துப்பாக்கி ஓசை ஓயும்போது உதிரும் கேள்விகள் - டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி
தீவிர தேசியவாதம் குறித்து பல விளக்கங்களும் மேற்கோள்களும் உள்ளன. ஒரு சமூகம் கண்ணுக்குக் கண் என்ற நிலைக்குச் சென்றால், அது உலகையே முழு இருளுக்கு இட்டுச் செல்லும் என்று மகாத்மா காந்தி கூறினார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேசன் சிந்தூர், எல்லை மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் நிறுத்தம் ஆகியவற்றை அர்த்தமுள்ள வகையில் மதிப்பிட வேண்டிய ஒரு கட்டத்திற்குள் நாடு நுழைந்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை, ‘போர், தீர்வுகளை விட நெருக்கடி களையே பிறப்பிக்கிறது’ என்ற பழமொழி யுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இருநாட்டு மக்களின் சமூக மற்றும் பொருளா தார முன்னேற்றத்திற்கு அமைதி அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. அதே நேரத்தில், இந்தியாவை தொடர்ந்து உற்று நோக்கும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை எவ்வாறு கையாள்வது என்பதும் பொருத்த மான கேள்வியாகும்.
பஹல்காம் படுகொலையில் எழும் கேள்வி
பன்முக அணுகுமுறை மூலமாக அல்லாமல் பீரங்கியின் குழாய் வழியாக மட்டுமே தீர்வு என்ற தீவிர தேசியவாதக் கருத்தை எதிர்த்துப் போராட வேண்டிய நேரம் இது. மதத்தைக் கேட்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பஹல்காமில் 26 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டார் கள் என, கேள்வியின்றி ஏற்பதில் உள்ள குறை பாட்டை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். மத வெறியின் அடிப்படையில் உருவாக்கப் பட்டு மதத் தீவிரவாதத்தில் நகர்ந்து கொண்டி ருக்கும் பாகிஸ்தான் விழுந்த படுகுழியில் இந்தியாவையும் தள்ளுவதற்கான சதி நடந்து கொண்டிருக்கிறது. நாஜி ஜெர்மனி உட்பட பல வரலாற்று ஆவணங்கள், ‘ஒரு நாட்டை அழிக்க எளிதான வழி தீவிர தேசிய வாதம் மற்றும் போர் வெறி’ என்று நமக்குச் சொல்கின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் நிறுத்தத்தில் ஏமாற்ற மடைந்து, திகைப்பூட்டும் கருத்துகளை வெளியிடும் வலதுசாரி சமூக ஊடகக் கணக்கு களைப் பார்த்தால், நம் மீது சூழ்ந்து கொண்டிருக்கும் ஆபத்தைப் பற்றிய ஒரு சிற்றறிவைப் பெறலாம். ‘ஆபரேசன் சிந்தூர்’ பின்னணியில் ஒன்றிய அரசு அழைத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவான நிலைப்பாட்டை எடுத்தது. போர் விரும்பத்தக்கதல்ல, மோத லைத் தணிக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாடாகவும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கும் இந்தியா, அதற்கான முன்முயற்சி யை எடுக்க முடியும் - இதுதான் அந்த நிலைப்பாட்டின் சாராம்சம். மோதல் நிறுத்தத்தை நோக்கி இந்தியா ஒரு அடி எடுத்து வைத்ததன் மூலம், மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அங்கீகாரத்தையும் சிறப்பையும் பெற்று வருகிறது என்று சொல்ல வேண்டும்.
