கிழக்கில் உதிக்காத இந்தியா - ஆசியாவில் சரிந்த மரியாதை!
இந்தியாவின் ‘கிழக்கில் செயல் படுவோம்!’ (Act East) கொள்கை, உறுதியான பொருளாதார ஈடுபாடு இல்லாத வெறும் பாசாங்குத் தனமான முழக்கமாகவும், வார்த்தை ஜாலமாகவும் மட்டுமே இருந்து வருகிறது என்ற விமர்சனத்தை உறுதிப்படுத்தும் விதமாக, அண்மைய வர்த்தகப் புள்ளிவிவ ரங்கள் அதிர்ச்சியளித்துள்ளன. 2024-25 நிதியாண்டில், இந்தியா-ஆசியான் வர்த்தகத்தில் ₹3.78 லட்சம் கோடி பற்றாக்குறை பதிவாகியுள்ளது. இந்த வர்த்தக இடைவெளி, 2010இல் ஆசியான் -இந்தியா வர்த்தகப் பொருட்கள் ஒப்பந்தம் (AITIGA) கையெழுத்தான போது இருந்த பற்றாக்குறையை விட ஆறு மடங்கு அதிகமாகும். இந்த வர்த்தக நெருக்கடி, ஆசியான் பிராந்தியத்தில் இந்தியாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு வேகமாக சரிந்து வருவதைப் பிரதிபலிக்கிறது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அக்டோபர் 27, 28 தேதிகளில் நடைபெற்ற 47ஆவது ஆசியான் உச்சிமாநாட்டில், பிற உலகத் தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டபோது, பிரதமர் மோடி மெய்நிகர் முறையில் மட்டுமே பங்கேற்றது, இந்தியாவின் பொருளாதார நெருக்கடியையும், பிராந்தியத்தில் குறைந்து வரும் நம்பகத்தன்மையையும் சுட்டிக்காட்டுகிறது. எண்கள் சொல்லும் கசப்பான கதை 2024-25 நிதியாண்டில் ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் மொத்த வர்த்தகம் ₹10.29 லட்சம் கோடியாக ($123.12 பில்லியன்) உயர்ந்திருந்தாலும், அதன் கட்டமைப்பு பலவீனமாக உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி வெறும் ₹3.26 லட்சம் கோடி மட்டுமே; ஆனால் இறக்குமதி ₹7.04 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 2008-09 முதல் 2021-22 வரையிலான 13 ஆண்டுகளில், ஆசியான் நாடுகளில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 234.4% வளர்ச்சி கண்டது, ஆனால் நமது ஏற்றுமதி வெறும் 130.4% மட்டுமே வளர்ந்துள்ளது. இது, இந்தியத் தயாரிப்புகள் ஆசியான் சந்தையில் தங்கள் போட்டித்திறனை இழந்து வருகின்றன என்பதையே தெளிவுபடுத்துகிறது. முக்கிய இறக்குமதிப் பொருட்களின் அபாயகரமான சார்புநிலை இந்தியா, ஆசியானில் இருந்து முக்கியமாக மூன்று பெரிய பொருட்களை இறக்குமதி செய்கிறது, இது மொத்த இறக்குமதியில் கிட்டத்தட்ட 52% ஆகும். * மின்னணு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள்: ₹1.23 லட்சம் கோடி மதிப்புக்கு வியட்நாம், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. * நிலக்கரி: மின் உற்பத்திக்குத் தேவை யான நிலக்கரி, முக்கியமாக இந்தோனே சியாவிலிருந்து ₹1 லட்சம் கோடி மதிப்புக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. * தேங்காய் எண்ணெய் : இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து ஆண்டுக்கு ₹81,750 கோடி மதிப்புக்கு இறக்குமதி யாகிறது. இந்த அபாயகரமான சார்புநிலை, இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்துறை வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது. சமச்சீரற்ற ஒப்பந்தமும் சீனாவின் நுழைவும் 2010 ஆசியான் - இந்தியா வர்த்தக (AITIGA) ஒப்பந்தத்தின் அடிப்படை பலவீனம் அதன் ஒருதலைப்பட்சமான அமைப்புதான். இந்தியா தனது இறக்குமதி வரிகளில் 71-74% பொருட்களுக்குச் சலுகை வழங்கியது. ஆனால், ஆசியானின் மிகப்பெரிய பொருளாதாரமான இந்தோனேசியா வெறும் 41-44% பொருட்களுக்கு மட்டுமே சலுகை