tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணன்

புதிய கற்காலத்திய  கட்டிடக் கலை

ஐபீரிய தீபகற்பத்திலுள்ள டால்மென் மெங்கா (Dolmen of Menga )எனும் கட்டட அமைப்பு வியப்பிற்குரியதாகும். 6000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இது இன்றும் அப்படியே உள்ளது. இது குறித்த ஆய்வு ஒன்று புதிய கற்கால மனிதர்கள் மிகுந்த திறமையும் அறிவும் கொண்டவர்கள்; சிக்கலான பொறியியல் பிரச்சனைகளை தீர்ப்பதில் வல்லவர்கள் என்று காட்டியுள்ளது. இந்த ஆய்வில் படிவ இயல், புதைபொருளியியல், படிம இயல் மற்றும் பாறையியல் ஆகியவை அடங்கியுள்ளன. 150 மெட்ரிக் டன் வரை எடையுள்ள கற்களால் கட்டப்பட்ட இதன் அறை 90 அடி நீளமுள்ளது. சுவர்களும் கூரையும் பெரும் பாறைகளால் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மைல் தூரத்திலிருந்து பெரும் பாறைகளை கொண்டுவந்துள்ளனர். இதற்காக மரப்பாதை அமைத்து அதன் மீது ஸ்லெட்ஜ் அமைப்புகள் பயன்பட்டிருக்கலாம். மேலிருந்து கீழிறங்கும் இதற்கு கூடும் வேகம்(accelaration) மற்றும் பிரேக் ஆகியவை குறித்த ஞானம் தேவைப்பட்டிருக்கும். கூரையை தாங்கும் சுவர்களும் தூண்களும் உறை போன்ற அமைப்புக்குள் இறக்கப்பட்டுள்ளன. சுவர்கள் சற்று உள்பக்கமாக சாய்ந்து ட்ரபீசிய வடிவில் உள்ளது. இது கூரை சிறியதாகவும் பளு பரப்பல் சமமாகவும் இருப்பதை உறுதி செய்கின்றன. புதிய கற்கால மனிதர்களின் மேதமையை இது காட்டுகிறது. அதோடு நம் முன்னோர்களின் திறமை குறித்து நாம் திறந்த மனத்தோடு அணுக வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆய்வு ‘science Advances’ என்கிற இதழில் வந்துள்ளது.

புதிய நீர் பீய்ச்சி இயந்திரம்

கடினமான பொருட்களை அறுக்கும்போது வெப்பம் உண்டாகி பொருட்களுக்கு சேதம் உண்டாகிறது. இதை தவிர்க்கும் விதமாக அப்ரேசிவ் (abrasive) எனப்படும் அறுக்கும் பொருள் கலந்த நீர் பீய்ச்சி இயந்திரத்தை(waterjet machine) சென்னை ஐஐடியின் உதவியோடு புத்தாக்க நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு புத்தாக்க நிறுவனத்தின் உதவியும் கிடைத்துள்ளது. சாதாரண நீர் பீய்ச்சி இயந்திரங்கள் மென்மையான பொருட்களை மட்டுமே அறுக்கும். மேலும் இப்போது சந்தையில் கிடைக்கும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை. அதன் விலை 1.5 கோடி . இந்த நிறுவனம் தயாரித்துள்ள இயந்திரம் 45இலட்சத்திற்கு விற்பனைக்கு வரலாம். ரப்பர், துணி, நுரைரப்பர், தோல், பிளாஸ்டிக்ஸ், ஓடுகள், கல்கண்ணாடி, உணவுப் பொருட்கள், பேப்பர் மற்றும் பிற தீப்பற்றக்கூடிய பொருட்களை வெப்பம் உண்டாகாமல் இந்த இயந்திரம் வெட்டும். எனவே பாதுகாப்பு, விண்வெளி, எண்ணெய், எரிவாயு துறைகளில் இது பலனளிக்கக்கூடிய தீர்வாகும் என்கிறார் நிறுவனத்தின் தலைவர் குகன் குணசேகரன். சோதனை மாதிரி வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளதாம். தொடர் இயங்கு தொங்கு நீர் பீய்ச்சி (continuous operation of a suspension jet )எனும் இதன் மய்யக் கருத்திற்கு உரிமம் கோரப்பட்டுள்ளது. இதை தயாரித்து வணிகரீதியில் இயங்குவதற்காக தமிழ்நாடு அரசு 2.5 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாம். இந்த நிறுவனத்திற்கு பேராசிரியர்கள் டி.முருகானந்தம், என்.ரமேஷ் பாபு, எஸ்.சத்யன் மற்றும் முனைவர் சத்யநாரயணா சேஷாத்ரி ஆகியோர் வழிகாட்டியாக உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவும் அகமண முறையும்

