ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் இந்தியப் பொருளாதாரமும்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத புதிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 3, 2025 அன்று ஒரு அமெரிக்க டாலர் 90 ரூபா யைத் தாண்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. தற்போதைய நிலவரப்படி (டிசம்பர் 18, 2025), ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து 90.55 ரூபாய் என்கிற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 85 ரூபாயாக இருந்த மதிப்பு, தற்போது ஓராண்டிற்குள்ளாகவே 6.5 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான ஆசிய நாடுகளின் பண மதிப்பில் இந்திய ரூபாயின் மதிப்பு தான் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்பது கவலைக்குரிய விஷயமாகும். இது இந்தியப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவு - காரணங்கள்
இந்த வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாக அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் வெளியேற்றம் சொல்லப்படுகிறது. அந்நிய நிறுவன முதலீட்டா ளர்கள் மற்றும் ஹெட்ஜ் நிதி (கார்ப்பரேட் நிறுவனங்க ளின் அவசரகால தொகுப்பு நிதி) மேலாளர்கள் இந்தி யச் சந்தையில் தாங்கள் வைத்துள்ள பங்குகள் மற்றும் பத்திரங்களைத் தொடர்ந்து விற்று வருகின்றனர். இவ்வாறு விற்பனை செய்து இந்திய ரூபாயாக வரும் பணத்தை டாலராக மாற்றி அந்நிய தேசங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதன் காரணமாக சந்தை யில் டாலருக்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. இது ரூபாயின் மதிப்பினை வேகமாகக் கீழிறக்குகிறது. புள்ளிவிவரங்களின்படி, ஜூலை 2025 முதல் நவம்பர் 2025 வரையிலான ஐந்து மாத காலகட்டத்தில் மட்டும், அந்நிய நிறுவன முத லீட்டாளர்கள் கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) சமீப காலங்களில் பெருமளவு அதிகரித்துள் ளது. நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதி கரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக தங்கம் மற்றும் எரிசக்தி இறக்குமதி அதிக ரித்துள்ளது. இதனால் இந்தியக் கையிருப்பிலுள்ள டாலர்கள் அதிகமான அளவில் வெளியே சென்றுள் ளன. அதிகமான வர்த்தகப் பற்றாக்குறை என்பது சர்வதேசச் சந்தையில் டாலர்களுக்கான தேவை அதி கரிப்பைக் காட்டும் மிக முக்கியமான அறிகுறியாகும். மேலும், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இன்னும் நிறைவுபெறாததும் இந்திய ரூபாயின் மீதான அழுத்தத்திற்கான காரணமாகச் சொல்லப் படுகிறது. இந்த ஒப்பந்தம் முறைப்படி நிறை வுற்றால் மட்டுமே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பால் விதிக்கப்பட்ட அதிக வரிகள் மற்றும் வர்த்தகக் கட்டுப் பாடுகள் குறித்த ஒரு தெளிவான முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த ஒப்பந் தங்கள், இந்தியாவின் கைகளை முறுக்குபவை; கழுத்தை நெரிப்பவை என்பதும் கவனிக்கத்தக்கது.
பணவீக்கம் காரணமல்ல
தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதற்கு, அமெரிக்காவை விட இந்தியாவில் அதிகமாக இருக்கும் பணவீக்கம் காரணமல்ல எனப் பொருளா தாரப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் விளக்குகிறார். அவர் கூறுகையில், “இந்தியாவில் பணவீக்கம் தொ டர்ந்து அதிகரித்து வருவதற்குக் காரணம், இந்திய ரூபாயானது டாலருக்கு நிகரான தன்னுடைய மதிப்பி னைத் தொடர்ந்து இழந்து வருவதுதான்” என்கிறார்.
“ரூபாயின் மதிப்பு குறைவது தொடர்ந்து முக்கிய மான இறக்குமதிப் பொருட்களான எண்ணெய் போன்ற பொருட்களின் விலையை அதிகரிக்கிறது. இந்த விலை உயர்வு என்பது நேரடியாக நுகர்வோர் மீது சுமத்தப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் பண வீக்கமானது ரூபாயின் மதிப்பு மீண்டும் மேலும் தேய்வதற்கு இட்டுச் செல்கிறது. இது ஒரு நச்சுச் சுழற்சி யாக மாறுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவதற்கு மற்றொரு மிக முக்கியமான காரணம், இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் தங்களுடைய சொத்துக்களை இந்திய ரூபாயில் வைத்திருப்பதை விட டாலர் மதிப்பிலேயே வைத்திருக்க விரும்புவது தான்” என்கிறார் பேரா.பிரபாத் பட்நாயக்.
