internet

img

இந்தியாவில் 6.6 கோடி குழந்தைகள் இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள் - ஐஏஎம்ஏஐ தகவல்

இந்தியாவில் 6.6 கோடி குழந்தைகள் இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள் என்று ஐஏஎம்ஏஐ அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறித்து ஐஏஎம்ஏஐ (IAMAI - Internet and Mobile Association of India), நீல்சன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'இந்தியா இன்டர்நெட் 2019' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 31 மார்ச் 2019 நிலவரப்படி இந்தியாவில் 45.1 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், உலகின் அதிக இணையப் பயனர்கள் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 45.1 கோடி பயனர்களில், 38.5 கோடி பேர் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரைச் சேர்ந்தவர்கள். இதில் 6.6 கோடி பேர் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். ஆக இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள், குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் அதிகம் இணையத்தை பயன்படுத்துவதாகச் தெரியவந்துள்ளது.

இந்த குழந்தைகள் தங்கள் இணையப் பயன்பாட்டுக்கு, தங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை பெரிதும் நம்பி இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியாவில், பெண்கள் அதிகம் இணையத்தைப் பயன்படுத்துவதில்லை எனவும், இந்திய கிராம புறங்களில், 28 % பெண் பயனர்கள் மட்டுமே இணையத்தை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மொத்தமாக இந்தியாவில், 36 சதவீதம் மக்கள் மட்டுமே இணையத்தை பயன்படுத்துவதாகவும், கிராம புறங்களில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் 33 சதவீதம் என்றும் குறிப்பிட்டுள்ளது.