குஜராத் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2,300 கிலோ போதைப்பொருட்கள் காணாமல் போயுள்ளதாக சிஏஜி தாக்கல் செய்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் சட்டமன்றத்தில் சிஏஜி(Comptroller and Auditor General of India) போலீஸ் வசம் இருந்த போதைப்பொருட்கள் காணாமல் போயுள்ளது குறித்து அறிக்கை ஒன்று தாக்கல் செய்தது.
2022 அக்டோபர் முதல் 2023 ஜூலை வரை மொத்தம் 6,510.54 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இதில் 4,177.86 கிலோ அழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், மீதமுள்ள 2,332.68 கிலோ அதாவது சுமார் 35 சதவீதம் போதைப்பொருட்கள் போலீஸ் காவலில் இருந்து காணாமல் போனது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து குறித்து மாநில உள்துறை துறை அளித்த விளக்கத்தில், 144.180 கிலோ கஞ்சா திருடப்பட்டதாகவும், குறிப்பிடத்தக்க அளவு கஞ்சா மற்றும் அபீனை எலிகள் தின்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பச்சை கஞ்சா மற்றும் அபீயம் உலர்வதால் இயல்பாக எடை குறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விளக்கங்களை சிஏஜி ஏற்க மறுத்து, 2,300 கிலோக்கும் அதிகமான போதைப்பொருள் “எலிகள் மற்றும் ஈரப்பதம்” காரணமாக காணாமல்போனது நியாயப்படுத்த முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநில உள்துறை துறை காண்மல் போன பொருட்களுக்கு திருப்திகரமான விளக்கம் அளிக்கத் தவறியுள்ளதாகவும், சேமிப்பு மற்றும் அழிப்பு நடைமுறைகளில் கடுமையான பிழைகள் உள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காணமல்போன போதைப்பொருட்கள் சட்டவிரோத சந்தைக்கு திருப்பி விடப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, பாதுகாப்பான சேமிப்பு வசதிகள், வலுவான கண்காணிப்பு மற்றும் கடுமையான நடைமுறைகள் அவசியம் என CAG வலியுறுத்தியுள்ளது.