பொருளாதார விளைவுகள்
இந்தியா தனது எரிபொருள், இயற்கை எரிவாயு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்களைப் பெருமளவில் இறக்குமதி செய்கிறது. சர்வதேசச் சந்தையில் இப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை என்ற போதிலும், ரூபாயின் மதிப்பு வீழ்ந்துள்ளதால் இவற்றை வாங்குவதற்குச் செலவிடப்படும் ரூபாயின் அளவு அதிகரிக்கிறது. எரிபொருள், இதில் மிக முக்கியமான காரணியாகும். இந்தியா தனது எரி பொருள் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைகின்றபோது, அது உள் நாட்டில் எரிபொருள் விலை உயர்விற்கு வழிவகுக்கி றது. இது சந்தையில் உள்ள அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலைகள் மீதும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உழைப்பாளி மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளின் மீதும் பெரும் சுமையை ஏற்றுகிறது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியா னது, நாட்டின் அந்நியக் கடன் சுமையை பல மடங்கு அதிகரிக்கிறது. குறிப்பாக அந்நியக் கடனை டாலர்க ளாகத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்போது அதன் சுமை அதிகரிக்கிறது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி யடைவது, நாம் திருப்பிச் செலுத்த வேண்டிய உண்மையான கடன் அளவை ரூபாயின் கணக்கில் அதிகரிக்கிறது. அதாவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துகின்றபோது, முன்னைவிட அதிகமான ரூபாயை டாலர் வடிவில் செலுத்த வேண்டி வருகிறது. இந்தியாவின் அந்நியக் கடன் ஜூன் 2025 கணக்கு களின்படி 747.2 பில்லியன் டாலர்களாகும்; இந்திய ரூபாயில் 67.28 லட்சம் கோடி ஆகும். இதில் நீண்ட காலக் கடன்கள் 611.7 பில்லியன் டாலர்கள் (51.68 லட்சம் கோடி ரூபாய்) எனவும், குறுகிய காலக் கடன்கள் மொத்த கடன் தொகையில் 18.1 சதவீதம் எனவும் சொல்லப்படுகிறது.
அந்நியச் செலாவணி கையிருப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Foreign Exchange Reserves) தொடர்ந்து வீழ்ச்சி யடைந்து வருகிறது. செப்டம்பர் 12, 2025 அன்று 702.966 பில்லியன் டாலர்களாக இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு, நவம்பர் 28, 2025இல் 686.227 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது. டிசம்பர் 18 நிலவரப்படி இது 680 பில்லியன் டாலர் அளவிற்குச் சரிந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியானது ரூபாயின் மதிப்பைச் சீர் செய்வதற்காக இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பிலிருந்து டாலர்களைச் சந்தையில் புழக்கத்தில் விட்ட பின்னரும், டாலருக்கு நிகரான ரூபா யின் மதிப்பு வெகுவாகச் சரிந்துள்ளது குறிப்பிடத் தக்கது. 2014இல் நரேந்திர மோடி பிரதமராகப் பதவி யேற்றபோது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 62.33 ரூபாயாக இருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.
டிரம்ப்பின் பாதுகாப்புவாதம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் பாதுகாப்புவாதக் (Protectionism) கொள்கைகள் அமெரிக்காவின் உள்நாட்டு கிராக்கியை அதிகரிக்கும் நோக்கம் கொண்டவை. இது அந்நாட்டின் உற்பத்தியையும், வேலைவாய்ப்பினையும் அதிகரிக்கக்கூடும். ஆனால், அமெரிக்காவின் இறக்குமதியைக் குறைக்கும் இந்தக் கொள்கை மற்ற நாடுகளின் வர்த்த கத்தை பாதிக்கும். டிரம்ப்பின் இந்தக் கொள்கையா னது அமெரிக்காவில் பணவீக்கத்தை ஓரளவிற்கு அதிகரிக்கலாம், ஆனால் இதர வளரும் நாடுகளில் பணவீக்கத்தை மிக அதிக அளவில் உயர்த்தும். கார ணம் என்னவெனில், எண்ணெய் போன்ற பல பொ ருட்களின் சர்வதேச விலைகள் டாலர் மதிப்பிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் நாணய மதிப்பு வீழ்கின்றபோது, அப்பொ ருட்களின் உள்நாட்டு விலைகள் உயர்கின்றன.
மற்ற நாடுகளின் உழைப்பாளி மக்கள் இதனால் இரு வகைகளில் பாதிக்கப்படுவர். ஒன்று, அமெரிக்கச் சந்தையை இந்த நாடுகள் இழப்பதால் ஏற்படும் வேலை இழப்பு. இரண்டு, பணவீக்கம் அதிகரித்து நாணய மதிப்பு வீழ்ச்சியடைவதால் ஏற்படும் வாழ்வா தாரப் பாதிப்பு. இந்நாடுகளின் அரசுகள் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் எடுக்கும் முடிவுகள் வேலையின்மையை மேலும் அதிகரிக்கும். “உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வென் பது சில ஊக வணிகர்களின் விருப்பங்களுக்கு ஏற்றாற் போல மாறும் அபாயம் உள்ளது” என்கிறார் பேராசிரி யர் பிரபாத் பட்நாயக். மோடி அரசு, உண்மையான பொருளாதார நிலவரத்தை நாட்டு மக்களுக்குச் சொல்லுமா? இந்திய உழைப்பாளி மக்களைப் பாது காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தி டுமா?
