headlines

img

மவுனம் சம்மதமா?

மவுனம் சம்மதமா?

ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் கொடூரமாகத் தாக்குதல் தொடுத்து அந்த நாட்டின் உச்சபட்சத்தலைவர் அயதுல்லா காமேனி உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் போர்ப்பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ஈரான் மக்கள் மீதான தாக்குதலை இந்திய அரசு வன்மையாகக் கண்டித்திருக்க வேண்டும். மாறாக, கவலை தெரிவித்ததோடு, போரைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணு மாறு பொத்தாம் பொதுவாக கூறியதோடு, தனது கடமை முடிந்துவிட்டதாக மோடி அரசு கருது வது ஏற்கத்தக்கதல்ல. இது இந்தியா பின்பற்றி வந்துள்ள கூட்டுச் சேரா கொள்கைக்கு முற்றி லும் எதிரானது. மறைமுகமாக இஸ்ரேல் மற்றும்  அமெரிக்காவின் அத்துமீறிய கொடுங்கோன் மையை ஆதரிப்பதாகும்.

வெனிசுலா நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த நாட்டின் தலைவர் மதுரோ மற்றும் அவரது இணையரை கடத்திச் சென்ற டிரம்ப் நிர்வாகத்தை இந்திய அரசு கண்டிக்கவில்லை. ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையும் பாது காக்கப்பட வேண்டும் என்று வலிமையான வார்த் தைகளால் குறிப்பிடவில்லை. அதே போன்ற கவலையைத்தான் இப்போதும் ஈரான் மீதான அக்கிரமத் தாக்குதலின்போதும் மோடி அரசு வெளியிடுகிறது. மோடி அரசின் இந்தப் போக்குத் தான் கவலையளிப்பதாக உள்ளது.

இப்போது ஏற்பட்டுள்ள போர் ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடை யிலான பிரச்சனை என்று இந்தியா ஒதுங்கிக் கொள்ள முடியாது. இந்த போர்ப்பதற்றம் காரண மாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் ஆபத்து உள்ளது. ஏற்கெனவே ரஷ்யாவி டமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கிய போதும், அதன் பலனை இந்திய மக்க ளுக்கு மோடி அரசு தரவில்லை. இப்போது கச்சா எண்ணெய் விலை உயருமானால் அதன் சுமை முழுவதும் இந்திய குடிமக்கள் அனைவ ரின் மீது இடியென இறங்கும்.

வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களின் பாதுகாப்பும் மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் ஓரளவு இந்திய அரசு இறங்கியிருந்தபோதும், அனைவரையும் அழைத்து வருவதோ, அவர்க ளது எதிர்கால வேலை வாய்ப்பு என்பதோ மிகவும் சிக்கலான ஒன்றேயாகும்.

வளைகுடா நாடுகளுக்கு நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முட்டை  பெரும ளவு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது உட்பட  இந்திய ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற் பட்டுள்ளது. வளைகுடா போர் இந்திய நல னையும் பெருமளவு பாதிக்கும். இந்த துயர நிலை க்கு காரணம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடாவடியேயாகும். இந்தச் சூழலில் மோடி அரசின் அணுகுமுறை இந்திய நலனுக்கும் எதிராக உள்ளது.