செயற்கை நுண்ணறிவு தற்போது கிடைக்கும் தரவுகளின் வகைப்பாடுகளை ‘போல’ செய்வதற்கே பயிற்றுவிக்கப்படுகின்றன. எல்லா தரவுகளையும் இதற்கு பயன்படுத்த முடியாது. மிகத் தரமான தரவுகள் அதுவும் பெரும் அளவில் தேவை. ஆனால் இப்போது 2022இலிருந்து மிகவும் உபயோககரமான செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பரவலாக கிடைப்பதால் அவற்றை பயன்படுத்தி ஏராளமான உள்ளீடுகள் இணையதளத்தில் ஏற்றப்படுகின்றன. மனிதர்களால் உண்டாக்கப்பட்ட தரவுகளைவிட இவை மலிவானது ; அறநெறி ரீதியாகவோ சட்ட ரீதியாகவோ இவை கேள்விக்குள்ளாக்கப்படாது என்பதால் இவற்றைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு ‘பயிற்சி’ கொடுக்க முடியுமா என்று ஆய்வாளர்கள் சோதித்து வருகிறார்கள். ஆனால் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட மிகத் தரமான தரவுகள் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பயிற்சி கொடுக்கப்பட்டால், அடுத்தடுத்த மாதிரிகள் ஊனமடைந்து வருகின்றனவாம். ஒரு ஒப்பீட்டிற்கு சொல்ல வேண்டுமென்றால் சொந்தத்தில் ஏற்படும் மண உறவுகள் போல. இது போன்ற பயிற்சியினால் கிடைக்கும் மாதிரிகள் தரத்திலும் பன்முகத் தன்மையிலும் குறைபாடு உடையவனாக உள்ளன. தரம் என்று சொல்வது உபயோகரமானதாக, தீங்கு விளைவிக்காத நேர்மையான மாதிரிகள். பன்முகத் தன்மை என்று சொல்வது மக்களின் கலாச்சார, சமூக புரிதலின் அடிப்படையில் வெளியீடுகள் வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்பது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட தரவுகள் 2026க்குள்ளேயே தீர்ந்துவிடும் என்று சில மதிப்பீடுகள் கூறுகின்றன. பொதுவாக கிடைக்கும் தரவுகள் அல்லாமல் ஷட்டர்காக், அசோசியேட்டட் பிரஸ், நியூஸ்கார்ப் போன்ற பெரும் நிறுவனங்களிடம் ஏராளமான மனிதர்களால் உருவாக்கப்பட்ட தரவுகள் சொந்தமாக உள்ளன. எனவே இவற்றுடன் தனிப்பட்ட கூட்டு அமைக்க செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. எதிர்காலத்தில் பல்தரப்பட்ட ஏஐ தளங்களை பயன்படுத்தி உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே நெறிப்படுத்தும் அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு துறையில் ஏகபோகத்தை கட்டுப்படுத்தி பொது நலனை நோக்காகக் கொண்ட தொழில் நுணுக்கங்களை வளர்க்கும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்க வேண்டும்.