science

img

விளக்குகள் அங்கே எரியட்டும்....

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அங்கம் வகிக்கும் அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கத்தின் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் சட்டர்ஜி, பொதுச் செயலாளர்  பேராசிரியர் ராஜமாணிக்கம் மற்றும் பொருளாளர்  பேராசிரியர் கிருஷ்ணசாமி ஆகியோரின் கூட்டறிக்கை..

கோவிட்-2019 தொற்று நோய்க்கு எதிரான செயல்பாடுகளின் காரணமாக ஐஸ்லாந்து நாட்டில்  நம்பிக்கை வெளிச்சம் பரவியது. சீனாவில், முதல் கொரானா  வைரஸ்  தொற்று  கண்டறியப்பட்ட போதே, ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெண் பிரதமரும் இடது பசுமை இயக்கத்தின் முன்னாள்  தலைவரும் கொரானா தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிக வலுவாக முன்னெடுத்தார். ஐஸ்லாந்து நாடு கொரானாவை  கண்டறியும் பரிசோதனை கருவிகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து இலவசமாக பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. தினந்தோறும் நோய் தாக்கம் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்  பற்றி பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு வந்தது.

இதன் காரணமாக பிப்ரவரி மாத இறுதியில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.  இதற்கு காரணம் வெளிப்படை தன்மை. மேலும்  மக்களை அறிவியல் பூர்வமாக சிந்திக்க வைத்தது, நட்புடன் மக்களை அணுகியது ஆகியவை ஆகும். நம் நாட்டின் கேரள மாநிலத்தை காட்டிலும் ஐஸ்லாந்து நாடு சிறிதாக இருக்கலாம். ஆனால் கொரானா பரவலைத்  தடுக்க அனைவரும்  கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அந்நாட்டில் இருக்கிறது.

ஜனவரி 30 ஆம் தேதி அன்று கோவிட் 19 எனக் கூறப்படும் முதல் தொற்று இந்தியாவில் உறுதி செய்யப்பட்டது. மத்திய அரசு அறிவியல் தொழில்நுட்ப உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து கொரோனா  வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முடிவுகளை வேகமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தது. ஆனால் ஏப்ரல்  முதல் வாரம் வரை உள்நாட்டில்  வடிவமைக்கப்பட்ட அப்படியான  ஒரு பரிசோதனை கருவிகளை கண்டறிய முடியவில்லை. நமது பரிசோதனை விகிதம்  மிகவும் குறைவு.  நமது தேவையைக் காட்டிலும் மிக மிக குறைவு. மருத்துவ பணியாளர்கள் மற்றும்  சுகாதார பணியாளர்களுக்கு தேவையான தற்காப்பு சாதனங்கள் மிகமிக பற்றாக் குறையாக இருக்கிறது.

கோவிட் 19 நோயாளிகளுக்கு  ஏற்ற  சிகிச்சை அளிக்கும் வகையில்  உள்கட்டமைப்பு வசதி மருத்துவமனைகள் இல்லை.  இவை  நகரங்களில் மோசம் ‌  கிராமங்களில் அதை விட பரிதாபமாக  இருக்கிறது. 
மார்ச் 24ஆம் தேதியன்று, நான்கு மணி நேர அவகாசத்தில், அறிவிக்கப்பட்ட  திட்டமிடப்படாத நாடு தழுவிய 21நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக எதிர்பார்த்திராத, கட்டுப்படுத்த முடியாத திடீரென்று  வேலை இழந்த மக்கள் தாங்கள் வேலை செய்துகொண்டிருந்த இடங்களிலிருந்து எந்தவித நம்பிக்கையும் இன்றி பசியோடு கூட்டம் கூட்டமாக வெளியேறத்  தொடங்கினர்.விவசாயிகளுக்கோ, அறுவடைக்கு தயாராக இருந்த வேளாண் பொருட்கள் மற்றும் இதர வேளாண்மை பொருட்கள் பெருமளவு நாசமடைந்து. விவசாயிகள் பெரும் அழுத்தத்திற்கும் நட்டத்திற்கும் ஆட்பட்டு இருக்கின்றனர். 

சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகியவையும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் எண்பது விழுக்காடு அமைப்பு சாரா தொழிலாளர்கள்,  தினக் கூலி தொழிலாளிகள், சுயவேலை  செய்வோர்  ஆகிய  மக்கள்  தாங்கள் இருந்த  வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.மாநிலங்களுக்கு இடையேயான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் எடுத்துச் செல்லலாம்  என்று அனுமதி அளிக்கப்பட்ட பின்னரும் கூட அத்தியாவசிய பண்டங்கள் உணவுப் பொருட்கள் ஆகியவை பல இடங்களில் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. சில்லறை விற்பனை அங்காடிகளில் கையிருப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகள் கூட  அனுமதிக்கப் படுவதில்லை. அவசர தேவைக்கு கூட வாகனங்கள் கிடைப்பதில்லை.

