தில்லி சட்டமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் இணைந்து போட்டியிட்டு இருந்தால் பாஜக-வை நிச்சயமாக தோற்கடித்து இருக்க முடியும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
வெளியுறவு அமைச்சருக்கு கண்டனம்
மனித உரிமை பற்றி மற்றவர்களுக்குப் பாடம் நடத்தும் அமெரிக்கா 104 இந்தியர்களை மிகக் கேவலமான முறையில் கை, கால்களை விலங்கிட்டு போர் விமானத்தில் அனுப்பி வைத்துள்ளது. இந்தியா வல்லரசு நாடு என்று வாயால் வடை சுடும் மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் இச்சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேலும் 18 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாகத் தெரிகிறது. சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டு இவர்களை கன்னியமான முறையில் அழைத்துவர ஒன்றிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உருக்குப் போல...
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிடாததே பாஜகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது. தமிழ்நாடு போல நாடு முழுவதும் இந்தியா கூட்டணி உருக்குப்போல வலுப்பட வேண்டும். அப்பொழுதுதான் மதவெறி அபாயத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி மேலும் வலுப்பெற மார்க்சிஸ்ட் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
ஈரோடு வெற்றிக்கு வரவேற்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன். திமுகவின் வாக்குகளை குறைத்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக, பாஜக கட்சிகளின் வாக்குகள் கணிசமாக நாம் தமிழர் கட்சிக்கு சென்றுள்ளது. பேச்சு, உடல் மொழி போன்ற சீமானின் நடவடிக்கைகளால் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு பெரிய அளவில் சரிந்துள்ளது. அந்தக் கட்சியில் இருந்து ஏராளமானோர் வெளியேறி இருக்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் பேட்டியிட்டு இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளர் மட்டுமே எதிர்த்துப் போட்டியிட்டதால், திமுகவின் மீதான அதிருப்தி வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளது. இதை வைத்து அந்தக் கட்சி வளர்ந்துள்ளதாகக் கூற முடியாது.
அதிகரிக்கும் வன்கொலைகள்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் தமிழ்நாட்டில் தினந்தோறும் நடந்துகொண்டு இருக்கிறது. இத்தகைய சம்பவங்களை மாநில அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
குழு அவசியம் இல்லை
2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக ஓய்வூதியம் குறித்து குழு அமைத்து 9 மாதம் அவகாசம் அளித்திருப்பதை ஏற்க முடியாது. குழு போட வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தலாம்.
அரசியல் கட்சிகள் அவற்றின் கொள்கை சார்ந்து கூட்டணிக் கட்சிகளோடு மாறுபாடும், உடன்பாடு ஏற்படுவது இயல்புதான். திமுக அரசின் மீது குறிப்பிட்ட சில பிரச்சனைகளில் எதிர்ப்புத் தெரிவிப்பதாலேயே கூட்டணி மாறும் என்று அர்த்தம் இல்லை.
ஏற்கவில்லை
வேங்கை வயலைப் பொறுத்தவரை சிபிசிஐடி போலீசாரின் குற்றப் பத்திரிகையை நாங்கள் ஏற்கவில்லை. பிரச்சனையை முடிக்க வேண்டும் என்பதற்காக யூகத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆகவே, அதை மற்றொரு விசாரணை அமைப்புக்கு விடுவதில் என்ன தவறு இருக்கிறது?
நீதிபதிக்கு தெரியாதா?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், கீழே சுப்பிரமணியர் கோவில் இருக்கிறது, மேலே சிக்கந்தர் தர்கா இருக்கிறது. பல ஆண்டுகளாக இந்துக்களும் தர்காவுக்குச் சென்று பலி கொடுத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள். மத நல்லிணக்கத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் மூலம் கலவரத்தைத் தூண்டிவிட இந்து அமைப்பினர் மேற்கொண்ட முயற்சி 144 தடை உத்தரவின் மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது.
அதையும் தாண்டி, பாஜகவின் நீதிபதிகள் அணி இருக்கும்போது, வழக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது என்று நீதிபதிக்கு தெரியாதா? ஏன், அடுத்த வாரம் அந்தப் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தால் என்ன நடந்துவிடப் போகிறது? எந்த வழக்கிலாவது காலையில் மனு போட்டு, மாலையில் தீர்ப்பு வந்து உடனே ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறதா? கம்யூனிஸ்ட்டுகள் கேட்டு இதுபோல எதையாவது தந்திருக்கிறார்களா? வேறு யாருக்காவது கொடுத்திருக்கிறார்களா?
இயற்கைப் பேரிடர்
கேரள அரசைப் போல வன விலங்குகளால் விவசாயத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படாமல் தமிழ்நாடு அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படும் சாகுபடியை இயற்கை பேரிடராக அறிவித்து அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு பெ.சண்முகம் தனது பேட்டியில் குறிப்பிட்டார். பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாக ராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கவிவர்மன், ஏ.ராமையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.