‘சூப்பர் நடுவராக’ அமெரிக்கா
இரு நாடுகளும் அமைதிக்குத் திரும்பிய போதும், மோதல்கள் குறித்து பல சந்தேகங் களும் கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. அதில் முக்கியமானது ஒரு சூப்பர் நடுவராக - அதாவது (ஆதிக்க நடுவராக - நாட்டாண்மை யாக) வந்த அமெரிக்காவின் அணுகுமுறை தொடர்பானது. நாம் போர் நிறுத்தத்தை அறி விப்பதற்கு முன்பே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இரு நாடுகளையும் அமைதிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்ட தாகவும், விரைவில் அது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவின் நீண்ட விளக்கத்தால் இன்னும் அதிக சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ரூபியோ தனது ஆதரவில் இந்தியா-பாகிஸ்தான் பிரச்ச னையில் நடைபெற்ற ஆலோசனைகள் பற்றிய சுருக்கமான விளக்கத்தை அளித்தார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக், ராணுவத் தலைவர் அசிம் முனீர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு தனது சமரச முயற்சிகளை ரூபியோ விவரித்தார். காஷ்மீர் உட்பட பாகிஸ்தானுடனான தகராறுகளில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை மீறுவதாக இந்த அறிக்கைகள் கருதப்பட வேண்டும். 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின் மையக்கரு, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளைத் தீர்ப்பதுதான். பல வெளிநாடுகள் பல்வேறு கட்டங்களில் சமரசக் கரங்களை நீட்டியபோது, இந்தியா அவற்றையெல்லாம் உறுதியாக நிராகரித்தது. ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோது, பிரிட்டன் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டபோது, அவரது வார்த்தைகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன. ‘கையை நீட்ட பிரிட்டனுக்கு என்ன வலு உள்ளது’ என்று குஜ்ரால் நையாண்டி செய்யும் விதமாகக் கேட்டார்.
மோடியின் நண்பர் டிரம்ப்
பிரதமர் மோடியின் அணுகுமுறை, காஷ்மீர் பிரச்சனையை சர்வதேசமயமாக்க முனையும் சக்திகளின் நிழல் விழ வழிவகுத்ததா என்ற கேள்வி வரும் நாட்களில் நிச்சயமாக எழும். ‘என் நண்பர் டிரம்ப்’ என்கிற உரையைத் தாண்டி, இந்திய நலன்களைப் பாதுகாக்க மோடி தவறிவிட்டாரா என்பதுதான் கேள்வி. மோதலின் போது பிரதான ஊடகங்கள் முன்வைத்த கருத்துகளை தீவிர மதிப்பீட்டிற்கு உட்படுத்த வேண்டும். நமது ஊடகங்கள் போர் வெறியுடன் மிகவும் அழிவுகரமான மாதிரியை வெளிக் காட்டியுள்ளன. இந்த விசயத்தில் இந்திய ஊடகங்கள் பாகிஸ்தான் ஊடகங்களுடன் போட்டியிட்டன. பாகிஸ்தானை தோற்கடிக்க இந்தியாவுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்பதே ஊடக விவாதத்தின் கருப்பொருள். நகைச்சுவை பொதிந்திருந்தாலும், சமூக ஊடகங்களில் வைரலான ஒரு ட்வீட்: “ஜீ டிவி- கராச்சி கைப் பற்றப்பட்டது, என்டிடிவி- இஸ்லாமாபாத் கைப்பற்றப்பட்டது, ரிபப்ளிக் டிவி - ராவல்பிண்டி கைப்பற்றப்பட்டது...” மலை யாள ஊடகங்களும் சளைக்கவில்லை. (தமிழ் ஊடகங்களும் கூட) பரபரப்பான கதை களால் பார்வையாளர்களை சிக்க வைத்து அவர்களின் கவனத்தை ஈர்க்க புதுமையான வழிகளைக் கண்டுபிடித்தன. வழக்கமாக, இந்தியாவை ஆளும் அரசாங்கம் ஊடகங்களை வகுப்புவாத அரசியலின் கொடி ஏந்தியவர்களாக இருக்க கட்டாயப்படுத்தும். ஆனால், இந்த முறை, ஒன்றிய அரசு கூட ஊடகங்களின் மிகை யான ஆர்வத்தால் வெறுப்படைந்தது. இந்தச் சூழலில்தான், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஊடகங்களுக்கு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க ஆலோசனைகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமைச்சகம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஆலோசனைகளை வழங்க வேண்டியிருந் தது. மத வெறியும் மதரீதியான அணிதிரட்டலும் பாகிஸ்தானை வீழ்ச்சிக்கு இட்டுச் செல் கின்றன என்பதற்கான உண்மைக் கணக்கை நமது ஊடகங்கள் ஒருமுறை கூட முன் வைக்க முயற்சிக்கவில்லை என்பது கவனிக்க த்தக்கது. முஸ்லிம் பாகிஸ்தானுக்குப் பதிலாக ஒரு தீர்வாக இந்துத்துவா இந்தியா உருவாகும் அபாயத்தை அவர்கள் வேண்டுமென்றே மறைத்துவிட்டனர்.