மார்ச் மாதம் இரண்டாவது வாரம் வரை உள்நாட்டு வெளிநாட்டினரை தாராளமாக  எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி அரசு  அனுமதித்தது. அவர்கள் இந்தியா முழுவதும் சுதந்திரமாக சுற்றித் திரிந்தார்கள். நோய்தொற்று இருப்போரை தேடிக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், பரிசோதித்தல் என்று தொற்றுநோய் கட்டுப்பாட்டின்  அம்சங்கள் எதுவும் கடைப்பிடிக்கப் படவில்லை. அரசின் இத்தனை கவனக் குறைகளையும் தவறான நடவடிக்கைகளையும் மறைத்து விட்டு  அரசின் செய்திகள் செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலமாக கோவிட் 19 நோயிலிருந்து மீண்டு வருவது பொதுமக்களின் பொறுப்பு என்பதுபோல் மக்களைப் பொறுப்பாளியாக ஆக்க முயல்கிறது அரசு.

மருத்துவப்  பணியாளர்கள் மற்றும்  சுகாதாரப் பணியாளர்கள் அரசு ஊழியர்கள் காவல்துறையினர் ஆகியோருடைய பாதுகாப்புக்காக ஊரடங்கை அனுஷ்டிப்போம் என்று கூறிவிட்டு, மக்களைக் கூட்டாக கைதட்ட சொல்லியும் விளக்கு ஏற்ற சொல்லியும் பாத்திரங்களை பால்கனியில்  இருந்தும் வீட்டு வாசலின் முன்பு நின்று தட்ட சொல்லியும் கொரோனா தொற்று அபாயத்தை தடுக்கும்  தனிமனித  இடைவெளியைக் காத்தல் என்ற அடிப்படைக்கே குந்தகம் விளைவிக்கும் செயல் நிறைவேறியது. இது  நோய் தொற்று அபாயத்தை அதிகரித்துள்ளது. இதனை ஒட்டி எண்ணற்ற போலி அறிவியல் கோட்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.ஒலி அலைகள் வைரஸை கொல்லும் நாசாவின் சாட்டிலைட்களே இதனைப் பதிவு செய்து உள்ளது என்ற கட்டுக் கதைகள்  இவற்றின் உச்சம்.  ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று மீண்டும் "நாம் ஏப்ரல் 5 அன்று இரவு ஒன்பது மணிக்கு 9 நிமிடங்கள் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி  டார்ச் லைட்டை அடிக்க வேண்டும்" என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டி மீண்டும் போலி  அறிவியல் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது இதில் ராமபாணம் கொரோனாவை  எதிர்த்து போரிடும் ஒளி குவாண்டம் தியரி கோட்பாடுகள் என மயிர்க்கூச்செறியும் புனைகதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது...


இத்தாலியில் 'ஒளி எழுப்புங்கள்' என்ற  நிகழ்வைப் போல அமெரிக்காவில்  ஏப்ரல் 1 ஆம் தேதி 7.00 மணிக்கு  "வெளிச்சம்  அங்கே எரியட்டும்" என்று  முன்னெடுத்தார்கள்.இவை மக்களை ஒன்றுபடுத்தி  நோய்க்கு எதிரான சமூக இயக்கங்களை உருவாக்க  மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் இது அரசின் அதிகாரத்தால் உருவாக்கக் கூடாது.  மக்களின் உணர்வு மட்டத்தை வளர்த்தெடுக்க ஒற்றுமைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆதரிக்கலாம். உயிரைப்  பணையம் வைத்து கோவிட் 19 நோய் தொற்றுக்கு எதிராக மருத்துவ பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.. அவர்கள் தற்காப்பு கவசங்கள் இல்லாமல் இருசக்கர வாகனங்களின்  ஹெல்மெட்டுகள் சாதாரண சன் கிளாஸ்கள் நீச்சல் கண்ணாடிகள் பிளாஸ்டிக் சீட்டுகள் ஆகியவற்றை அணிந்துகொண்டு நோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் பொழுது, அவர்கள் பின்னால் மறைந்து கொண்டு  இத்தகைய செயல்களில்  ஈடுபடக்  கூடாது. 

ஒற்றுமை என்பதே கூட்டுச் செயல்பாடு. 
ஏழைகளின் மீது அக்கறை காட்டுதல்  வஞ்சிக்கப்பட்டு உள்ள தொழிலாளர்கள் மற்றும் அனைத்து பகுதி மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மக்களை மனதில் கொண்ட  திட்டமிட்ட செயலாக்கம்  அரசிடம்  தேவை. இதனை மனதில் கொண்டு கேட்டுக் கொள்கிறோம்.

1.மருத்துவ பணியாளர்களுக்கு போதுமான தற்காப்பு சாதனங்கள் வழங்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள். 

2. போதுமான பரிசோதனைகளை செய்து கொரோனா நோயாளிகள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள்.  

3.ஏழை மக்களுக்கு போதுமான உணவு வழங்கி  ஒளி ஏற்றுங்கள்.

4. விவசாயிகள் தொழிலாளர்களுக்கு போதுமான மருந்துகள் பொருளாதார உதவிகள் செய்து ஒளி ஏற்றுங்கள்.

5 அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த அமைப்புக்கள்  *Let there be light in the people's lives, with food testing and protection*  பிரதமருக்கு டிவிட் செய்யுங்கள்.  

இந்த கோரிக்கைக்கு ஆதரவு தரும் படி அனைத்து இயக்கங்களையும் கேட்டுக் கொள்ளுங்கள்.

ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு பைஸ் அகமது பாடலைக் கேளுங்கள். பாடுங்கள். என அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
 

;