அளித்துள்ளது. இதன் விளைவாக, இந்தியத் தயாரிப்புகள் ஆசியான் நாடுகளில் 40% முதல் 80% வரையிலான உயர் வரிகளை எதிர்கொள்வதால், இந்தியப் பொருட்களால் அங்கு போட்டியிட முடியவில்லை. மேலும் கவலைக்குரிய விஷயம், ஒப்பந்தத்தில் வலுவான மூலத் தொடர்பு விதிகள் (Rules of Origin) இல்லாதது ஆகும். இதனால், சீனாவில் தயாரிக்கப்பட்ட இரும்பு எஃகு, மின்னணுப் பொருட்கள் போன்ற பல சரக்குகள் ஆசியான் நாடுகளில் சிறிய செயலாக்கம் செய்து “ஆசியான் தயாரிப்பு” என்ற முத்திரை யுடன் குறைந்த வரியில் இந்தியாவுக்குள் நுழைகின்றன. இது இந்திய உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பெரிதும் பாதிக்கிறது. தேங்கி நிற்கும் மறுஆய்வு முயற்சிகள் இந்தச் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில், மேற்கண்ட (AITIGA) ஒப்பந்தத்தின் மறுஆய்வு மே 2023இல் தொடங்கப்பட்டது, 2025இல் முடிப்ப தை இலக்காகக் கொண்டு இது துவங்கியது. ஆனால், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. உண்மையில், இந்த மறுஆய்வு ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஐந்து ஆண்டு களுக்கும் ஒருமுறை என்ற அடிப்படையில் 2019லேயே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியா இந்த மறுஆய்வை ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போட்டது. இதற்கான முறையான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. மோடி அரசின் தவறான பாதை 2019இல் இந்தியா, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் இருந்து (RCEP) விலகியது ஒரு மிகப்பெரிய தவறாகப் பார்க்கப்படுகிறது. ஆசிய பிராந்திய நாடுகளை நம்புவதைவிட, அமெரிக்காவுடனான உறவுக்கே மோடி அரசு முக்கியத்துவம் அளித்த பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, இந்தியாவை உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பிலிருந்து ஒதுக்கி வைத்தது. இதன் விளைவாக, சீனா இந்தப் பிராந்தியத்தில் தடையற்ற முதன்மையான பொருளாதார சக்தியாக மேலும் வலுப்பெற்றுள்ளது. சிங்கப்பூரின் புகழ்பெற்ற ராஜரத்னம் சர்வதேச உறவுகள் பள்ளி (RSIS) 2024இல் நடத்திய கணக்கெடுப்பில், ஆசியான் அதிகாரி கள் மற்றும் வணிகர்களில் 44.7% பேர் இந்தியா மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ள னர். “இந்தியா வார்த்தைகளில் வல்லமை வாய்ந்தது, ஆனால் செயல்பாட்டில் பலவீன மானது” என்ற ஆய்வாளர்களின் கருத்து, மோடி அரசின் கொள்கையின் ஊச லாட்டத்தைக் காட்டுகிறது. உள்கட்டமைப்புத் திட்டங்களில் பின்னடைவு ‘கிழக்கில் செயல்படுவோம்’ கொள்கையின் கீழ் அறிவிக்கப்பட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களும் பெரும் தாமதத்தில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களை தென்கிழக்கு ஆசியா வுடன் இணைக்கவிருந்த இந்தியா-மியான்மர் -தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை மற்றும் கலதான் பல்முறை போக்குவரத்து திட்டம் ஆகியவை மியான்மர் அரசியல் நிலையற்ற தன்மை, நிதி திரட்டுதல் மற்றும் அதிகாரத்துவ தாமதங்களால் ஸ்தம்பித்துள்ளன. 2025 இறுதிக்குள் இந்தியா - ஆசி யான் வர்த்தக ஒப்பந்தம் (AITIGA) மறுஆய்வு முடிக்கப்பட வேண்டும் என்ற இலக்கு உள்ளது. எனினும், இந்தியாவின் உண்மையான சவால் உள்நாட்டு உற்பத்தித்திறன், சர்வதேசத் தரம் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்து வதில்தான் உள்ளது. இல்லையேல், இந்தியா தனது சொந்த பிராந்தியத்திலேயே ஓரங்கட்டப் படும் ஆபத்து உண்மையாகிவிடும்.
