காசியாபாத்தில் போலி நீதிமன்றம், போலி காவல்நிலையம், போலி மருத்துவர் போன்ற பல்வேறு போலிகளின் வரிசையில் தற்போது போலி தூதரகம் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கூடுதல் சிறப்பு பணிப்படை போலீசார் நடத்திய ஆய்வில், ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து வெஸ்டார்டிகா, சபோர்கா, பொல்வியா, லண்டோனியா போன்ற இல்லாத நாடுகளுக்கு போலி தூதரகம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது
மேலும் விசாரணையில் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலகோடி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் 2011-இல், ஜெயினுக்கு எதிராக சட்டவிரோத செயற்கைக்கோள் தொலைப்பேசி வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவரிடமிருந்து போலியான தூதரக எண் பலகைகள் கொண்ட நான்கு வாகனங்கள், 12 போலி தூதரகப் பாஸ்போர்ட்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகத்தின் முத்திரையுடன் கூடிய போலி ஆவணங்கள், இரண்டு போலி பான் அட்டைகள், பல நாடுகளும் நிறுவனங்களும் சார்ந்த 34 ரப்பர் முத்திரைகள், மற்றும் இரண்டு போலி பத்திரிகை அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
மேலும் ரூ.44.7 லட்சம் பணம், வெளிநாட்டு நாணயங்கள், சொகுசு கார்கள் என பலவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வேறு எந்தெந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.