விதைச் சட்டம் 2025 விவசாயிகளின் தன்னுரிமையைப் பறிக்கும் கார்ப்பரேட் கபளீகரம்! - ப.துளசி நாராயணன்
புதிதாக ‘விதை சட்டம் 2025’ வரப்போகிறது என்பது நம்மில் பலருக்கு இன்னும் தெரிய வாய்ப்பில்லை. கடந்த நவம்பர் 12, 2025 அன்று ஒன்றிய பாஜக அரசு இப்புதிய சட்டத்திற்கான வரைவு மசோதாவை இணையதளத்தில் வெளி யிட்டது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் ஆட்சேபணைகளையும் வரும் டிசம்பர் 11-க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று வெறும் ஒரு மாத கால அவகாசத்தை ஒன்றிய அரசு வழங்கியிருந்தது. இந்நிலையில், இதை நாடாளு மன்றத்தில் அறிமுகம் செய்வதற்கான முனைப்பில் இருப்பதாக வேளாண் இணையமைச்சர் ராம்நாத் தாக்குர், டிசம்பர் 16 அன்று மக்களவையில் தெரி வித்துள்ளார். மிக முக்கியமான இந்த வரைவு மசோதா ஆங்கில மொழியில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளது.
ஏன் மாநில மொழிகளில் இது வெளியிடப்பட வில்லை என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19(1)(a), நமக்குத் தந்துள்ள கருத்துச் சுதந்திரம் முழுமையாக நிறை வேற வேண்டுமானால், சட்ட விபரங்கள் முறையாக மக்களுக்குப் புரியும் மொழியில் தெரிவிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் பலமுறை அறி வுறுத்தியுள்ளது. ஆனால், மக்கள் பிரதிநிதிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் ஆட்சியாளர்களும், பாஜகவைத் தூக்கிச் சுமக்கும் அதன் கூட்டணிக் கட்சி யினரும் இது குறித்து மௌனம் சாதிப்பது ஏன்? ஒய்யாரத் தோற்றமும் ஒளிந்திருக்கும் விஷமும் சந்தையில் உள்ள போலி விதைகளை அப்புறப் படுத்தவும், தரமான விதைகளை வழங்கி விவசாயிக ளின் வாழ்வை நிமிரச் செய்யவும் இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக மோடி அரசு கூறுகிறது. கேட்க நன்றா கத்தான் இருக்கிறது. ஆனால், உள்ளே நுணுகிப் பார்த்தால் விஷம் கொண்ட அதன் கோர முகம் பல ரூபங்களில் தெரிகிறது. புதிய சட்டப்படி, விதை களை உற்பத்தி செய்து விற்க விரும்புவோர் அரசிடம் விண்ணப்பித்துப் பதிவு செய்வது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விதை கள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு, ‘கியூ.ஆர்’ (QR code) குறியீடு அச்சிடப்பட்டு, ‘விதை கண்கா ணிப்பு போர்ட்டல்’ மூலம் தீவிரமாகக் கண்காணிக் கப்படும். ஒருவேளை அந்த விதையால் விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டால், விதை நிறுவனம் அரசுக்கு ரூ. 1 லட்சம் முதல் 30 லட்சம் வரை தண்டனைத் தொகை யாகச் செலுத்த வேண்டும்.
ஆனால், நஷ்டமடைந்த விவசாயிக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு குறித்து 35 பக்கங்கள் கொண்ட இந்த மசோதாவில் எங்கும் எந்த விபரமும் இல்லை. சிதைக்கப்படும் விவசாயி - விதை உறவு பண்ணை விதைகளை வளர்க்க, சேமிக்க, பயன்படுத்த அல்லது பரிமாற்றம் செய்துகொள்ள விவ சாயிகளுக்கு உரிமை உண்டு என்று அத்தியாயம் 1-இல் ஒரு கண்துடைப்பு வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆனால், அடுத்த பக்கங்களை உற்று நோக்கினால், எந்த ஒரு நபரும் பதிவு செய்யப்பட்ட விதைகளை விற் பனை செய்யவோ அல்லது பிறருக்கு வழங்கவோ கூடாது என அத்தியாயம் 5, பிரிவு 21(1) மிகத் தெளி வாகக் கூறுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கும் விதைக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் மரபுவழி உறவை இந்தச் சட்டம் அடி யோடு துண்டித்து விடுகிறது. விதையை ஒரு வியாபா ரப் பண்டமாக மட்டுமே பார்க்கச் சொல்லி இச்சட்டம் விவசாயிகளை வற்புறுத்துகிறது. மாநில உரிமைகள் மீதான எதேச்சதிகாரப் பிடி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி விவசா யம், சந்தை போன்றவை மாநிலப் பட்டியலில் வரு கின்றன. ஆனால், புதிய விதை சட்டப் பிரிவு 23 மாநில அரசுக்கு விதைச் சான்றிதழ் நிறுவனத்தை நிறுவும் அதிகாரம் தருவது போல் ஒரு மாய பிம்பத்தை உரு வாக்குகிறது.
