science

img

அறிவியல் கதிர் - ஆர்.ரமணன்

கருந்துளைகள் துளைகள் அல்ல!

கருந்துளைகள் வியப்பிற்குரிய விண்பொருட்கள்.விண்வெளி ஆய்வாளர்களையும் ஆர்வலர்களையும் வெகுகாலமாக கவர்ந்து கொண்டிருப்பவை. ‘கருந்துளைகள்’ என்று பெயரிடப்பட்டிருந்தாலும் அவை துளைகள் அல்ல; சிறிய பரப்பிற்குள் அடைபட்டிருக்கும் பெரும் பொருட் திணிவாகும். தொடுகோடு என்றழைக்கப்படும் எல்லைக்குள் சென்றுவிட்டால் ஒளி முதற்கொண்டு எந்தப் பொருளும் அவைகளிடமிருந்து தப்ப முடியாத அளவு ஈர்ப்பு விசை கொண்டவை. இந்த ஆச்சரியமான பொருள் குறித்து விடை காண வேண்டிய கேள்விகள் பல இருந்தாலும் விஞ்ஞானிகள் இவற்றை வகைப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.  பெரும் பொருட்திணிவு துளைகள் - நம் பால்வீதி மண்டலத்தை உள்ளடைக்கிய பெரும் அண்டங்கள் அவற்றின் நடுவே பெரும் துளைகளை கொண்டுள்ளன. அவை சூரியனை விட பல லட்சம் கோடிகள் பெரியவை என்று கருதப்படுகிறது.  இடைநிலை கருந்துளைகள் - இவை சற்று மர்மமான பொருட்களாகவே உள்ளன. அவை சூரியனைப் போல நூறிலிருந்து இலட்சக்கணக்கான அளவு பெரியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  தொடக்க கால துளைகள் (Primordial) - இவை அண்டத்தின் தொடக்ககாலத்திலேயே, பெருவெடிப்புக்கு சில நொடிகள் கழித்து உருவானவை என்று கருதப்படுகிறது. சில மிகச்சிறியதாகவும் மற்றவை சூரியனைவிட பெரியதாகவும் இருக்கலாம்.  ஸ்டெல்லார் துளைகள் - சூரியனைப் போல் ஏறத்தாழ எட்டு மடங்கு பெரிய நட்சத்திரங்கள் தங்களுடைய எரிபொருளை இழக்கும்போது அதன் அச்சு சரிந்து விடும். அவை வெடித்து சூப்பர் நோவா எனப்படும் பெரும் குழம்பாக மாறலாம். பிழைத்திருக்கும் அச்சு போதுமான அளவு கனமாக இருந்தால் அது ஸ்டெல்லார் கருந்துளையாக மாறுகிறது. 

கதிரியக்கத்தால்  பாதிக்கப்படாத புழுக்கள் 

1986 இல் செர்னோபில் அணுசக்தி ஆலையில் ஏற்பட்ட விபத்தினால் அதை சுற்றியுள்ள பகுதி எவரும் அணுகக்கூடாத பகுதியாக (Chernobyl Exclusion Zone (CEZ) )அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு வாழும் உருண்டை புழுக்கள் ( Nematodes) எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருப்பது தற்போது ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்த நியூயார்க் பல்கலைக்கழக உயிரியியலாளர் சோஃபியா டின்டோரி குழுவினர் இந்த கண்டுபிடிப்பானது டிஎன்ஏ சரி செய்யும் முறை குறித்து ஆழ்ந்த பார்வையை தரும்; பிற்காலத்தில் மனித மருத்துவத்தில் பயன்படுமாறு அதை கைக் கொள்ளலாம் என்கிறார்கள். அந்தப் பகுதியில் வெளிவிடப்பட்ட கதிரியக்கத்தால் எந்த உயிரினமும் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தானதாகவும் மரபணு பிறழ்வு, புற்று நோய் மற்றும் இறப்பும் ஏற்படும் அபாயத்தை உண்டுபண்ணியுள்ளது. அங்கு வாழும் விலங்குகளை சோதித்ததில் அவற்றிற்கும் அங்கு வாழாத பிற விலங்குகளுக்கும் மிகத் தெளிவாக மரபணு மாறுபாடுகளை காண முடிந்தது.  இதை ஆழமாக ஆய்வு செய்ய உருண்டைப் புழுக்கள் பொருத்தமானது. ஏனெனில் அவை பிற உயிரினங்களின் உடலிலும் பலதரப்பட்ட சூழலிலும் வாழுகின்றன. நிலை உறைபனியில் உறைந்து போய் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்து அவை விழிப்பது உண்டு. அவற்றின் மரபணு தொகுதி எளிமையானது. குறுகிய வாழ்நாளே வாழ்வதால் குறுகிய கால அளவில் பல தலைமுறைகளை ஆய்வு செய்ய இயலும். இதனால் அவை உயிரியல் வளர்ச்சி, டிஎன்ஏ சரி செய்வது மற்றும் நச்சுத்தன்மைக்கு எதிர்வினை ஆகியவற்றை ஆய்வு செய்ய பொருத்தமான மாதிரிகளாகும்.  எனவே இந்த ஆய்வாளர்கள் செர்னோபில் பகுதியில் நூற்றுக்கணக்கான புழுக்களை சேகரித்து சோதனை சாலையில் வளர்த்து அவற்றின் மரபணு தொகுதியை உலகின் பிற பகுதிகளிலிருந்து சேகரித்த இதே இனப் புழுக்களின் மரபணு தொகுதியுடன் ஒப்பிட்டனர். அவை ஒத்திருந்தன. மரபணுப் பிறழ்வு எதுவும் நடைபெறவில்லை. கதிரியக்கத்திற்கு உள்ளான இவற்றின் முன்னோர்களின் மரபணுவிலும் எத்தகய மாற்றமும் இல்லை. மனிதர்களில் சிலர் நச்சுப் பொருட்களின் தாக்கத்திற்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஏன் என்பதை கண்டுபிடிக்க இது உதவலாம். இந்த ஆய்வு ‘Proceedings of the National Academy of Sciences’ என்கிற இதழில் வெளிவந்துள்ளது. 

