தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ள ‘வோட்டர் டர்ன் அவுட்’ என்ற மொபைல் அப்ளிகேஷனை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி வரும் மே 19-ஆம் தேதி வரை, 7 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு நிலவரங்களை அறிந்துகொள்ள, ’வோட்டர் டர்ன் அவுட்’ என்ற அப்ளிகேஷனை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் எந்த நேரத்திலும், இதுவரை எவ்வளவு சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை அறிய முடியும். மேலும், மாநில வாரியாகவும் ,தொகுதி வாரியாகவும் வாக்குப்பதிவு நிலவரத்தை அறிந்துகொள்ளும் வசதி இதில் உள்ளது.
இந்த அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.