articles

img

விஜய்யின் புதுச்சேரி பேச்சு : உண்மையல்லாத வெற்றுப் பேச்சு! - வெ. பெருமாள்

விஜய்யின் புதுச்சேரி பேச்சு  :  உண்மையல்லாத வெற்றுப் பேச்சு!  -  வெ. பெருமாள்

புதுச்சேரியிலும், ஈரோட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப் பட்ட பொதுக்கூட்டத்தில் அக்கட்சி யின் தலைவர் விஜய் ஆற்றிய உரை, உண்மை களைத் திரிப்பதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட அரசியல் நாடகமாகவும் அமைந்துள்ளது.  புதுச்சேரியில், கரூர் துயரத்தைச் சொல்லி 10 நிமிடங்கள் மட்டுமே, அதுவும் எழுதி வைத்ததை வாசித்த விஜய், புதுச்சேரி மாநில வளர்ச்சி குறித்தோ, மக்கள் நலன் சார்ந்த மாற்றுத் திட்டங்கள் குறித்தோ எவ்விதப் பார்வையுமின்றி பேசினார். பாஜக மீதான  மென்மையான அணுகுமுறை விஜய் தனது உரையில் ‘அரசியல் எதிரி’ என்று திமுகவை மிகக் கடுமையாகச் சாடினார். ஆனால், ‘கொள்கை எதிரி’ என்று அவர் அடையாளப்படுத்தும் பாஜகவின் பெயரைக்கூட உச்சரிக்கத் துணிவின்றி, ‘ஒன்றிய அரசு’ என இலகுவான விமர்சனத்தோடு கடந்து சென்றார். சில உண்மைகளை மறைத்தும் திரித்தும் பேசிய விஜய், திமுகவை குறிவைத்து அரசியல் கபட நாடகம் ஆடுகிறாரே தவிர, புதுச்சேரி மக்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை. புதுச்சேரியை உலுக்கி வரும் ரூ. 2000 கோடி போலி மருந்து மாபியா கும்பல், ஆட்சி யாளர்களுடனான அதன் தொடர்பு, தரமற்ற சத்து மாத்திரை கொள்முதல் ஊழல், மின்சாரத் தனியார்மயம், பெருகிவரும் மதுக்கடைகள் போன்ற எரியும் பிரச்சனைகள் குறித்து விஜய் மௌனம் காத்தது ஏன்? சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் பலியான துயரத்தையும் அவர் வசதியாக மறந்துவிட்டார். ரேஷன் கடை:  இடதுசாரிகளின் போராட்டத்தை மறைத்த விஜய் “இந்தியாவிலேயே ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம் புதுச்சேரி” என விஜய் பேசி யிருப்பது அப்பட்டமான பொய். உண்மையில், 2024 டிசம்பர் முதல் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த 2015-இல் ஒன்றிய மோடி அரசு ரேஷன் கடைகளை மூடியபோது, அதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்பது ஆண்டுகளா கத் தொடர் போராட்டங் களை நடத்தியது. 2023 ஆகஸ்ட் 2-இல் தலைமைச் செயலக முற்றுகை, 2024 பிப்ர வரி 19 முதல் 22 வரை சட்டமன்றம் முன்பாக காத்திருப்புப் போராட்டம் எனத் தொடர்ச்சியான அழுத்தங்களால் மட்டுமே ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. குறிப்பாக, 2023 ஆகஸ்டில் பாஜக அமைச்சர் தனது தொகுதியிலிருந்து பெண் களை அழைத்து வந்து ரகசியக் கருத்துக்கேட்பு நடத்தி ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூட முயன்ற சதியை முறியடித்தது மார்க்சிஸ்ட் கட்சி. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக  படுதோல்வி அடைய ரேஷன் கடை மூடல் முக்கியக் காரணமாக இருந்தது. இத்தகைய நீண்ட நெடிய போராட்ட வரலாற்றை அறியா மல், ரேஷன் கடை திறப்பதற்குச் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத விஜய், இன்று மக்களைப் பற்றி கவலைப்படுவதாக நாடகமாடுவது நேர்மையற்ற செயலாகும். மாநில அந்தஸ்து: ஓர் அரசியல் மோசடி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 2025 மார்ச்சில் 16-வது முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தைத் தனிநபர் தீர்மானமாக முன்மொழிந்தவர்கள் புதுச்சேரி திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களே தவிர, பாஜகவோ முதலமைச்சரோ அல்ல. முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்கவே அவை அரசுத் தீர்மானமாக மாற்றப்பட்டன. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகச் செயல்படும் பாஜக கூட்டணியை சிறு விமர்சனம் கூடச் செய்யாமல், மாநில அந்தஸ்து கிடைக்கும் எனப் பேசுவது அரசியல் மோசடியாகும். எம்.ஜி.ஆருடன் ஒப்பீடு: வரலாற்றுப் பிழை தன்னை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டுப் பேசிய விஜய், கடந்த கால அரசியலைப் பயிலவில்லை என்பதையே காட்டுகிறது. 1974-இல் அமைந்த எம்.ஜி.ஆரின் அதிமுக ஆட்சி வெறும் 21 நாட்கள் மட்டுமே நீடித்தது. மேலும், 1979-இல் புதுச்சேரியை அண்டை மாநிலங்களுடன் இணைக்கும் மொரார்ஜி தேசாயின் திட்டத்தை எம்.ஜி.ஆர் ஆதரித்ததால், மக்கள் மத்தியில் அவர் கடும் பின்னடைவைச் சந்தித்தார். இந்த வரலாற்றை அறியாமல் தன்னை எம்.ஜி.ஆராக உருவகிப்பது அரசியல் போதாமையே. ஊழல் குற்றச்சாட்டும் ஜான்குமார் ஆதரவும் ஊழல் புகாரால் நீக்கப்பட்ட அமைச்சருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட ஜான்குமாருக்கு 200 நாட்களாக இலாகா ஒதுக்கவில்லை என விஜய் வருத்தப்படுகிறார். ஆனால் உண்மை என்ன? ஜான்குமார் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடையவர் என சென்னை உயர்நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டவர். மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தால்தான் இந்த நில மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய நில அபகரிப்புப் பேர்வழிக்கு ஆதரவாக விஜய் குரல் கொடுப்பது, லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனுக்கும் இவருக்கும் உள்ள நெருக்கத்தின் வெளிப்பாடா? புதுச்சேரி அமைச்சரவையில் தலித் மற்றும் பெண் அமைச்சர்கள் காரணமின்றி நீக்கப்பட்டபோது வாய் திறக்காத விஜய், ஜான்குமாருக்காகப் பரிந்து பேசுவது ஏன்? காரைக்கால் புறக்கணிப்பு காரைக்கால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை ஒன்றிய அரசு கொள்முதல் செய்வதில்லை. தமிழக அரசுதான் அதைக் கொள்முதல் செய்கிறது. இதுகுறித்தோ, காவிரி நீர் விவகாரத்திலோ பாஜகவை விமர்சிக்கத் துணியாத விஜய், காரைக்கால் வளர்ச்சி பற்றிப் பேசுவது வெற்று முழக்கமே.