வெனிசுலா விவகாரத்தில் தவறு செய்துவிடாதீர்கள் என அமெரிக்காவுக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் 10 அன்று வெனிசுலாவின் ‘ஸ்கிப்பர்’ என்ற எண்ணெய்க் கப்பலை அமெரிக்க ராணுவம் கடத்தியது. அதன் பிறகு இடதுசாரி தலைவரான நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வெனிசுலாவின் அனைத்து எண்ணெய் கப்பல்களையும் அமெரிக்க ராணுவம் தடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
வெனிசுலாவின் எண்ணெய், நிலம் மற்றும் வளங்கள் அமெரிக்காவிற்குச் சொந்தமானவை என்றும், அவை உடனடியாகத் திரும்பத் தரப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், வெனிசுலா விவகாரத்தில் ஒரு "மிகப்பெரிய தவறை" செய்துவிடக் கூடாது. போரை தூண்டாமல் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என வெனிசுலாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது . மேலும், மதுரோவுக்கு ரஷ்யா தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது.
வெனிசுலா தங்களின் மிக முக்கியமான நட்பு நாடு என்றும், அவர்களுடன் தாங்கள் எப்போதும் தொடர்பில் இருப்பதாகவும் ரஷ்யா அரசு கூறியுள்ளது.
