குதர்க்கப்புத்தி கொண்டோரால் உலகை இணைக்க முடியாது
“சர்வதேச அளவில் எழும் பிரச்சனைகளுக் கான தீர்வை, உலக நாடுகள் தற்போது இந்தி யாவிடம் கேட்க ஆரம்பித்து இருக்கின்றன. ஏனெனில் ஒருங்கிணைந்த மனித நேயம், சனா தன சிந்தனை நம்மிடம் தான் கொட்டிக் கிடக்கின் றன” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அளந்துவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடை பெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், தேசிய வாதம் காரணமாகவே போர்கள் நடக்கின்றன. எனவே சர்வதேசியவாதம் பற்றி உலகத் தலை வர்கள் விவாதிக்கத் துவங்கிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
சனாதன தர்மம் என்ற வார்த்தையை அடிக்கடி இந்துத்துவாவாதிகள் புல்லரிப்போடு உச்சரிக்கின்றனர். ஆனால் சனாதனம் என்றால், என்னவென்று கூறுவதில்லை. 1903ஆம் ஆண் டில் சனாதனம் தர்மம் குறித்து காசி இந்துக் கல் லூரி பண்டிதர்கள் தயாரித்த பாடநூல் ஒன்றில் சனாதனம் என்றால், வேதங்களை அடிப்படை யாகக் கொண்டது. மனு, நாரதர், யக்ஞவல்கி யர், பாராசரர் ஆகிய நால்வர் எழுதிய ஸ்மிருதி களைக் கொண்டு சட்டநூல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய மனிதநேயம்தான் சனாதனம் என்கிறார்கள். ஆனால் ஒரு மதத்திற்குள் உள்ள மக்களிடையே பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வேறுபாடு காட்டும் ஒரு கருத்தியல் எவ்வாறு உலக மானுடத்திற்கு வழிகாட்ட முடியும்? உதாரணமாக, மனுஸ்மிருதி முழுவ தும் உழைக்கும் மக்களுக்கு எதிரான குப்பைக ளின் தொகுப்பாகவே உள்ளது. இவர்கள் சிலா கிக்கிற மற்ற ஸ்மிருதிகளின் லட்சணமும் இதுவே.
ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது சாதிய கட்டு மானத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமை ப்பு, பெண்களை இழிவுபடுத்துகிற அமைப்பு, உழைப்பை, உழைப்பாளர்களை கீழ் நிலையி லேயே வைப்பதே அவர்கள் நோக்கம். ஆனால் அதனுடைய தலைவர் உலகளாவிய மனித நேயம் குறித்து பேசுகிறார்.
இரண்டாம் உலகப்போரின் போது, தூய இரத்தம் என்று பேசிக் கொண்டு மக்களை கொன் றொழித்த ஹிட்லரை கொண்டாடியவர்கள் இவர்கள். இன்றைக்கும் கூட பாலஸ்தீன மக் களை இரத்தத்தில் மூழ்கடிக்கும் இஸ்ரேல் இன வெறி அரசுடன் கூடிக் குலாவுகிறார்கள்.
மறுபுறத்தில் இந்திய மக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிற அமெரிக்க வல்லா திக்கத்தை இவர்கள் எதிர்த்து பேசுவதில்லை. வேதப் புனிதம், என்று கதையளந்து கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கரசேவை செய்ப வர்கள். ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலுடன் இயங் கும் பாஜக அரசு, தொழிலாளர் நலச் சட்டங்க ளைக் கூட மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் போன்ற மக்காத குப்பையிலிருந்து உருவாக்க முயல்கிறது.
இவர்கள் இந்தியாவில் பன்முக தேசியத்தை மறுத்து மதவெறி அடிப்படையிலான ஒற்றைக் கற்றையான தேசியத்தை முன்வைப்பவர்கள். இவர்கள் சர்வதேசியம் பேசுவது கேலிக்கூத்தானது.
