கண்ணகி நகர் ‘தங்க மங்கை’ கார்த்திகாவுக்கு பாராட்டு விழா
சென்னை, அக். 28- தங்க மங்கை கார்த்திகாவால் சென்னை கண்ணகி நகர் உலகப்புகழ் அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், இன்னும் 20 நாட்களில் கண்ணகி நகர் பகுதியில் ஒரு புதிய மைதானம் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார். பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொண்டு வந்தவர் கபடி வீராங்கனை கார்த்திகா. இவருக்கு தமிழ்நாடு மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கண்ணகி நகர் கூடைப்பந்து மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தென் சென்னைக்குட்பட்ட திமுக எம்எல்ஏக்கள், மண்டலக் குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்று கார்த்திகாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர். தொடர்ந்த பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கார்த்திகாவின் தாத்தா எனது நண்பர். அறிவாலயத்தின் பாதுகாவலராக இருந்தார். தொண்டர்களின் பாதுகாவலராக இருந்தார். அந்த வகையில் கார்த்திகாவும் எனக்கு பேத்தி தான் என்றார். கார்த்திகாவின் வெற்றிக்கு அவரது பயிற்சியாளரின் பங்கு முக்கியமானது. கண்ணகி நகர் குறித்து கார்த்திகா பேசியதுதான் நெகிழ்ச்சியானது. அவர் பேசியதை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். இந்த விழாவை நேரு மைதானத்தில் வைத்து நடத்தியிருக்கலாம் என நினைத்தோம். ஆனால், அவரது பேச்சைக் கேட்ட பின்னர்தான், இங்கு நடத்துவதுதான் சரியாக இருக்கும் என நினைத்தோம் என்றார். கண்ணகி நகர் பெருமையை உலக அளவில் எடுத்துச் சென்றுள்ளார் தங்க மங்கை கார்த்திகா. கண்ணகி நகர் மக்கள் அனைவரின் முகமும் அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதை பார்க்க முடிகிறது. கார்த்திகாவின் வெற்றியை அனைவரது வெற்றியாக பார்க்கிறார்கள் என்றார். முதலமைச்சர், துணை முதலமைச்சரை கார்த்திகா நேரில் சந்தித்து பேசினார். அப்போது, கண்ணகி நகரில் கபடி மைதானம் வேண்டும் என கேட்டுள்ளார். அதன்படி, கண்ணகி நகரில் சின்தடிக் மைதானம் (Synthetic ground) கட்டுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. 20 நாட்களில் பணிகள் முடிந்து அதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
