world

img

வங்கதேச இளைஞர் தலைவர் கொலை: மீண்டும் கலவரம் வெடிப்பு

வங்கதேச இளைஞர் தலைவர் கொலை: மீண்டும் கலவரம் வெடிப்பு

டாக்கா,டிச.19- வங்கதேசத்தில் 2024 இல் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் முக்கிய தலைவராக விளங்கிய ஷெரீப் உஸ்மான் ஹாடி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அந்நாட்டில் மீண்டும் பெரும் கலவரங்கள் வெடித்து வருகின்றன.    வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவை ஆட்சியில் இருந்து வெளி யேற்றிய போராட்டத்தின் முக்கிய முகமாக ஷெரீப் உஸ்மான் ஹாடி என்ற இளைஞர் இருந்தார். சமூக வலைதளங்களில் இவரது உரைகள் இளைஞர்களி டையே மிகவும் பிரபலமானது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் இணைந்தனர். 2026 பிப்ரவரி மாதம் நடைபெற வுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட இருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் அவர் மீது கடந்த டிசம்பர் 12 அன்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவருக்கு தலை யில் பலத்தகாயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடி வந்தார். சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (டிசம்பர் 18) இரவு உயிரிழந்தார். இந்த செய்தி வெளி யானதைத் தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. அவாமி லீக் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி அந்நாட்டின் முன்னணி நாளிதழ்களான புரோ தம் ஆலோ, டெய்லி ஸ்டார் அலுவலகங்களுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பொருட்களை அடித்து உடைத்ததோடு, கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர். ‘டெய்லி ஸ்டார்’ அலுவலகத்திலிருந்து கணினி கள் மற்றும் நாற்காலிகளை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த மோசமான சூழலுக்கு இடையே நல்வாய்ப்பாக வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வன்முறையின் போது, ‘நியூ ஏஜ்’ பத்தி ரிகையின் ஆசிரியர் நூருல் கபீர் என்பவர் போராட்டக் காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேச முயன்ற போது, “அவாமி லீக் ஏஜெண்டாக” அவர் செயல்படுவ தாகக்  கூறி அவரைத் தாக்கியுள்ளனர்.  அதுமட்டுமின்றி ராஜ்ஷாஹி பகுதியில் இருந்த அவாமி லீக் கட்சியின்  அலுவலகமும் போராட்டக்கா ரர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. ஹடியின் மறைவுக்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஹடியின் மரணம் நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு எனவும் டிசம்பர் 20 நாடு தழுவிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.