தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தெதி தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து, எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிக்க முதலில் டிசம்பர் 5-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் டிசம்பர் 14-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் 15.18% பேர் நீக்கப்பட்டு தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து உயிரிழந்தவர்கள் 26,94,672 பேர், இடமாற்றம் மற்றும் கண்டறியா முடியாதவர்கள் 66,44,881 பேர், இரட்டை பதிவு கொண்டவர்கள் 3,39,278 பேர் என மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் பி.எல்.ஓ, இ.ஆர்.ஓ, சாவடி முகவர்கள் அல்லது ஆன்லைன் மூலம் ஜன.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதற்காக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
