நீண்டகாலமாக குடியிருக்கும் நிலங்களை வகைமாற்றி பட்டா தர அரசால் முடியாதா?
பிழைப்பு தேடி நகரங்களை நோக்கி மக்கள் திரள்வதால் தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னைக்கு வருகிறவர்களின் எண்ணிக் கை மிக அதிகம். சென்னையில் குடியேறுகிறவர்க ளில் பெரும்பாலோர் முறைசாரா தொழிலாளிகள். இவர்கள் சிறுகச் சிறுக சேமித்து இடங்களை வாங்கி குடியேறினாலும், அவர்களுக்கு பட்டா எட்டாக்கனி யாக உள்ளது.
பட்டா மறுக்கப்படும் அவலநிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மூன்றில் ஒரு பங்கு வீடுகளுக்கு பட்டா கிடையாது. ஒரே சர்வே எண்ணில் வசிக்கும் வசதி படைத்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசு, ஏழை எளிய மக்களுக்கு அதை மறுக்கிறது. பட்டா கேட்டு தொடர் போராட்டங்கள் நடந்தும், அரசு அவ்வப்போது சில திட்டங்களை அறிவிக்கிறது. H 2008ஆம் ஆண்டு – ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலங்களில் குடியிருப்போரின் ஆக்கிரமிப்பு களை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம். H 2018 ஆம் ஆண்டு – புறம்போக்கு நிலங்களில் ஐந்தாண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா வழங்கும் திட்டம். H 2024 ஆம் ஆண்டு – பெல்ட் ஏரியாவில் பட்டா இல்லா மல் நீண்டகாலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம். இத்திட்டங்களால் பட்டா உள்ளவர்களின் எண்ணிக்கை 95 சதவீதத்தைக் கடந்திருக்க வேண்டும். ஆனால், ஏழை எளிய மக்களுக்கு பட்டா கிடைப்பதில்லை. ‘நீர்நிலைப்பகுதிகளில் உள்ளதால் பட்டா வழங்க முடியவில்லை’ என்று ஒற்றை வரியில் பதில் சொல்லும் நிர்வாகம், பெரிய கட்டுமான நிறு வனங்கள், அரசு மற்றும் தனியார் கட்டடங்களுக்கு மட்டும் தங்குதடையின்றி நில வகைமாற்றம் செய்து பட்டா வழங்குகிறது. ஏன் இந்த முரண்பாடு?
பற்பல பெயர்கள் – மறுக்கப்படும் உரிமை
அரசு புறம்போக்கு, வண்டிப் பாட்டை புறம்போக்கு, ஓடைப் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு, ஏரி புறம்போக்கு, தாங்கல் புறம் போக்கு, மலை புறம்போக்கு என பல வகை நிலங்கள்; மேலும் பல்கலைக்கழகம், பாதுகாப்புத் துறை, ரயில்வே, இந்து சமய அறநிலைத் துறை, வஃக்போர்டு, சதுப்பு நிலம், அனாதீனம், லேண்ட் சீலிங் நிலம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இடம், வீட்டு வசதி வாரிய இடம் எனப் பல பெயர்க ளைச் சொல்லி, தலைமுறை தலைமுறையாக வசிக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பட்டா மறுக்கப்படுகிறது. இவர்கள் ஆக்கிரமித்துக் குடியேறியவர்கள் அல்ல. அந்தந்த காலத்தில் ஆண்ட கட்சிகள், அரசி யல்வாதிகள், அதிகாரிகளின் துணையோடு விற்கப் பட்ட நிலத்தை காசு கொடுத்து வாங்கி குடியேறிய வர்கள் என்பதை மறுக்க முடியாது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு சீட்டு (Allotment receipt) கொடுத்துள்ள இடத்திற்குக்கூட பட்டா மறுக் கப்படுகிறது.
நிலங்களை வகைப்படுத்தியது யார்?
நில நிர்வாகத்தின் காரணமாக, நிலங்களின் பயன்பாட்டிற்கேற்ப நிலங்களை அரசு அதிகாரி கள்தான் வகைப்படுத்தினர். நிலம் அதற்கான பயன்பாட்டினை இழக்கும்போது உட்பிரிவு செய்து மீண்டும் வகை மாற்றம் செய்கின்றனர். இது இயற்கை யானது. அரசு, பெருமுதலாளிகள், அரசியல்வாதி களின் தேவைக்கென்றால் வகைமாற்றம் செய்து பட்டா வழங்கப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு மறுக்கப்படுகிறது. போரூர் ஏரி, பொத்தேரி ஏரி, ராமாபுரம் ஏரி, அடை யாறு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், வன நிலம் போன்றவற்றை வகைமாற்றம் செய்து ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் பல்மருத்துவக் கல்லூரி, மியாட் மருத்துவ மனை, வேளாங்கண்ணி கல்லூரி போன்றவற்றுக்கு பட்டா வழங்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்பு, கட்டுமான நிறுவனங்களுக்கு வரைமுறையின்றி நில வகைமாற்றம், உட்பிரிவு செய்து பட்டா தரப்படுகிறது. ஏரி, குளம், ஆறு, வனம், சதுப்பு நிலமாக இருந்தவற்றை உட்பிரிவு செய்து பட்டா கொடுப்பதற்கு ஏற்ற வகையில் நிலங்களை வகைப்படுத்தியது அதே அரசு அதி காரிகள்தானே? அதுபோன்று, பல தலைமுறைகளாக வெறும் இரண்டு சென்ட், மூன்று சென்ட் நிலத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு மட்டும் நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்கிட முடியாதா? அரசு நினைத்தால் நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்குவது சாத்தியமே!
