states

img

ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

முதன் முறையாக  

மக்கள் நடிகர்-பாடகர் ஜூபின் கர்க்  நடித்த கடைசிப் படமான ரோய் ரோய்  பினாலே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அசாமிய மொழியில் உருவாகியுள்ள இந்தப் படம் அக்டோபர் 31 ஆம் தேதியன்றுதான் வெளியாகிறது. அசாமிய மொழிப்படங்கள் பெரும் சந்தையைக் கொண்டவையல்ல. ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. அசாமிய திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக காலை 6 மணிக்கு ஒரு காட்சிக்குத் திட்டமிடும் அளவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் சந்தேகத்திற்கு உரிய வகையில் உயிரிழந்த ஜூபின் கர்க், மக்களின் பிரச்சனை களைத் தனது பாடல்கள் மூலம் எடுத்துரைத்து வந்தார். மரணம் தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மக்களின் எழுச்சிகரமான கோரிக்கைகளால், விசாரிக்க வேண்டிய கட்டாயம் அசாமில் உள்ள பாஜக ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.

 தாரைவார்ப்பு

 அந்நிய நிதி நிறுவனங்களின் கைகளுக்கு இந்திய தனியார் வங்கிகள் மாறுகின்றன.  74% வரையில் அந்நிய முதலீடுகள் இருக்கலாம் என்ற நிலையில் யெஸ் வங்கி, ஆர்பிஎல் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, பெடரல் வங்கி ஆகியவற்றில் பெரும் அளவில் அந்நிய முதலீடுகள் வருகின்றன.  இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளில் அந்நிய முதலீட்டின்  வரம்பை 20%ல் இருந்து 49% ஆக உயர்த்த  பாஜக அரசு திட்டமிடுகிறது. இந்த உயர்வுக்குத் தொடர்ந்து அந்நிய முதலீட்டாளர்களிடம் இருந்து அழுத்தம் இருந்து வந்தது. 10% இருந்தாலே நிர்வாகத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முடியும். 2008 ஆம் ஆண்டில் பெரும் சரிவை உலகம் முழுவதுமுள்ள  நிதி நிறுவனங்கள் சந்தித்தபோது, இந்தியா தப்பித்ததற்கு அவை பொதுத்துறையில் இருந்ததே காரணம் என்று நிபுணர்கள் கூறினர்.  ஆனால் தற்போது, தனியார் வங்கிகளைத் தொடர்ந்து, பொதுத்துறை வங்கிகளும் அந்நியர் கைகளுக்கு மாறும் ஆபத்து எழுந்திருக்கிறது.

 மிரட்டல்கள்  

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் மகளிர் அணியைச் சேர்ந்த இருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளானார்கள். பாஜக ஆளும்  மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. தற்போது, அந்த சம்பவத்துக்கு அந்த இரண்டு பெண்கள்தான் காரணம் என்று மாநில அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியுள் ளார். இவர் இப்படி உளறுவது முதன்முறை யல்ல. அதோடு, மற்ற பாஜககாரர்களின் உளறல்களும் எல்லையை மீறியதாகவே இருக்கிறது. ஒருவரையொருவர் மிஞ்ச வேண்டும் என்று போட்டி போடும் வகையில் அமைந்துள்ளது. பெண்கள் உடற்பயிற்சி நிலையங்களுக்குப் போகக்கூடாது, இந்து அல்லாதவரைத் திருமணம் செய்யும் பெண்களின் கால்களை உடைக்க வேண்டும், சகோதரிகளின் கிராமங்களில் தண்ணீர் குடிக்க மாட்டோம் என்பன உள்ளிட்ட மிரட்டல்களும் தொடர்கின்றன.  

மோதல்கள்  

குண்டுகள் பறந்து வந்து விழுந்தன. இரண்டு பக்கமும் மாறி, மாறி குண்டுகளை வீசிக்கொண்டார்கள். கத்திகளை வீசிக்கொண்டே எதிரெதிர் நின்று சண்டை போட்டனர். அந்தப் பகுதி யாருடைய செல்வாக்கின் கீழ் இருக்க வேண்டும் என்று இரண்டு தரப்பினரும் மோதிக் கொண்டார்கள். இத்தனைக்கும் அது ஒரு சிறிய ஊராட்சியாகும். இந்நாள் ஊராட்சித் தலைவருக்கும், முன்னாள் ஊராட்சித் தலைவருக்கும் இடையிலான பூசல்தான் குண்டுகளை வீசிக்கொள்ளும் அளவுக்கு சென்றிருக்கிறது. இருவருமே திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள்தான். மாவட்ட அளவிலும் கோஷ்டி சண்டை உண்டு. அதிலும் இவர்கள் வெவ்வேறு அணிகளைச் சார்ந்தவர்கள். இதுதான் மாநிலம் முழுவதும் திரிணாமுல் கட்சியின் இரண்டாம், மூன்றாம் மட்ட நிலவரம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.