ஊரையடங்கச் செய்வித்தாய் ஓரிரறிவிப்பில்
பதைபதைப்பில் ஒடுங்கினோம் யாம்.
பாலத்தடிச் சிறுகுடிலின் சட்டியில் பானையில் கிடந்ததுகொண்டு
நகர்ந்தன சிலநாள் . பூட்டிய கதவால் வேலையிலை, எனில்
வேளாவேளைக்குப் பசிக்குத் தெரியவிலை ஊர்நிலை, அரசறிவிப்பு!
கட்டியவள் சொல் ‘ பேசாம சொந்தவூருக்குப் போவோமுங்க ‘
‘அங்கெயென்ன வாழுது? பசுவயலைப் பத்து வழிச் சாலைவந்து விழுங்கி
நமை விரட்டலையோ இந் நகர் நோக்கி?’
‘இத் தலைநகருந்தானிப்போ விரட்டுது நமை!’
உடமையெனச் சிறுதகரப் பெட்டியும் கட்டைப்பையுமாய்க்
கையிலொன்றும் இடுப்பிலொன்றுமாய்ப்
பெற்ற பிள்ளையரையும் இழுத்துப் பிடித்தபடி தெருவில்...
துளிச் சர்க்கரைத்துண்டுத் தேரிழுக்கும் எறும்பென
சாரை சாரையாய் எலும்பு மனிதர்கள் சிறு சிறு குழுவென...
தொற்றிக்கொள்ள ரயிலில்லை, பேருந்தில்லை.
சுவரேறினோம்; பாலம் ஏறினோம்... பட்டுப்பாய் விரித்த
தேசியச் சாலையில் துவங்கினோம் பயணம்
நடை... நடை... நீண்ட நடை! சீறிப் பாய்ந்த சில வாகனமும்
எம் கை நீட்டலைத் தூசியெனத் துச்சமெனப்
புறந்தள்ளிப் பறந்தன பாங்காய் ...
மரத்தடி கண்ட இரவில் ஓரமாய்ப் படுத்து
மாறி மாறி யுறங்கி எழுந்து நடையைத் தொடர்கையில்
மனசின் கேள்வி:
முதலாளி தந்த தீபாவளிக் காசான முழு நோட்டை
மாத்தாது மண்ணுண்டியலில் பதுக்கிச் சேர்த்ததைச் செல்லாதென
ஒருவாரத்தில் உடைத்தெடுத்து அதை மாத்த வங்கி வாசலில்
நடுத்தெருவில் நம்மை நிக்கவைச்ச பெரியமனசுக்காரவுங்க
கோடிச் செலவுல குடிபடையோட உலகமெலாம் சுத்தினாங்க!
இப்போ நமை இப்படி நடுத்தெருவில் நடையாய் நடக்க வைக்கிறாங்க!
அண்டையயலில் சில மாதமுன்னே அரங்கேறிய தொற்றுத் தாக்குதலும்
அதையவர் எதிர்கொண்டு போராடி நேர்கொண்ட அவர்
திறன் அவரிடம் கேட்டுத் தெரிந் தெமை காத்திருக்கலாகாதா?
அவ்வேளை உலக தாதாவையிங்கழைத்து
ஊர் கூட்டிக் கட்டிப்பிடி வித்தை காட்டினர்!
அவர் கண் கடாட்ஷம் எளியோர் எம்மீது படாதிருக்க
எழுப்பினார் எட்டடிச் சுவர்!
எம் மனசு பொங்குது ; மகன் காலும் பொசுங்குது!
பெரிய மனசுக்காரவங்க சித்தே முன்கூட்டிச் சொல்லியிருந்தா
வழி ஏதும் கண்டிருப்போமோ?
பசினடையில், போன உயிர் போக,
புத்துயிர் ஜனிக்க எனப் பெருந்துயர்ப்பயணம் முடிந்து
ஊர் போவோமோ அன்றி
மேல் போவோமோ?