சென்னை, மே 16 - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுள் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த மாணவர் வா. மதனின் மேற்படிப்புக்கான செலவை தமிழக அரசே ஏற்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் தோ. வில்சன், பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி ஆகியோர் எழுதியுள்ள கடிதம் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம் எல்லப்பன் நகர் பகுதியை சார்ந்த வாசுதேவன் - சரிதா தம்பதியரின் மகன் வா. மதன். இவர் 100 சதவிகிதம் பார்வைக் குறைபாடு (Low Vision) உடையவர் ஆவார். இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 100 சதவிகிதம் பார்வைத் திறன் குறைபாடு உள்ள நிலையிலும் சிரமங்களை பொருட்படுத்தாமல் பள்ளி ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்போடும், பெற்றோரின் உதவியோடும் மிகுந்த ஆர்வத்துடன் கல்வி பயின்று வந்தார். இந்நிலையில், தற்போது வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின்போது தமிழ் - 87, ஆங்கிலம் - 97, கணிதம் - 100, அறிவியல் - 96, சமூக அறிவியல் - 97 என மொத்தம் 477 மதிப்பெண்கள் பெற்று அவர் படித்த அரசு பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதோடு மட்டுமின்றி தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களில் முதல் மாணவராகவும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் கல்லூரி ஆசிரியர் ஆவதை குறிக்கோளாக கொண்டுள்ளார் இவர், ஆனால் அவரது குடும்பம் மிகுந்த ஏழ்மை நிலையிலேயே உள்ளது. எனவே, மாற்றுத் திறனாளி மாணவரான வா. மதன் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவரது குடும்பச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவரது மேற்படிப்பிற்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று எமது சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.