கொல்கத்தா:
வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் ஆளுநர் ஜெகதீப் தங்கர் வலியுறுத்தினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியினரும் பாஜகவினரும் வன்முறைகளை மேற்கொண்டனர். சட்டமன்றத்தேர்தலில் இது அதிகமானது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திரிணாமுல் கட்சியினரின் வன்முறைகள் மீண்டும் தொடர்ந்துள்ளன. இதில் பெண்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட இடதுசாரிக் கட்சியினர் பாதிக்கப்பட்டுள்ளனர். நந்திகிராமம் தொகுதியில் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி புதனன்று மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் ஆளுநர் ஜெகதீப் தங்கர் பேசுகையில், சமுதாயத்தை பெருமளவில் பாதித்த இந்த விவேகமற்ற வன்முறைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதேஎங்கள் முன்னுரிமை. அவசர சட்டத்தின் அடிப்படையில் ஆட்சியை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடுப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.