states

img

ஒரு தொகுதியில் மட்டும் 6000 வாக்காளர்களை நீக்க முயற்சி! சான்றுகளுடன் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

கர்நாடகத்தில் ஆலந்து சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 6,000க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம், பாஜகவுடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் சான்றுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மழுப்பலாக பதில் சொல்லியிருந்த நிலையில், அடுத்து ஹைட்ரஜன் குண்டு வீசப் போவதாக ராகுல் காந்தி அறிவித்திருந்தார்.

தி ஆலந்து பைல்ஸ் என்ற தலைப்பில் செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசியதாவது:

இன்று வெளியிடப்போவது ஹைட்ரஜன் குண்டு கிடையாது. விரைவில் ஹைட்ரஜன் குண்டு வெளியிடப்படும்.

ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினர், பட்டியல், பழங்குடியினர், ஓபிசி உள்பட சில சமூகத்தை சேர்ந்த மக்களை குறிவைத்து இது நடத்தப்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

கர்நாடகத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க யாரோ முயற்சித்துள்ளனர்.

ஆள்மாறாட்டம் செய்வதற்காக தானியங்கிச் செயலி மூலம் வாக்காளர் பட்டியலி பெயர் சேர்க்க 6018 விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில  தொலைபேசி எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் வாக்குச் சாவடிகளைக் குறிவைத்து வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன என குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரத்தின் ராஜுரா தொகுதியில் 6815 வாக்காளர்கள் குறி வைக்கப்பட்டனர். கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உ.பி ஆகிய இடங்களில் இதைச் செய்வது ஒரே அமைப்புதான்.அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது எனத் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஏற்கனவே கர்நாடகாவில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது என சான்றுகளுடன் ராகுல் காந்தி வெளியிட்ட நிலையில், தற்போது மீண்டும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.