பாகிஸ்தானின் வீழ்ச்சி
ஆரம்ப காலங்களில், பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்தியர்களின் தனிநபர் வருமானம் கிட்டத்தட்ட சமமாக இருந்தது. இன்று, இடைவெளி அதிகமாக உள்ளது. பாகிஸ்தானில் சராசரி வருமானம் கேரளா வைச் சேர்ந்த ஒருவரின் வருமானத்தில் பாதி மட்டுமே உள்ளது. இந்தியப் பொருளாதாரம் இப்போது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை விட 11 மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கிடையில், ஒரு இந்தியக் குடிமகனின் தனிநபர் வருமானம் ஒரு சீனரின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே. பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு தீர்வு காண்பதா அல்லது பாகிஸ்தானைப் போல துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுவதா என்பதுதான் சமகால அரசியலில் பொருத்தமான கேள்வி. அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு உ.பி.யைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் கூறியது இந்த கட்டுரையாளரின் காதுகளில் ஒலிக்கிறது. எல்லையில் ஒவ்வொரு துப்பாக்கிச் சூடும் உ.பி., மாநிலத்தின் கிராமங்களில் உள்ள பதுக்கல்காரர்களுக்கு ஒரு பட்டாசு வெடிப்பு போன்றது என்று ராம் கோபால் யாதவ் கூறினார். மோதலுக்குப் பிறகு எல்லையைத் தாண்டி ஓடிய ஆயிரக்கணக்கானோரையோ அல்லது அவர்களின் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையோ போர் வெறி யர்கள் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. பாகிஸ்தானில் உள்ள அரசாங்கத்திற்கு நாட்டின் மீது பெயரளவு கட்டுப்பாடு மட்டுமே உள்ளது. அங்கு இராணுவம்தான் உண்மை யான சக்தி. பாகிஸ்தானை ஒழிக்க விரும்புவ தாகக் கூறுபவர்கள், அணு ஆயுதம் ஏந்திய நாடு பயங்கரவாத அமைப்புகளின் கைகளில் முழுமையாக சிக்கினால் ஏற்படும் பேரழி வைப் பற்றி ஒரு கணம் கூட யோசித்ததில்லை.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை உருவாக்கிய அமெரிக்கா
பிரிட்டனின் ஸ்கை டிவிக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆசிப் குவாஜா அளித்த பேட்டி குறிப்பிடத்தக்கது. “ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவு அரசாங்கத்தை கவிழ்க்க பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கச் சொன்னது அமெரிக்காவும் பிரிட்டனும் தான். எனவே பயங்கரவாதிகள் எங்கள் மண்ணில் செழித்து வளர்ந்தனர். அவர்களுக்கு பணம் மற்றும் ஆயுதங்களை வழங்கியது அமெரிக்காதான். இறுதியாக, அவர்கள் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்தனர். அதன் பிறகு, அந்த பயங்கரவாத குழுக்கள் அனைத்தும் எங்கள் மண்ணில் தளங்களை அமைத்தன. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசமான வேலையைச் செய்து வந்த அமெரிக்கா இன்று எம்மைக் குறை கூறுவதன் பயன் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். மோதல் நிறுத்தம் அமலுக்கு வரும்போது எழும் கேள்விகளில் பஹல்காம் மீண்டும் இடம் பெறுகிறது. போர் போன்ற பதற்றம் நில வும் நேரத்தில் ஒற்றுமை சீர்குலையாத வகை யில், எதிர்க்கட்சிகள் நடந்து கொண்டன. 26 அப்பாவி உயிர்களை இழக்க வழி வகுத்த ஒன்றிய அரசின் மன்னிக்க