அடிப்படை வசதிகள் இல்லாத தனுஷ்கோடி அரிச்சல்முனை சுற்றுலா பயணிகள் அவதி
இராமநாதபுரம், டிச.19- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல் முனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வாகனங்களில் அதிகமானோர் வருகின்றனர்.ஆனால் வாகனங்களை நிறுத்தவும் திருப்பவும் முடியாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முறையான கழிப்பிட வசதிகள் இல்லாததால், பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே வாகனங்களை முறையாக நிறுத்துவ தற்கான தனி வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். வியாபாரம் செய்யும் கடைக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
