வேலையின்மை நெருக்கடியில் தவிக்கும் இளைஞர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவீர்!
இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் என்று முழங்கும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள், நடைமுறையில் அவர்களைத் தீராத வேலை யின்மை நெருக்கடியில் தள்ளிவிட்டனர். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, கடந்த 11 ஆண்டு களில் கார்ப்பரேட் இந்துத்துவக் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து இளைஞர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.தமிழ்நாட்டின் நிலைமையும் கவலை தருவதாக உள்ளது. வேலையின்மை விகிதமும் கவலை தரும் புள்ளிவிவரங்களும் 2023-24 பிஎல்எப்எஸ் (PLFS) அறிக்கை யின்படி தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் 3.2%. ஆனால், 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே நிலவும் வேலையின்மை விகிதம் 10.2% ஆக உள்ளது. குறிப்பாக, ஜுலை - செப்டம்பர் 2025 காலாண்டில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலையின்மை 17% ஆக உயர்ந்து, இந்திய சராசரியான 14.8 சதவீதத்தை மிஞ்சியிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.93 கோடி இளைஞர்கள் உள்ள சூழலில், பட்டதாரி இளைஞர்களிடையே வேலையின்மை 16.3 சதவீதமாக உள்ளது. ஆண்டுக்கு 10-12 லட்சம் பட்டதாரிகள் வெளிவரும் நிலையில், அவர்களுக்கான நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். கிக் பொருளாதாரம்: நவீன கால உழைப்புச் சுரண்டல் வேலைவாய்ப்பு இல்லாத நெருக்கடியால் தமிழ்நாட்டில் சுமார் 7–8 லட்சம் இளைஞர்கள் ஸ்விக்கி, ஜொமாட்டோ, ரேபிடோ (Swiggy, Zomato, Rapido) போன்ற ‘கிக்’ (Gig Economy) பொருளாதாரத்தில் (செயலி வழி கூலித் தொழில்) தள்ளப்பட்டுள்ளனர். இங்குப் பணிப் பாதுகாப்போ, ஓய்வூதியமோ, மருத்துவக் காப்பீடோ கிடையாது. வவுச்சர் மூலமாக கூலி பெறுவது, குறிப்பிட்ட நேரப் பணிக்கு மட்டும் கூலி என்ற பெயர்களில் இளைஞர்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்குச் சுரண்டப்படுகிறார்கள். இது வேலைவாய்ப்பு அற்றவர்களின் ‘வாழ்க்கைக் கட்டா யம்’ என்பதைப் பயன் படுத்திக் கொண்டு கார்ப்பரேட்டுகள் நடத்தும் நவீன அடி மைத்தனம். இதனால் படித்த பட்டதாரி இளை ஞர்கள் பொருளாதார நெருக்கடியிலும், மன உளைச்சலிலும் சிக்கித் தவிக்கின்றனர். அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் தற்போது 6 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன எனத் துறை சார்ந்த சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பள்ளிக் கல்வி: 1,06,232; மருத்துவம்: 79,541; மின்வாரியம்: 68,000; உள்ளாட்சி: 58,196; காவல்துறை: 23,674 இந்தக் காலிப்பணியிடங்களை நிரப்பா ததால், தற்போது பணியில் இருப்பவர்கள், 5 பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவர் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்குக் கடும் மன அழுத்தத்தைத் தருவதோடு, பொதுச் சேவைகளின் தரத்தையும் சீர்குலைக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 19,071 குரூப் 4 பணியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2026-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி (TNPSC) கால அட்டவணை (Annual Planner) வெறும் 645 காலிப்பணியிடங்களை மட்டுமே அறிவித்திருப் பது, அரசு வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை ஏமாற்றும் செயலாகும். ஒப்பந்த முறை: சிதைக்கப்படும் நீதி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை 50% நிய மனங்கள் வெளிமுகமை மூலம் ஒப்பந்த முறையிலேயே (Outsourcing) நடக்கின்றன. 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் 7500- க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள், 14,000-க்கும் மேற்பட்ட பகுதிநேரச் சிறப்பாசி ரியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி போராடி வருகிறார்கள். தற்காலிகப் பணியாளர்களிட மிருந்து நிரந்தரப் பணியாளர்களுக்கான வேலைகளை வாங்குவது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். இது இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை யும் சிதைக்கும் செயலாகும். சமூகத் தாக்கமும் தீர்வுகளும் வேலையின்மை என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சனை அல்ல; அது ஒரு சமூகப் பேரவலம். வேலையில்லாத இளை ஞர்கள் தன்னம்பிக்கை இழந்து மன அழுத்தம், போதைப்பழக்கம் மற்றும் குற்றச் செயல்களில் சிக்கும் அபாயம் அதிகம். இன்று குற்ற நட வடிக்கைகளில் ஈடுபடும் பெரும்பான்மை யானவர்கள் 14-25 வயதுடையவர்களே என்பது வேலையின்மையின் கொடூரமான தாக்கமாகும். இன்று காத்திருப்புப் போராட்டம் எனவே, • அரசுத் துறைகளில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். • தனியார் துறையில் 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். • ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். • சட்டமன்றத் தேர்தலுக்கு முன் 1 லட்சம் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 19 (இன்று) தமிழ்நாடு முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இளை ஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் இப்போராட்டத் தில் கைகோர்க்க வேண்டும்.
