திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில்பட்டியில் அமைந்துள்ள மண்டு கருப்பண்ணசாமி கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
பெருமாள் கோயில்பட்டியில் மண்டு கருப்பண்ணசாமி கோயிலும், அதனை ஒட்டிய பகுதியில் கிறிஸ்தவ தேவாலயமும் அமைந்துள்ளன. இவ்விரு மதத்தினருக்கும் அருகிலுள்ள காலி இடம் தொடர்பாக நீண்ட காலமாக இடப்பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில், மண்டு கருப்பண்ணசாமி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி சித்திரபால்ராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கோயிலில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆனால், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி கிறிஸ்தவ தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானதைத் தொடர்ந்து, பெருமாள் கோயில்பட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த தனி நீதிபதி உத்தரவுகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