நீதிமன்ற ஆணைகளும் அரசின் மவுனமும்!
இத்தகைய அம்சங்களை கணக்கில் கொள்ளாத நீதிமன்றங்கள், நீர்நிலைகள் மீது அமர்ந்து கொண்டே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விடுகின்றன. மக்களின் வாழ்நிலை, பொருளாதாரச் சூழல், இடம் மாற்றுவதால் ஏற்படும் தாக்கம் குறித்த ஆய்வுகள் இல்லாமல் நீதிமன்றம் கண்மூடித்தன மான ஆணைகளை பிறப்பிக்கிறது. உண்மையை எடுத்துரைக்க வேண்டிய அரசு வழக்கறிஞர்கள் மவுனம் காக்கின்றனர். நீதிமன்றம் உத்தரவிட்டாலும் பெருநிறுவனங்க ளின் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாத நிர்வாகம், ஏழை- எளிய மக்களுக்கெதிரான நீதிமன்ற முணு முணுப்பைக் கூட நிறைவேற்ற புல்டோசர்களுடன் விரைந்து வருகிறது. அடையாறு கரையோரம் உள்ள 5 பகுதிகளைச் சேர்ந்த 2800 வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதற்குச் சான்று.
கோவில் நிலங்களுக்கான நியாயமான தீர்வு
சென்னை மற்றும் புறநகரில் கோவில் நிலங்களில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. தலைமுறை தலைமுறையாக குடியிருப்போரை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்றக் கூடாது. இவர்களை இந்து அறநிலையத் துறை சட்டம் 34 A-படி வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்த வேண்டும். நியாயமான வாடகை நிர்ணயித்து வசூ லிக்க வேண்டும் என குடியிருப்போர் போராடி வரு கின்றனர். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு இல வசமாகவும், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்க ளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பிலும், உயர் வரு வாய் உள்ளவர்களுக்கு சந்தை மதிப்பிலும் நிலத்தை வழங்க குடியிருப்போர் தயாராக உள்ளனர். அந்தத் தொகையை வங்கியில் வைப்பு வைத்து கோவி லுக்காகச் செலவிடலாம். இதை இந்துசமய அறநிலை யத்துறை சட்டமே அனுமதிக்கிறது. ஆனாலும் அரசு மௌனம் காப்பது ஏன்?
கோரிக்கைகளும் அரசின் கடமையும்
தமிழ்நாடு முழுவதும் ஆட்சேபகரமற்ற பகுதி களில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க அண்மையில் தமிழ்நாடு அரசு ஆணை வெளி யிட்டுள்ளது. ஆனால், ஆட்சேபகரமான நிலம் எது? 50 ஆண்டுகளுக்கு மேலாக நில அளவீடு (சர்வே) செய்யப்படாத நிலையில், நிலங்கள் தனது பயன் பாட்டை இழந்து குடியிருப்பு, தொழிற்சாலை, சாலை, மருத்துவமனை என மாறியுள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, நிலங்களை மறு அளவீடு செய்ய வேண்டும். தற்போதுள்ள நிலத்தின் தன்மைக்கேற்ப நில வகைமாற்றம் செய்து, குடி யிருப்பவர்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும். நீர்நிலைப் பகுதிகளை முறையாகப் பாதுகாக்க வேண்டும். இது அரசின் கடமை, பொறுப்பு. எனவே, கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்னிறுத் தப்படுகின்றன: Hஅனைத்து வகை புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு இலவச குடி மனைப் பட்டா வழங்க வேண்டும். H பயன்பாட்டை இழந்த நிலங்களில் வசிப்போருக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். H அனாதீனம் மற்றும் தனியார் நிலத்தில் பல தலை முறைகளாக வாழ்வோருக்கு அரசாங்கம் தலை யிட்டு புதிய அரசாணை வெளியிட்டு பட்டா வழங்க வேண்டும். H நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் / வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுத் தொகையைச் செலுத்தியவர்களுக்கு கிரையப் பத்திரம் வழங்க வேண்டும். H கோவில் நிலங்களில் குடியிருப்போரை வாடகை தாரராக முறைப்படுத்தி நியாயமான வாடகை வசூலிக்க வேண்டும். Hநீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் உண் மையை எடுத்துரைக்க வேண்டும், மக்களை வெளியேற்றும் உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 16 அன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணி நடைபெற உள்ளது. முதலமைச்சரைச் சந்தித்து நேரடியாக மனு கொ டுக்கப்பட உள்ளது.