ஆனால், பிரிவு 24(3)-ன் படி அந்த அதிகாரத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யும் அல்லது திரும்பப் பெறும் அதிகாரத்தை ஒன்றிய அரசு தன் வசம் வைத்துள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கும் இந்திய அரசியல மைப்பிற்கும் எதிரான ஒரு முழுமையான எதேச்சதி காரச் செயலாகும். சிதைக்கப்படும் 2001-ஆம் ஆண்டுச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘செயற்கை தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரி மைகள் சட்டம் 2001’ (PPV-FR Act) விவசாயிகளுக்கு 9 பிரதான உரிமைகளை வழங்கியுள்ளது. அதன்படி விதைகளைச் சேமிக்க, விதைக்க, பரிமாறிக்கொள்ள மற்றும் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு முழு உரிமை உண்டு. முக்கியமாக, பதிவு செய்யப்பட்ட விதைகள் பலன் தராவிட்டால் ஆணையத்தின் தலை யீடு மூலம் விதை நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு கோரும் அதிகாரம் இருந்தது. ஆனால், புதிய 2025 சட்டத்தில் இந்த உரிமைகள் அனைத்தும் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. சுதேசி கோஷமும் கார்ப்பரேட்டுக்கு சிவப்புக் கம்பளமும் விந்தையான விஷயம் என்னவென்றால், இந்தி யாவிற்கு வெளியே உள்ள எந்த ஒரு நிறுவனத்தையும் விதைகளைச் சாகுபடி செய்யவோ, பரிசோதனை செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ அங்கீ கரிக்கலாம் என பிரிவு 16(3) கூறுகிறது. இது உலக முதலாளிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயலன்றி வேறென்ன? இதுதான் இவர்களின் ‘மேக் இன் இந்தியா’ கோஷத்தின் இலட்சணமா? 2002-இல் புகுத்தப்பட்ட பி.டி. பருத்தி விதைகள் இந்திய விவசாயிகளுக்குப் பெரும் துயரத்தையே தந்தன. உற்பத்திச் செலவு கூடியதோடு, பயிர்த் தாக்கு தலால் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட னர். ஆனால் மன்சாண்ட்டோ போன்ற நிறுவனங்கள் பெரும் லாபம் பார்த்தன.
மேலும் கொள்ளை லாபம் அள்ள வழி செய்யும் விதமாக, கொஞ்சநஞ்ச தடைக ளையும் தூக்கி எறியும் நவீன முயற்சிதான் இப்புதிய சட்டம். சேவையா அல்லது லாப வேட்டையா? 2022-23இல் மட்டும் 43,001 விதை மாதிரிகள் தரமற்றவை எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. இதைக் கட்டுப்படுத்தவே புதிய சட்டம் என ஒன்றிய வேளாண் துறை இணை அமைச்சர் கூறுகிறார். ஏற்கெனவே உள்ள 1966 விதைச் சட்டம், 1983 விதைக்கட்டுப் பாட்டு ஆணையம் போன்றவற்றைக் கொண்டு ஏன் இதுவரை தரமற்ற விதைகளை உற்பத்தி செய்ப வர்களைத் தண்டிக்கவில்லை? இந்திய விவசாயம் என்பது 22.5 கோடி ஏக்கர் நிலப்பரப்பும், ஆண்டு க்கு 50,000 கோடி ரூபாய் வணிகமும் கொண்ட ஒரு மாபெரும் சந்தை. இதை கபளீகரம் செய்ய பேயர்ஸ்
, சின்ஜெண்டா, அதானி, மன்சாண்ட்டோ போன்ற கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் துடிக்கின்றன. அவர்க ளுக்கான ஒரு பாதையை அமைத்துக் கொடுப்பதே ஒன்றிய மோடி அரசின் நோக்கம். மாமேதை காரல் மார்க்ஸ் குறிப்பிட்டது போல, மூலதனம் என்பது தொழிலாளியின் உழைப்பை மட்டு மல்ல, மண்ணின் வள ஆதாரங்களையும் சேர்த்து அழிக்கும் கொடுமையில் ஈடுபடுகிறது. விதை என்பது ஒரு பண்டமல்ல; அது இயற்கையின் படைப்பு. இயற்கையுடன் உறவாடும் விவசாயிகளுக்கு மட்டுமே அது சொந்தம். விதை நமது உரிமை; அந்த உரிமை பறிக்கப்படும்போது மௌனம் காப்பது நமது பண்பாட்டிற்கு எதிரானது. இந்தச் சதித் திட்டத்திற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து சமர் புரிவோம்! கட்டுரையாளர் : மாநிலச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