முடியாத பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடு கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அந்த பயங்கரவாதிகளில் ஒருவரைக் கூட இன்னும் பிடிக்க முடியவில்லை. கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உள்துறை அமைச்சர் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இவை அனைத்தும் அவைப் பதிவுகளில் உள்ளன: “காஷ்மீரில் இருந்து பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது; எந்த பயங்கரவாதியும் நாட்டிற்குள் நுழைந்தால், நாங்கள் அவர்களது இரு புருவங்களுக்கு இடையில் சுடுவோம்” - இவை அமித் ஷாவின் வார்த்தைகள். பயங்கரவாதிகள் ஏன் இந்திய மண்ணுக்குள் நுழைந்து, சுதந்திரமாக சுற்றித் திரிந்து, ஒரு குறிப்பிட்ட தூரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிக்க முடிந்தது? இதற்கு ஒரு நபர் கூட பொறுப்பேற்கவில்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது நடந்த 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய நேரம் இது. அப்போது வாயடைத்துப் போன வர்களின் பட்டியலில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் துணை முதல்வர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் அடங்கு வர். மும்பையில் நடந்த துரதிர்ஷ்டவசமான தாக்குதலால் அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் பதவியை இழந்திருந்தால், அது குறித்து அமித் ஷாவிடம் கேட்க வேண்டிய பொறுப்பு நாட்டிற்கு உள்ளது. கேள்விகளை எழுப்பும் அடிப்படைப் பொறுப்பைக் கொண்ட ஒரு ஊடகம் கூட அப்படிச் சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மசூத் அசாரை விடுவித்த பாஜக
பாஜகவைத் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் பலவீனத்தின் சின்னங்கள் என்று நரேந்திர மோடி எப்போதும் பிரச்சாரம் செய்து வருகிறார். பாகிஸ்தான் மண்ணிலிருந்து வரும் எந்தவொரு பயங்கர வாதச் செயலுக்கும் பின்னால் உலகம் நம்பும் ஒருவர் இருக்கிறார். அவர், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் மௌலானா மசூத் அசார். இந்த முறையும் மசூத் அதிகம் விவாதிக்கப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத்தின் எண்ணற்ற படங்களும் கேலிச்சித்திரங்களும் தொலைக் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. இன்னும் எழுப்பப்படாத ஒரு கேள்வி உள்ளது. 1999 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்த போது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பிணைக் கைதிகளுக்கு ஈடாக இந்தியாவால் விடுவிக்கப்பட்ட மிகவும் பிரபலமான பயங்கரவாதிகளில் மௌலானா மசூத்தும் ஒருவர். வேறு எந்த அரசாங்கமும் மசூத்தை விடுவித்திருந்தால், அதிகம் பேசப்பட்ட பிரச்சனை மசூத்தின் விடுதலையாகத்தான் இருந்திருக்கும். பஹல்காம், மோதல் மற்றும் போர்நிறுத்தத்தை அர்த்தமுள்ள விவாதப் பொருளாக மாற்றுவதன் மூலம் மட்டுமே ஜனநாயக இந்தியா முன்னேற முடியும். போர் வெறி மற்றும் ஊடகங்கள் பொழிந்த அச்சுறுத்தும் ஏவுகணைகளை அல்ல, மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பகுப்பாய்வு களை நாடு கேட்கிறது
. - தமிழில்: சி.முருகேசன்