8 ஆண்டு சட்டப் போராட்டம் 17 பேர் விடுதலை : வழக்கறிஞர்களுக்கு சிபிஎம் நன்றி
திருச்சி, அக். 28- திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் தளுகை முருங்கப்பட்டியில் இயங்கி வந்த தனியார் வெடிமருந்து ஆலை, கடந்த 1-12-2016 அன்று வெடித்துச் சிதறியதில் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 19 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. தொடர்ந்து வெடிமருந்து ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் அளித்த தடையில்லாச் சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும், அப்பகுதி மக்கள் விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து, ஆலையை நிரந்தர மாக மூடக்கோரி பல கட்ட போராட்டங் களை நடத்தியதோடு பல வழக்கு களை சந்தித்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி, பொதுமக்களிடம் கருத்து கேட்காமலே மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடையில்லா சான்று வழங்கியது. இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்தது. இதனைக் கண்டு கொள்ளாமல் ஆலை நிர்வாகம், ஆலையை மீண்டும் திறக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்ததைக் கண்டித்து, சிபிஎம் மற்றும் பொதுமக்கள் இணைந்து த.முருங்கப் பட்டியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆலை நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், தங்கள் தொழிலாளர்களை தாக்கியதாகவும் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஎம் அப்போதைய உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் டி.முத்துக் குமார், தற்போதைய ஒன்றிய செயலா ளர் தளுகை இரா.முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, திருச்சி மாவட்ட 2 ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், திங்களன்று (அக்.27) மேற்படி குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் திருச்சி மாவட்டம் 2ஆவது கூடுதல் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் தொடர்ந்து வாதிட்டு வெற்றி பெற்று தந்த மூத்த வழக்கறிஞர் சு.முத்துகிருஷ்ணன், கே.டி.சிவகுமார் ஆகியோருக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.