யானைகளின் மர்ம மரணமும் சுற்றுச் சூழலும் 

யானைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்ட விலங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்மைக் காலங்களில் அவைகளின் பெரும் எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2020இல் போஸ்ட்வானா நாட்டில் 350க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. வழக்கமான காரணிகளான, பட்டினி, தொற்று, இயற்கையாக உண்டாகும் ஆந்த்ராக்ஸ் விஷம் போன்றவை இந்த மரணங்களில் இல்லை. அவற்றின் தந்தங்களும் வெட்டப்படாமல் இருந்ததால் அவை வேட்டையாடப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.  சில யானைகள் முகம் குப்புற விழுந்து கிடந்தன. அதாவது திடீரென இறந்து விழுந்துள்ளன. மிச்சமிருக்கும் ஒரே குற்றவாளி சயனோ பேக்டீரியா எனப்படும் நீலப் பச்சைப் பாசி மட்டுமே. இப்போது நான்கு ஆண்டுகள் கழிந்து லண்டனிலுள்ள கிங் கல்லூரி நடத்திய ஆய்வு அதை உறுதிப்படுத்தியுள்ளது. புவியியல் ஆய்வாளர் டேவிட் லமேயோவும் அவரது குழுவினரும் செயற்கைக் கோள் படங்களை ஆய்வு செய்ததில் யானைகள் இறந்த இடத்திற்கு அருகில் விசத்தன்மை கொண்ட பாசிகள் பெருமளவில் வளர்ந்திருப்பது தெரியவந்தது. நிரந்தர நீர் நிலைகளான ஏரிகள், ஆறுகள், குளங்களில் இவை உண்டாவதில்லை. மழையினால் நிரம்பும் கலங்கிய, தேங்கி நிற்கும் சத்துகள் நிரம்ப உள்ள குட்டைகளிலேயே இவை அதிகம் உண்டாகின்றன. இவை உண்டாக்கும் நச்சுப் பொருட்கள் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. இந்த மரணங்கள் தனித்த நிகழ்வு அல்ல. கடந்த வருடம் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு ஏரியில் பொடூலியம் எனும் நஞ்சினால் 94000 பறவைகள் உயிரிழந்தன. மெக்சிகோவில் அதீத வெப்பத்தினால் 100 குரங்குகள் செத்து விழுந்தன. நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான விலாங்கு மீன்கள் இறந்து கிடந்தததைப் பார்க்க முடிந்தது. ஆஸ்திரேலியாவில் வவ்வால்கள் பசியினால் பெரும் கூட்டமாக இறந்தன. மனித இயக்கங்களால் உண்டாகும் வெப்பத்தால் பெரும் பவளப் பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு அழிந்தன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களால் குளம்பு விலங்குகள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதும் நிகழ்கிறது. கால்நிலை மாற்றத்தால் ஆப்பிரிக்காவில் நீர்நிலைகள் வறளும் அபாயம் உள்ளது. நம்மை சுற்றிலும் நடக்கும் இந்த மரணங்களை மாற்றுவதற்கு ஏதாவது செய்யக்கூடிய நிலையிலுள்ள தலைவர்களும் தொழில் நிறுவனங்களும் படிம எண்ணெய் உமிழ்வுகளைக் குறைக்காமல் விளைவுகளை இன்னும் மோசமானதாக்குகின்றனர் என்கிறார் லோமெயோ, இந்த ஆய்வு ‘Science of The Total Environment.’ எனும் இதழில் வெளிவந்துள்ளது.