திருவனந்தபுரம்:
மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் (CEU) 2021 ஓபன் சொசைட்டி பரிசு முன்னாள் கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா- வுக்கு வழங்கப்பட்டது. பொது சுகாதாரத்துறை கட்டமைப்பை மேம்படுத்தியதற்காகவும், கோவிட் தொற்றை திறம்பட கையாண்டதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.
இதுவரை இந்த விருது பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜோசப் இ ஸ்டிக்லிட்ஸ், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வெட்லானா அலெக்ஸிவிச், ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது பொதுச்செயலாளர் கோபி அன்னான், செக் குடியரசின் தலைவர் மற்றும் நாடக ஆசிரியர் வக்லவ் ஹவேல் ஆகியபிரபலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1994 இல் நிறுவப்பட்ட இந்த விருது முதலில் தத்துவஞானி சர் கார்ல் பாப்பருக்கு வழங்கப்பட்டது. இந்தியர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதன்முறை.
சனியன்று (ஜுன் 19) காணொளி மூலம் விருது வழங்கும்விழா நடைபெற்றது. நிகழ்வில் பல்கலை கழக தலைவரும் ரெக்டருமான மைக்கேல் இக்னாடிப் கூறுகையில், ‘ஷைலஜா டீச்சரின் உதாரணம் இளம் பெண்களை பொதுச் சேவையில் நுழைய ஊக்குவிக்கும். மேலும் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் கேரளாவின் பதிவு வளரும் நாடுகளுக்கு நம்பிக்கையைத் தருகிறது. CEU-வின் மிக உயர்ந்த விருதை ஷைலஜா டீச்சருக்கு வழங்குவதன் மூலம், பல்கலைக்கழகம் ஒரு பொது ஊழியரையும், பெண் தலைவரையும் அவரது அர்ப்பணிப்புக்காக சிறப்பு செய்கிறது’ என்றார்.விருதினை ஏற்றுக்கொண்டு கே.கே. சைலஜா டீச்சர் பேசுகையில், ‘உலகம் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் அதிகமான மக்கள் தலைவர்களாக மாற வேண்டும் என்றார்.