tamilnadu

தாய்க் கழுகு தொடங்கும் துதிப்பாடலை - இரா.எட்வின்

காசா
ஒரு பள்ளியின்
சுற்றுச்சுவருக்கும்
சிதிலமடைந்த
ஒரு கட்டிடத்திற்குமிடையே
பதுங்கிப் பதுங்கி
சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த சிறுவனை
இஸ்ரேலியத் துப்பாக்கி ஒன்று
சுட்டுத் தள்ளியதை எப்படியோ
மோப்பம் பிடித்து
வந்து சேர்கின்றன
இரண்டு பிணந்தின்னிக் கழுகுகள்

வழக்கமாக
தின்னப் பிணம் கொடுத்த கடவுளுக்கு
நன்றி சொல்லி
தாய்க் கழுகு தொடங்கும் துதிபாடலை
ஆமேன் சொல்லி முடித்துவைக்கும்
இளைய கழுகு
துப்பாக்கியையும் 
ரவைகளையும் தந்த
அமெரிக்காவையும்
குறிபார்த்து சுடும் ஆற்றலை
சுட்டவனுக்கு கொடுத்த 
கடவுளையும் சபித்தது

முதல் கொத்திற்காக 
ஆமேனை எதிர்பார்த்திருந்த
தாய்க்கழுகிற்கு
வரமல்ல
தம் முன்னே கிடக்கும் உணவு 
சாபம் என்று தோன்றியது
போய்விடலாமா மகனே என்கிறது
நாம் போனால்
குப்பை வண்டியில்
குப்பையோடு குப்பையாய்
இந்த குழந்தையின் உடலை
கொண்டு போவார்கள்

இந்த உடலை புசிப்பது
இந்த உடலுக்கான நம் மரியாதையும்
கடவுளுக்கான நமது சாபமும் என்றது
இளைய கழுகு

குழந்தையின் உடலில்
அலகை இறக்குகிறது
தாய்க்கழுகு