states

img

வாக்குச்சாவடி கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு மே.வங்க சிபிஎம் நடவடிக்கை

கொல்கத்தா, மே 21- மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவதற் கான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நகர்வுகளை சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி செயல்பாட்டாளர்கள் தடுத்தனர்.

திங்களன்று (மே 20) வாக்குப்பதிவு நடைபெற்ற ஏழு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றவர்களை எதிர்கொள்ள பொதுமக்கள் முன்வந்தனர். திரிணாமுல், பாஜகவினர் இடது முன்னணி, காங்கிரஸ் வேட்பாளர்களின் முகவர்களைத் தாக்கி வெளியேற்றினர்.  அங்கு சிபிஎம், காங்., வேட்பாளர்கள் தலையிட்டதன் பேரில் சாவடிகளுக்கு அவர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டனர். செராம்பூர், ஹவுரா, ஆரம்பாக், பாரக்பூர், ஹூக்ளி, உல்பேரியா, பொங்கான் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், இடது முன்னணி ஆதரவுடன் காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிட்டன. இவர்களுக்கு முக்கிய போட்டியாளர்கள் திரிணாமுல் மற்றும் பாஜக வேட்பாளர்கள்.

செராம்பூரின் சிபிஎம் வேட்பாளர் திப்சிதா தார்-ஐ டோம்ஜூரில் திரிணாமுல் கட்சியினர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் உள்ளூர்வாசிகள் தலையிட்டு தாக்கியவர்களை விரட்டியடித்தனர். ஹவுராவில் உள்ள சிபிஎம் வாக்குச் சாவடி அலுவலகம், திரிணாமுல் கட்சியினரால் அழிக்கப்பட்டது, ஆனால், அது வேட்பாளரின் தலைமையில் மீண்டும் நிறுவப்பட்டது. பாரக்பூரில் உள்ள மண்டல்பாடாவில் திரிணாமுல் - பாஜக தொண்டர்கள் மோதிக்கொண்டனர். அங்கு மத்தியப் படையினர் தடியடி நடத்தினர். வன்முறைகளுக்கு எதிராக துணிச்சலுடன் வாக்களித்த அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முஹம்மது சலீம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

;