தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில மாநாடு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கவும், கிலோ கணக்கில் தேங்காய் கொள்முதல் செய்யவும் வலியுறுத்தல்
தஞ்சாவூர், டிச. 19 - தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் வியாழக்கிழமை (டிச.18) எழுச்சியுடன் நடைபெற்றது. தென்னை விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பி.நாகேந்திரன், மாநில துணைத்தலைவர்கள் எம்.முத்துராமன், எம்.செல்வம், மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். தீர்மானங்கள் மாநாட்டில் தென்னை விவசாயிகளின் நலன் சார்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, தேங்காய் வியாபாரிகள் ‘லாபக்காய்’ என்ற பெயரில் நூறு தேங்காய்க்கு 15 காய்களை விவசாயிகளிடம் இருந்து விலையில்லாமல் பறிக்கும் முறையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு மாற்றாக, தமிழக அரசே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மற்றும் மார்க்கெட்டிங் கமிட்டி மூலமாக கிலோ கணக்கில் தேங்காயை நேரடியாகக் கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். அதேபோல, தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை மானிய விலையில் விநியோகம் செய்ய வேண்டும். இத்திட்டத்தை நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி விடுதிகள் மற்றும் பொது விநியோகத் திட்டங்களிலும் விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்னை மரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாக தென்னை மரங்களுக்குத் தனி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வெள்ளை ஈ மற்றும் பூச்சித் தாக்குதலால் ஏற்படும் சேதங்கள், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் வனவிலங்குகளால் பாதிக்கப்படும் தென்னை மரங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, மரம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், தென்னை மரங்களின் காய்ப்புத்திறனை அதிகரிக்கத் தேவையான உரங்களை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து பாமாயில் மற்றும் இதர சமையல் எண்ணெய் இறக்குமதியைத் தடுத்து நிறுத்தி, உள்நாட்டுத் தென்னை விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும், மாவட்டங்கள் தோறும் தென்னை சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்கி ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் எனவும் மாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தனியார் வியாபாரிகள் “சிண்டிகேட்” மாநாட்டில் சிறப்புரையாற்றிய மாநில பொதுச் செயலாளர் ஏ.விஜயமுருகன், தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களும், சில குறிப்பிட்ட வடநாட்டு வியாபாரிகளும் ‘சிண்டிகேட்’ அமைத்துக்கொண்டு தேங்காய் விலையைத் தங்கள் விருப்பம்போல நிர்ணயம் செய்து விவசாயிகளைச் சுரண்டுவதாகக் குற்றம் சாட்டினார். கேரள மாநிலத்தில் அரசே உரித்த தேங்காயைக் கொள்முதல் செய்வதைப் போல, தமிழகத்திலும் உரித்த தேங்காயை கிலோ கணக்கில் கொள்முதல் செய்தால் மட்டுமே தனியார் வியாபாரிகளின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியும் என்றார். மேலும், நான்கு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் அமல்படுத்தப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். விவசாயிகளுக்கு பலன் இல்லை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் தனது உரையில், இந்தியாவில் தேங்காய் உற்பத்தி 21.3 பில்லியனாக உயர்ந்து தன்னிறைவு அடைந்திருந்தாலும், அதன் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி, உற்பத்திச் செலவுடன் 50 சதவீத லாபம் சேர்த்து தேங்காய் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மோடி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை அமல்படுத்தி இந்திய விவசாயத்தைச் சீரழித்து வருவதாகச் சாடினார். ஒன்றிணைந்து போராடுவோம்! மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மத்திய அரசின் மின்சார திருத்த மசோதா-2025 மற்றும் விதை மசோதா-2025 ஆகியவற்றால் ஏற்படப்போகும் பேராபத்துகளை விளக்கினார். புதிய மின்சாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் உள்ள 23 லட்சம் இலவச மின் இணைப்புகள் பறிக்கப்படும் சூழல் ஏற்படும் என்றும், விதை மசோதா மூலம் ஒட்டுமொத்த விதை உற்பத்தியும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுவிடும் என்றும் எச்சரித்தார். கடந்த 11 ஆண்டு கால பாஜக ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை முறியடிக்க அனைத்து விவசாயச் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். நிர்வாகிகள் தேர்வு மாநாட்டின் இறுதியில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக ஏ.விஜயமுருகன், மாநிலச் செயலாளராக துளசி நாராயணன், மாநிலப் பொருளாளராக எம்.செல்வம் உள்ளிட்ட 9 செயற்குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய 37 பேர் கொண்ட மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் சங்க நிர்வாகிகள் ஏ.நவீன் ஆனந்த், சி.ஆர்.சிதம்பரம், கோ.ராமசாமி, வே.ரெங்கசாமி, எஸ்.கமால் பாட்சா, பி.கோவிந்தராஜ், வி.ஆர்.கே.செந்தில்குமார், கே.சோமசுந்தரம், வி.கருப்பையா, ஏ.எம்.வேதாச்சலம், ஜாக்குலின் மேரி, எஸ்.எழிலரசன், வி.சத்தியசீலன் மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். (ந. நி)
