் முடிந்து அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்படுமென்று நம்பினேன். ஆனால் நடக்கவில்லை... அதனால் இதற்கு கால அட்டவணை சொல்வது சிரமம். மார்ச் மாதத்திற்குள் உடன்பாடு ஏற்படாவிட்டாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்”. இப்படி சொல்கிறாரே என்று அமைச்சர் பியூஷ் கோயலிடம் கேட்டால் அவர் “என்ன அடிப்படையில் இப்படி தலைமைப் பொருளாதார நிபுணர் அனந்த் நாகேஸ்வரன் சொன்னார் என்று தெரியவில்லை. அவரிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்” என்று பந்தை அடித்து இந்த பக்கம் தள்ளியுள்ளார். பந்தை இவர்கள் இப்படி ஆள் ஆளுக்கு அடித்து தள்ளினாலும் உண்மையில் பந்தாடப்படுவது இந்திய சிறு தொழில்கள், விவசாயம், மக்களின் வாழ்க்கைதான்.
