குறுகலான பாதையில் நடைப்பயிற்சி செய்யும் ஹுமனோய்ட் ரோபோவை ஐஎச்எம்சி நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஃப்ளோரிடாவில் மாகாணத்தின் பென்சகோலாவில், சர்வதேச ரோபோ தொழில்நுட்ப நிறுவனமான ஐஎச்எம்சி (IHMC - The Institute for Human & Machine Cognition) ஹுமனோய்ட் ரோபோ ஒன்றை வடிவமைத்து வருகிறது. இந்த ரோபோவின் எடை 75 கிலோ ஆகும். இந்த ரோபோவின் ஒவ்வொரு பயிற்சியும் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பயிற்சியின் ஒரு பகுதியாக, குறுகலான பாதையில் மனிதரை போல் பேலன்ஸ் செய்து இந்த ரோபோ நடைப்பயிற்சி செய்யும் வீடியோவை அந்நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஐஎச்எம்சி ரோபாடிக்ஸ் கூறுகையில், ” வளைவு நெளிவாக இருக்கும் குறுகலான பாதையையும் எளிதில் கடப்பதற்கு பாதை திட்டமிடல் வழிமுறையை (Path Planning Algorithm) பயன்படுத்தி, லேசர் சென்சார் மூலம் தூரத்தை அளவிட்டு இந்த ரோபோ அதன் பாதையை அடையாளம் காண்கிறது. இந்த முயற்சியில், ரோபோவின் குறுகிய பாதை நடை பயிற்சிகளை 50 சதவீதம் மட்டுமே வெற்றிகரமாக முடித்துள்ளது. இதை அடுத்து, கோண உந்தம் விதிகளை பயன்படுத்தி பேலன்ஸ் செய்யும் திறனை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளது.