இஸ்லாமியர்கள் படுகொலையை குறிக்கும் காலிஃப்ளவர் தோட்டம் புகைப்படத்தை பகிர்ந்த அசாம் பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் கைது செய்யப்படுவாரா என சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
அசாம் அமைச்சரவையில் இருக்கும் பாஜக தலைவர் ஒருவர், நமது வரலாற்றில் நடந்த இருண்ட நிகழ்வுகளில் ஒன்றோடு தொடர்புடைய ஒரு பிம்பத்தை வெளிப்படையாகப் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 1989-ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று பீஹாரின் லோகைனில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 116 முஸ்லிம்கள் கொடூரமாக வெட்டப்பட்டும், எரிக்கப்பட்டும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை மறைக்க அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மேல் காலிஃப்ளவர் நடப்பட்டது.
காலிஃப்ளவர் புகைப்படம் வேண்டுமென்றே பதிவிடப்பட்டது, முஸ்லிம்களை மனிதத்தன்மையின்றி நடத்த இந்துத்துவா வெறியர்களுக்கு ஒரு அறைகூவல் விடும் நோக்கம் கொண்டுள்ளதாக இருக்கிறது. "எல்லோரையும் அரவணைப்போம். எல்லோருக்குமான வளர்ச்சி" என பாஜக கூறுகிறது; ஆனால் அதன் தலைவர்களும், நிர்வாகிகளும் மீண்டும் மீண்டும் வெறுப்புப் பேச்சுகள் மூலம் சமூகத்தை பிளவுப்படுத்தும் தீப்பிழம்புகளைத் தூண்டிவிடுகிறார்கள். இதற்கு பாஜக பொறுப்பேற்று, அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதற்காக அமைச்சர் அசோக் சிங்காலை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமா?" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
